Tuesday, March 1, 2016

சுரேஷ் பிரதீப்,சிவராஜ்

அன்புடன் ஆசிரியருக்கு

                                 விடுப்பு முடிந்து  செவ்வாய்க்கிழமை  அலுவலகம்  சென்றேன்.  அன்றிரவு  ஏழாம்  உலகம்  படித்து  முடித்திருந்தேன். முதன்முறையாக  பத்து நாட்களுக்கு  மேல்  விடுப்பு  எடுத்ததால்  ஒரு சிறிய  தடுமாற்றம்  இருக்கிறதென்றே நினைத்திருந்தேன்.  ஆனால்  அது அப்படியல்ல  என இப்போது  புரிகிறது.
        ஏழாம்  உலகத்தை  மிக  விரைவாக  படிக்க  முடிந்தது. 'நாரோயிலு' மொழியும் நன்றாக  பழகிவிட்டது. முத்தம்மை அறிமுகமாகும்  இடமே  மனதை  அறைந்துவிட்டது. அப்போதே ஏழாம்  உலகம்  என்னை  வெளியே  தூக்கி  எறிந்துவிட்டதோ எனப்  பயந்தேன். ஆனால்  மெல்ல மெல்ல  என்னை  உள்ளிழுத்துக்  கொண்டது.
       பின்பு படிக்கட்டுகளில்  உட்கார்ந்து  ராமப்பனுடனும் குய்யனுடனும் எருக்குவுடனும் ரஜனிகாந்துடனும் நானும்   சிரித்துக்  கொண்டிருந்தேன்.  ஒரே ஒரு குற்றவுணர்வு  அல்லது  ஆறுதல்  அவர்களின்  வலி எதுவும்  எனக்கு  கிடையாது  என்பதே.
      குருவி  ராமப்பனை கட்டிக்  கொண்டு  அழுகையில்  விக்கித்துப் போய்விட்டேன். குழந்தையை தொடாமலேயே பிரியும் தொரப்பன், 'ஒத்த வெரலு' எனக் கதறும் முத்தம்மை, மலவண்டியில்  முறிந்து கிடக்கும் எருக்கு என நெஞ்சை அடைக்க வைத்துவிட்டது ஏழாம் உலகம்.
   போத்திவேலுவுக்கு பனிவிழும் மலர் வனம்  நினைவிலெழுவது முதல் ஒரு சித்தரிப்பு  கூட  அடர்வு  குறைந்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரின் ஆழ்மனதிலும் இந்த  ஏழாம்  உலகம்  தான் உறைந்திருக்கிறது என்ற  எண்ணத்தை  ஒவ்வொரு  அத்தியாயமும்  நுணுக்கமாக  விதைத்துவிட்டு முன் சென்று  விடுகிறது.  இப்போது  பகிர்ந்ததனால் சற்று  ஆறுதலடைகிறேன்.
அன்புடன்

சுரேஷ் பிரதீப்


அன்புள்ள ஜெ
ஏழாம் உலகம் நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். மனிதவாழ்க்கையின் கீழ்மையின் எல்லையைச் சொல்லும் நாவல் என்ற மனச்சித்திரம் எனக்கு அதை வாசிக்கும் முன்னால் இருந்தது. வாசித்து முடித்தபோது அது பேசுவதெல்லாம் மனித மகத்துவத்தைத்தான் என்று தோன்றத்தொடங்கியது
எப்படி இருந்தாலும் மனிதன் மிருகமாக ஆவதில்லை என்பதைத்தான் ஏழாம் உலகம் காட்டுகிறது. கருணை, அறம் எல்லாம் அவர்களிடம் இருக்கிறது. மிருகங்களாக நடத்தும் சமூகத்திற்கு எதிராக தங்கள் அன்பாலும் கருணையாலும் அவர்கள் கலகம் செய்துகொண்டே இருக்கிறார்கள்.
போத்திவேலுப்பண்டாரம் தங்களை திருமணத்திற்கு அழைக்கவில்லை என்பதை உணர்ந்து அந்த உருப்படிகள் கொள்ளும் மௌனம் மனதை தாக்கியது. அது அவர்களை மிருகங்களாக நினைக்கும் சமூகத்தை அவர்கள் மிக அருகே காணும் காட்சி, அந்த அவமதிப்புக்கு அவர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். குய்யனுக்கு விருந்து கொடுப்பதன் வழியாக
குய்யன் புன்னகைத்தான் என்று முடியும் ஏழாம் உலகம் நாவல் சொல்லும் தரிசனமே இதுதான்
சிவராஜ் எஸ்

Tuesday, November 24, 2015

குக்குறுவான், ராஜன் விமர்சனக்கடிதங்கள்அன்புள்ள ஜெ

எழுதவேண்டும் என நினைத்து நீண்டகாலமாகத் தவிர்த்துவந்தபின் இப்போது எழுதுகிறேன். இன்று மீண்டும் ஏழாம் உலகத்தை வாசித்து முடித்தேன். ஒரு பாவமன்னிப்பு சங்கீர்த்தனம் போன்ற நாவல் என்று சொல்வேன். வாழ்க்கைக்கும் கீழே உள்ள மக்கள். ஆனால் அங்கும் உள்ள அன்பும் பாசமும் தன்மதிப்பும்

நகைச்சுவையைப்பற்றிச் சொல்லவேண்டியதே இல்லை. அகமது ‘வெறும் முப்பதுகோடி ரூவா’ என்று சொல்லுமிடத்தில் வெடித்துச்சிரித்தேன். ‘நிரபராதியாக்கும்’ என்று குய்யன் சொல்லுமிடமும் அப்படியே. ஆனால் பின்னர் யோசித்துப்பார்த்தபோது அவை எவ்வளவு ஆழமான அங்கதம் என்று தெரிந்தது

ஆனால் இந்நாவலை மீண்டும் வாசிக்கும்போது வரும் எண்ணம் இதிலுள்ள மிகவும் நுட்பமான சில இடங்கள். பனிவிழும் மலர்வனம் என்ற பாட்டு ஏன் வருகிறது. போத்திவேலுப்பண்டாரம் ஏன் வானத்தைப்பார்க்கிறார்?

அவற்றை தொட்டு வாசிக்கும்போது நாவல் மேலும் விரிவடைகிறது என நினைக்கிறேன்

ராஜன் கருணாகரன்அன்புடன் ஆசானுக்கு,

இந்த மின்னஞ்சலுக்கு உளஎழுச்சி மட்டுமே காரணம். இப்போது ஏழாம் உலகம் படித்து முடித்தேன்.

முத்தம்மையை அவளின் மகனே புணர , வேண்டாம் என அலறும் கணம் உறுத்தி கொண்டே இருக்கிறது. ஒரு ஆள் போககூடிய குழாயில்,ஊர்ந்து போகும் போது ,முகம் இருக்கும் திசையில் நீர் நிரம்ப , எதுவும் செய்ய முடியாமல் ,திணறி இறப்பதை போல அந்த கணம் .

இது கடைசியில் தோன்றியது, மாங்கண்டி சாமி "உங்களை பிரிந்திருக்க முடியாது " என பொருள்பட , கண்கள் நெருப்பாய் ஒளிர, பாடும் போது, அது நீங்கள்தான் என்றும் , மாங்கண்டி சாமி கையும் ,காலும் இல்லாத கதாபாத்திரமாக சித்தரிக்கபட்டதின் அர்த்தம் புரிந்ததாகவும் தோன்றியது.

ஆனால் , மாங்கண்டி சாமியின்  மாறபுன்னகை , கிருஷ்ணனிடம் இருப்பது போல, அது ஏதோ செய்கிறது. அங்கே நிற்க ,அவர்கள் எத்தனை தூரம் பயனித்திருப்பார்கள் ?

அன்புடன்,
குக்குருவான்
 

Thursday, October 30, 2014

மங்கை- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,


மீள வழியில்லாத வாழ்க்கை விதிக்கப்பட்ட மனிதர்களின் அவலம் - முதுகு தண்டு சில்லிட்டு போனது. ஒரு நடுக்கத்துடனேயே படித்து முடித்தேன். இதோ நானும் இருக்கிறேன் என்ற விமர்சனம் இல்லை. குறையுடலிகளின் அவலத்தால் அலைகழிப்பட்ட ஒரு வாசக கடிதம்.

கதையில் குறிபிடப்படும் சம்பவங்கள் நினைவுக்கு வரும் போது எதன் மீதாவது நம்பிக்கை வருமா என்று தெரியவில்லை. திருவந்திரம் கோயிலின் கருவறை எச்சிலும், பழனி படிகளில் சிதறி கிடக்கும் உருப்படிகளும், எதையும் நம்பவோ புரிந்து கொள்ளவோ விடபோவதில்லை. உருப்படிகள் உழலும் மலமும், வியர்வையும், வீச்சமும் இன்னும் சுற்றி வருகிறது. நாமாக ஒரு மிஸ்டிகல் அனுபவத்தை கற்பனை செய்து கொண்டு, இந்த இடம் புனிதம், அந்த கோவிலில் அதிர்வு அதிகம் என்று சொல்லிக்கொண்டு  திரிவதை தவிர வேறேதாவது சாத்தியமா? ஏதோ சிலராவது நியாய அநியாயம் பார்த்து வாழ்வதற்கு இப்படிப்பட்ட வாழ்வின் சாத்திய கூறு பற்றிய அச்சம்தான் காரணமோ என்று நினைக்க தோன்றுகிறது. இரந்து வாழ்பவர்களை மட்டுமல்ல, சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் நிறைய பேர் இப்படிதானே choice ஏ இல்லாமல் இருக்கிறார்கள்.ஆனால் ஒன்று. Old man and the sea Santiago கிழவனுக்கு அப்புறம் இப்படியொரு நிலையிலும் வாழ்வின் சில தருணங்களையாவது கொண்டாட்டத்துடன் கடப்பவர்கள் குய்யனும், ராமப்பனும், எருக்கும், மற்றவர்களும் தான். பணம் பண்ணும் பண்டாரம் எப்போதும் ஒரு அச்சத்துடன் நிலையழிந்து கொண்டே இருக்கிறார். வடிவம்மை வீட்டை விட்டு ஓடி, nemesis has caught up with him என்று நினைக்க வைக்கிறாள். ஆனால் அது பண்டாரத்துக்கு உறைபதாக  தெரியவில்லை. முத்தம்மையை பார்க்க விரும்பும் போத்தி கருவறையில் இருப்பதாக நாம் நம்பும் கடவுளிடம் இருந்து வெகு தொலைவில்.

சாகவுகள் கேட்க வேண்டாம் - ஏதோ ஒரு இசத்தின் பேரில் எதையும் விற்கலாம், வாங்கலாம் 'ஒருத்தன் அடிதொண்டயில நிதானமா பேசினாலே அவன் புத்திசாலின்னு ஜனம் நினைக்கும்’.  Baying for blood என்பதன் மூர்க்கம் கன்னியாஸ்த்ரிகளாக, மருத்துவர்களாக, காவலர்களாக கண் முன்னே.இனி இழக்க ஒன்றும் இல்லாததால் கொஞ்சமாவது மகிழ்ச்சியாக இருப்பது உருப்படிகள் தான். அவர்களின் கேலியும் கிண்டலுமான மொழி - அஹமதுகுட்டி law and procedure ருக்கு இடையில் உள்ள வேறுபாடு சொல்லும்போதும், தொடாமல் பீ மலரும் என்று குய்யன் எச பாட்டு பாடும்போதும், குருவியின் குரலில் பேசும் சிம்ம குரலோனும் - வெடித்து சிரித்து விட்டேன். இதை விட தீர்க்கமாக, நாகரிகமானவர்கள் என்று சொல்லிகொள்ளும் நம் முகத்தில் காறி உமிழ முடியுமா என்று தெரியவில்லை.கண்களை மூடி கொண்டு நாம் செய்யும் அறம் பிறழ்ந்த சமரசங்களின் போது எந்த நட்சத்திரம் நமக்கு அசௌகர்யமும் உறுத்தலும் தரப்போகிறது?


அன்புடன்

Thursday, July 24, 2014

அருண்மொழி வர்மன் விமர்சனம்

வீன இலக்கியங்களுடனான தொடர்பு எனக்கு நெருக்கமாவதில் ஜெயமோகனின் பங்கு பெருமளவானது. ஆனால் அவரது புத்தகங்களை என்னால் பெருமளாவு அணுகமுடியவில்லை. முதலில் விஷ்ணுபுரம் வாசிக்க தொடங்கினேன். ஏனோ என்னால் அதில் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. இதே நிலை தான் சாருவின் ஸீரோ டிகிரிக்கும் ஏற்பட்டதால் அது நவீன இலக்கியங்களுடன் எனக்கு அந்த நேரத்தில் போதிய பயிற்சி இல்லாமல் இருந்தது காரணமாக இருக்கலாம். ஜெயமோகனின் எழுத்துக்களில் அவர் இலக்கியமுன்னோடிகள் வரிசை என்று எழுதிய சில நூல்களை வாசித்திருக்கின்றேன். சில முக்கியமான எழுத்தாளர்களை அறிந்துகொள்ள அந்நூல்கள் பெருமளவு உதவியுள்ளன.
இது தவிர ஜெயமோகனின் எழுத்துக்களை நான் தவிர்த்ததற்கு ஜெயமோகன் மீது அந்நாட்களில் இருந்த சில குற்றசாட்டுகளிம் காரணமாக இருக்கலாம். அதாவது மனோரமாவில் வந்த ஒரு இசை விமர்சனத்தை அவர் திருடியதாக வந்த குற்றசாட்டு, வேறு பெயர்களில் சக எழுத்தாளர்களை அவதூறு செய்யும் எழுத்துக்கள் என்று அந்த பட்டியல் தொடரும். இன்று “ஆசிரியன் இறந்துவிட்டான்” என்ற கருத்தை புரிந்து என்று அதை ஓரளவு பின்பற்ற முயன்றாலும் சில நேரங்களில் என்னை அது தடுக்க செய்கின்றது. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி அண்மையில் வாசித்த ஜெயமோகனின் ஏழாம் உலகம் மனதளவில் பெரு மாற்றங்களையும் தாக்கங்களையும் தந்தது.
இந்த கதையில் நம்மை சூழ உள்ள ஆனால் நாம் பார்க்காத அல்லது கவனத்தில் கொள்ளாத ஒரு உலகத்தை பற்றி சொல்கிறார் ஜெயமோகன். விஸ்ணுபுரம் போன்ற ஒரு கற்பனை தளமாக இல்லாமல் ரத்தமும் சதையுமாக நம்மை சூழ வாழும் ஒரு உலகே இங்கு கருப்பொருள் ஆக்கப்படுகின்றது. கதையில் வரும் பிரதான கதாபாத்திரமான பண்டாரம் உட்பட பல முக்கிய பாத்திரங்கள் உடற்குறைபாடுகளுடன் பிறந்தவர்களை வேறு உடற்குறைபாடுகளுடன் பிறந்தவர்களுடன் உறவு கொள்ளச்செய்து அதன் மூலம் மேலும் உடற்குறைவான மனிதர்களை தோற்றுவித்து வியாபாரம் செய்கின்றார்கள். இந்த உடற்குறைவானவர்களை பிச்சை எடுக்க செய்வது இவர்களது பிரதான தொழில். அத்துடன் அவர்களின் உடலில் ஒழுங்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் உறுப்புகளை எடுப்பதற்காக காசுக்காக விற்பது (தொரப்பன் என்ற கதாபாத்திரம் இப்படியாக விற்கப்படுகின்றது), அதிகாரிகளிலிடம் இருந்து சலுகைகளை பெறுவதற்காக பெண்களை பாலியல் தேவைகளுக்காக உபயோகிப்பது (எருக்கை பாத்திரம்) என்று பணம் உழைப்பதற்கான அனைத்து வழிகளிலும் அவர்கள் உபயோகிக்கப்படுகிறார்கள். அதே நேரம் தம் சக மனிதர்களிடமும், குடும்பத்தார்களிடமும் பாசமுள்ளவர்களாக இருக்கும் இவர்கள் இந்த குறை உடல் மனிதர்களை எந்த ஒரு விதத்திலும் உயிர்களாகவே மதிப்பதில்லை. எல்லா குறை உடலிகளும் “உருப்படிகள்” என்றே அழைக்கப்படுகின்றனர். ஆனால் அந்த உருப்படிகள் இவர்களுடன் எஜமான விசுவாசத்துடன் (நம்ம தமிழ் சினிமாவின் எம்ஜிஆர், ரஜினி, சரத்குமார் போல) இருக்கின்றானர். கதையில் ஒரு சந்தர்ப்பத்தில் பண்டாரத்தின் மகளின் திருமணம் தொடர்பாக சிக்கல்கள் எழும்போது தமக்கு நேர்ந்த சொந்த பிரச்சனை போன்று எல்லா குறை உடலிகளும் ஆலோசனை சொல்கின்றனர்.
இதுபோல கதையில் இந்த குறை உடலிகளின் இயல்பை காட்டும் ஒரு சந்தர்ப்பம் வருகின்றது. போலீஸ் அதிகாரியுடன் உறவு கொள்வதற்காக எருக்கம்மை என்பவள் காவல் நிலையம் கொண்டு செல்லப்படுகின்றாள். அங்கு உடல் ரீதியாக பாதிக்கப்பட்டு மருத்துவமனை கொண்டுசெல்லப்படும் அவளை ஆதரவற்ற பெண்கள் மடத்துக்கு கொண்டு செல்ல கன்னியாஸ்திரீகள் முயல்கின்றனர். இந்நேரத்தில் பண்டாரத்தின் உதவியாளனான பெருமாள என்பவன் ஆஸ்பத்திரி சென்று அவள் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறை கட்டி அவளை தனது மனைவி என்று சொல்லி மீண்டும் பண்டாரத்திடம் கூட்டிவருகின்றான். இதன் பின்வரும் நேரங்களில் எல்லாம் அவள் பெருமாளை கணவனாகவே பாவித்து கதைப்பது அதை கேட்கும்போதெல்லாம் பெருமாள் அவளை தாக்குவதுமாக வரும் கட்டங்கள் சிரிப்பை தந்தாலும் தீவிர சிந்தனைக்கு உள்ளாக்கப்படவேண்டியவை. ஆடுகள் தாம் ஆடுகள் என்று உணரும்போது மந்தையைவிட்டு விட்டு வெளியேறுகின்றன என்று எங்கோ படித்தது ஞாபகம் வருகின்றது. இத்தனைக்கும் எருக்கு அந்த மருத்துவமனையைவிட்டு அழைத்துவரப்படும்போது மலம் அள்ளும் வண்டியில் வைத்துதான் அழைத்து வரப்படுகின்றாள். பொதுவாக சிலருக்கு இயல்பிலேயே இருக்கும் அடங்கிபோகும் மனநிலைதான் எல்லா உரிமை மீறல்களுக்கும் அடிப்படை என்ற வாதத்தை எவ்வளவுக்கு இந்த சந்தர்ப்பத்துடன் தொடர்புபடுத்தலாம் என்று தெரியவில்லை.
கதையில் வருகின்ற பண்டாரம் என்ற பிரதான கதாபாத்திரம் அச்சொட்டாக ஒரு சராசரி மனிதனின் மனநிலையில் வார்க்கப்பட்டிருக்கின்றது. ஒரு பொது நீதியில் அதாவது சமுதாய நீதியில் வைத்து பார்க்கும்போது இவர் செய்வது எவ்வளவு அநியாயம் என்பது புரியும். ஆனால் தனது மூத்த மகளின் திருமணத்தை முன்வைத்து எழும் பிரச்சனைகளின்போதும், அவளுக்கு செய்த நகைகளை எடுத்துக்கொண்டு இரண்டாம் மகள் வீட்டைவிட்டு வெளியேறும்போதும் மீண்டும் மீண்டும் அவர் “நான் யாருக்கென்ன பாவம் செய்தேன், ஏன் தெய்வம் என்னை இப்படி சோதிக்குது” என்று புலம்புவதும் பல சந்தர்ப்பங்களில் முருகா முருகா என்றூ ஜெபிப்பதும் நல்ல அவதானிப்பு. என் சொந்த அனுபவத்தில் சமூக விரோத செயல்களில் அதிகம் ஈடுபடுபவர்களும், மிகப்பெரிய ஏமாற்றுக்காரர்களும் பக்திமான்களாக இருப்பதை அல்லது அப்படி நடிப்பதை கண்டிருக்கின்றேன். சமூக இயகத்தில் தமது பங்களிப்பு பற்றி எழும் தாழ்வு மனப்பான்மையே இவர்களை இப்படியான புனிதர் தோற்றத்தை புனைய வைக்கின்றதோ. பண்டாரம் கோயிலுக்கு செல்கின்றார். அங்கு அர்ச்சகராக உள்ள போத்தி இறைவனை அலங்காரம் செய்யும்போது வெத்திலை சாறை இறைவன் விக்கிரகத்தின் அடியில் துப்புகின்றார். அது வழமை என்றும் சொல்கிறார். பின்னர் மது அருந்திய நிலையில் பூஜை செய்கின்றார். ஜோதிடம் சொல்கின்றேன் என்ற பெயரில் அவர்கள் வந்த வாகனத்தில் இருக்கும் அலுவலக பெயரை கவனித்து, நீங்கள் பொருளியல் துறையை சேர்ந்தவர்கள் என்கிறார். பத்து ரூபாய் தட்சணை அதிகமோ என்று யோசித்தவர்கள் இரண்டு நூறு ரூபாய் தாள்களை வைத்துவிட்டு வெளியேறுகின்றனர். அர்ச்சகர்கள் பற்றி எழுப்பப்பட்டிருக்கும் சமூக கட்டமைப்பு தூள் தூளாகின்றது. என் அனுபவத்தில் மது அருந்தும், புலால் உண்ணும் அர்ச்சகர்களை கண்டிருக்கின்றேன். அது அவர்களின் தனிப்பட்ட உரிமை, வாழ்க்கைமுறை என்று ஏற்றுக்கொள்ளுகின்ற அதே நேரம் அர்ச்சகர் என்பதற்காக சமூகம் தருகின்ற எல்லா சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு இவற்றை செய்வதை நான் 100% எதிர்க்கின்றேன். சிறு வயதில் எம் வீட்டிற்கு வந்த ஒரு ஜோதிடர் என் தாயிடம் 10க்குள் ஒரு இலக்கதை சொல்லும்படி கேட்டார். அம்மா ஒரு இலக்கத்தை சொல்ல வீட்டு வாசலின் வலது புறத்தில் அந்த இலக்கம் எழுதப்பட்டிருக்கும் என்றார். இப்படி குடும்ப உறுப்பினர் ஒன்றிரண்டு பேரை கேட்டு அந்த இலக்கங்களை எல்லாம் எம் வளவில் காட்டி எம்மை பெரும் ஆச்சர்யங்களில் ஆழ்த்தினார். அவரிடம் ஒரு சடங்கு செய்வதென்று எமது வீட்டில் ஏற்பாடானது. சிறிது நேரத்தில் அப்பா வந்தவுடம் பார்த்தால் 10க்குற்பட்ட எல்லா இலக்கங்களும் எம் வீட்டு முற்றத்தில் வெவ்வேறு இடங்களில் தெளிவாக எழுதப்பட்டிருந்தன. இந்த கதையில் வரும் போத்தி என்ற அர்ச்சகர் முத்தம்மை என்ற குறை உடல் கொண்ட பெண்ணை புணர வேண்டும் என்ற தன் அவாவை பண்டாரத்திடம் வெளிப்படுத்துகிறார். சமுதாயத்துக்காக தான் புனைந்த உத்தமன் வேடம் கலையுமோ என்ற பயத்தில் ஒரு தளம்பல் நிலையிலேயே அவரது வேண்டுதல் வைக்கபடுகின்றது.
கதையில் வரும் அகமதுகுட்டி என்ற பாத்திரம் மிகப்பெரிய அறிவுஜீவியாக முன்வைக்கபடுகின்றது. தீர்க்கமான அகமதுகுட்டியின் யோசனைகள் கதையின் பிற்பகுதியில் பெரும் துணை செய்கின்றன. அதேபோல பண்டாரம் போன்ற சக வியாபாரியாக வரும் கொச்சனும் புத்திசாலியாக காட்டப்படுகின்றான். கொச்சன் கதாபாத்திரத்தின் அறிமுகத்தில் அவர் புத்தகம் வாசித்துக்கொண்டிருப்பதாக காட்டப்படுவது அவர் ஒரு படிப்பாளி என்பதற்கான க்ளிஷே என்றே நினக்கின்றேன். கதையின்படி இவர்கள் இரண்டுபேரும் மலையாளிகள். இப்படியான சந்தர்ப்பங்கள் தாம் ஜெயமோகனை இந்துத்துவவாதி, தமிழ்நாட்டை தொடர்ந்து நக்கலடிப்பவர் என்கிற விமர்சனங்களுக்கு தொடர்ந்து உள்ளாக்குகின்றன என்று நினைக்கின்றேன்.
தொடர்ச்சியான அதிர்ச்சியூட்டல்களூடாக செல்கின்ற கதை இறுதியில் சமூக கட்டமைப்பு பற்றியும், மனிதாபிமானம் பற்றியும் பரிணாம வளார்ச்சியின் உச்சகட்டத்தில் இருப்பவன் மனிதன் என்ற கற்பிதம் பற்றியும் மிகப்பெரும் கேள்விகளுடன் நிறைவடைகின்றது. குறை உடலியான முத்தம்மை பெற்ற ரசனிகாந்த் என்ற குழந்தையை விற்ற பின்னர் அவள் மூலமாக மீண்டுமொரு குறை உடலியை உற்பத்தி செய்யும் நோக்குடன், இன்னொரு குறை உடலிக்கு (கூனன்) போதையூட்டி முத்தம்மையுடன் புணர தூண்டுகிறார் பெருமாள. அப்போது குறை உடலியின் கையில் இருக்கும் ஒற்றை விரலின் மூலம் அது தனக்கு பிறந்த முதலாவது குழந்தை என்று அடையாளம் கண்ட முத்தம்மை கதறுகிறாள். அதையும்தாண்டி அவள் வல்லுறவுக்கு உள்ளாக்கபடுகின்றாள். ஒரு இனம் மீது இன்னொரு இனம் செய்யும் ஆக்கிரமிப்பு, வன்முறை, வல்லுறவு பற்றி மிக பெருமளவில் கதைக்கபடுகின்றது. ஆனால் ஏன் ஒரு இனதுக்குள்ளேயே நடைபெறும் இந்த அத்துமீறல்கள் பேசப்படுவதில்லை என்கிற கேள்விகளை நிறைத்துவிட்டு கதை நிறைவடைகின்றது.
(இந்தக் கட்டுரையில் குறை உடலி, உருப்படி போன்ற சொற்கள் ஒரு புரிதலுக்காகவும், கதையுடன் அணுக்கமாக செல்வதற்காகவுமே உபயோகிக்கப்பட்டன. ஆயினும் அதற்காக வருத்தம் தெரிவிக்கின்றேன்.) 

வத்ராயிருப்பு சுந்தர் விமர்சனம்

 என்ற தலைப்பைப் பார்க்கும் போதே உள்ளே என்னவோ செய்தது. புத்தகம் வாங்கி ஆறு மாதங்களுக்கு மேலாகியும் ஏனோ அதைப் படிக்கவே தோன்றாமலிருந்தது. படிக்கத் தொடங்கியதும், அட்டையின் கருமை உள்ளிறங்கி, நம்மை அந்த இருள் உலகத்திற்கு இழுத்துச் செல்கின்றன நிகழும் சம்பவங்கள்.
சபரிமலைக்கு முதன்முதலாகச் சென்றபோது “அழுதை ஏறும் போது அழாதவர்களும் அழுவார்கள்” என்று என்னுடைய குருசாமி சொல்லக் கேட்டிருக்கிறேன். மனோ பலத்தைச் சோதிக்கும் மலையேற்றங்கள் அழுதையும் கரியும். புறம் மறுத்து வலி மறுத்து மதம் கடவுள் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட பிரபஞ்சத்தை இயக்கும் அருவச் சக்தியையே நினைத்து ஒரு மோன நிலையில் பெரிய பாதையில் நடந்து சென்ற எட்டு வருடங்களிலும் – கடந்து செல்ல முடியாத – உடல் கடந்தும் மனம் நிலை கொண்ட இடம் – அழுதை ஏற்றமும் கரிமலை ஏற்றமும் – அந்த ஏற்றங்களில் நிறைந்து சரிந்திருக்கும் ஏழாம் உலகத்தின் மனிதர்கள். புகழ்பெற்ற ஸ்தலங்களிலெல்லாம் அவர்கள் நீக்கமற எங்கும் நிறைந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் சாதாரண மனிதர்களுக்கே வலியின் உச்சத்தைக் காட்டும் அவ்வேற்றங்களில் அவர்கள் மிகவும் சாதாரணமாக பாதையோரத்தில் கையேந்திக்கொண்டு கிடப்பது அசாதாரணமாக எனக்கு அப்போது தோன்றிற்று. 

அவர்களது இறைஞ்சல்களிலும், கையேந்துதல்களிலும் தெரிந்த இயந்திரத் தன்மை உறுத்தியது. ‘இவர்கள் எப்படி இவர்களாகவே இம்மாதிரி இடங்களுக்கு வந்திருக்க முடியும்? இருள் சூழ்ந்ததும் எங்கு செல்வார்கள்? சபரிமலை யாத்திரை காலம் முடிந்ததும் எங்கு செல்வார்கள்? எப்படிச் செல்வார்கள்?” என்று மனதைப் பல கேள்விகள் குடையும். அப்படி மனதுக்குள் எழுந்த பல கேள்விகளுக்கு மனமே மேலோட்டமாக விடையைச் சொல்லிக் கொண்டிருந்தாலும் “இதோ பார் நிதர்சனமாக” என்று இழுத்து அதன் விஸ்வரூபத்தை காட்டியிருக்கிறது ஏழாம் உலகம்.
Heal the World என்ற மைக்கேல் ஜாக்ஸனின் பாடலைப் கேட்டிருக்/பார்த்திருக்-கிறீர்களா? ஒவ்வொரு முறை அழுதை ஏறும்போது அதுவரை வாயில் புரண்ட சரணங்கள் நின்று இப்பாடலும் ஏற்றத்தின் ஓரங்களில் கிடக்கும் ஏழாம் உலக மனிதர்களையும் பொருத்திப் பார்த்து மனம் உழலும். ஏற்றம் ஏறி முடிக்கும் வரை சிந்தனைகள் இயக்கமற்று இருக்கும். அப்படிக் கடந்து செல்லாமல் அவர்களோடு அமர வைத்து அவர்களது வாழ்வை வாழச் செய்த பயங்கர அனுபவத்தை ஏழாம் உலகம் வாசகனுக்குத் தருகிறது.
இங்கு சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரியைப் பற்றியும் குறிப்பிட (கவனிக்க: ஒப்பிட அல்ல) விரும்புகிறேன். ஸீரோ டிகிரிக்கும் ஏழாம் உலகத்திற்கும் எனக்குப் பட்ட முக்கியமான ஒற்றுமை – “வலி”. ஸீரோ டிகிரியைப் படிக்கும் போது, இருட்டறையில் தள்ளப்பட்டு கண் மண் தெரியாமல் யாராரோ அடித்ததைப் போன்ற வலி எழுந்தது. 

ஏழாம் உலகத்தில் அடித்து நொறுக்கப்பட்டு, முடக்கப்பட்ட காயங்களுடன், பேசா மடந்தைகளாக சமூகத்தின் அடித் தட்டிற்கும் கீழே -மனிதர்களாகவே பாவிக்கப்படாத – பாவப் பட்டவர்களாக – தன் மீதே கூட தான் உரிமை கொண்டாட முடியாத – அவல மனிதர்களிடையே வாழ்ந்த வலியை உணர முடிந்தது. இதில் கொடுமையின் உச்சம் அவர்களைச் சுற்றியிருக்கும் வியாபாரிகள் செய்யும் குரூரங்கள் கூட இல்லை. இந்தக் குரூரத்திற்குப் பலியாகும் இம்மனிதர்கள் – அவர்களது கதியே அதுதான் என்று ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை தொக்கி நிற்கும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடத்தி வருவதுதான். அவர்களது மனதில் வன்மம் என்ற ஒரு உணர்வே இல்லாததுபோல் மரத்துப்போய் இருப்பதுதான் நெஞ்சை அறுக்கிறது.
ஒவ்வொரு முறையும் அவர்களை நாம் தாண்டிப் போவோம். காசு போட்டு – சில சமயம் முகம் திருப்பிக்கொண்டு – அவர்களது “அம்மாஆஆ”வும் “அய்யா சாமிஈஈஈ”யும் நம் புலன்களால் புறக்கணிக்கப்பட்டு.
கசாப்புக் கடைக்காரன் இறைச்சியைத் துண்டு போடும் போது சலனமற்ற அந்த முகத்தைப் பார்த்திருக்கிறீர்களா?அவனுக்கு ஆடுகளும், புல்லும் ஒன்றுதான். ஆடுகளைக் கொல்லும்போதும் அறுக்கும் போதும் அது அவன் மனதில் எவ்விதச் சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை. அவற்றை அவன் உயிருள்ள பிராணியாகவே பாவிப்பதில்லை. அன்பு பாராட்டுவதில்லை. வாளை இறக்கியதும் துண்டான தலை தனியே கிடக்க, உடல் தள்ளாடித் தள்ளாடி விழுந்து துடித்து ஓயும். ரத்தம் பீறிட்டு அடிக்கும். அவன் அதைப் பாத்திரத்தில் பிடித்து, தோலுரித்து கூறுபோட்டு கம்பியில் தொங்கவிடும் அனைத்துச் செயல்களும் இயந்திர கதியாக இருக்குமேயொழிய எந்தவித உணர்வுகளுக்கும் அவற்றில் இடமில்லை. ஆனால் வீட்டுக்குள் அவன் ஒரு மனிதன். அவனுக்கும் பாசம், நேசம், குடும்பம், குழந்தைகள் என்று உண்டு. காமம் உண்டு; காதல் உண்டு; கூடலும் ஊடலும் உண்டு. பிள்ளைகள் தூங்கும்போது பார்த்து நெகிழும் இதயம் உண்டு. வலி உண்டு. ஆனால் வாசல்படி தாண்டி விட்டால் அவன் வேறு மனிதன். கோழியின் படபடக்கும் இறக்கைகளைச் சட்டை செய்யாது கழுத்தைத் திருகிக் கொல்லும்போது அது குழம்பாகவோ கறியாகவோ காசாகவோ அவன் மனதில் மாறிக் கொண்டேயிருக்குமே தவிர உயிர் வதையோ வலியோ அல்ல. இந்த நுட்பமான மனநிலையை அற்புதமாக பண்டாரம் என்ற பாத்திரத்தின் மூலம் ஏழாம் உலகத்தில் விவரித்திருக்கிறார் ஜெயமோகன்.
அங்கஹீன மனிதர்களைப் பிச்சையெடுக்க வைத்து பணம் சம்பாதிக்கும் அந்தப் பண்டாரத்தை ஒரு விதத்தில் என்னால் கசாப்புக் கடைக்காரனோடு ஒப்பு நோக்க முடிகிறது. 

கதையில் வரும் பிரதான வியாபாரியான பண்டாரத்தைப் பொருத்தவரை, அந்தக் குறை மனிதர்கள் அனைவரும் ‘வியாபாரப் பண்டங்கள்’. பண்டாரத்தின் பாஷையில் ‘உருப்படிகள்’. அந்தக்காலத்தில் கிராமங்களில் சலவைத் தொழிலாளர்கள் வீடு வீடாகப் போய் ‘உருப்படிகளை’ எண்ணி எடுத்துக்கொண்டு சலவை செய்து தரும்போது வீட்டுக்காரர்கள் ‘உருப்படிகளை’ எண்ணிச் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு கூலி கொடுப்பது வழக்கம். இந்தக் கதையின் உருப்படிகள் ரத்தமும் சதையுமுள்ள மனிதர்கள். காலோ கையோ கண்ணோ இல்லாத உடற் குறைபாடுள்ள மனிதர்கள். அவர்களைப் பண்டாரமும் அவரைப் போல அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் – கசாப்புக் கடைக் காரனைப் போல – எவ்வித உறுத்தல்களும் உணர்வுகளும் இன்றிக் கையாளுவதும், நடைபெறும் கொடூரச் சித்திரவதைகளும், நெஞ்சைப் பதறச் செய்கின்றன. 

‘இம்மாதிரி அரக்க மனிதர்கள் இருக்கிறார்களா?’ என்று மனம் கேள்வி கேட்டுக்கொண்டு, நம் சொந்த அனுபவங்களை ஒப்புமைப் படுத்திப் பார்க்கும் போது ‘ஆமாம். இருக்கிறார்கள்’ என்று பதிலும் சொல்லிக்கொண்டு பதட்டத்துடன் படிக்கிறது.
நாவலைப் படிக்க நிறையவே மனோதைரியம் வேண்டும். கதையைப் படிக்கும்போது அதில் ஒன்றிப் போகச் செய்து கதாசிரியனை மறக்கடிக்கும் எழுத்து நல்ல எழுத்து. ஏழாம் உலகம் நல்லெழுத்துகளால் எழுதப்பட்டு ஜெயமோகனைச் சிந்தனையிலிருந்து காணாமல் போக்குகிறது.
‘உருப்படிகளின்’ உலகத்தில் நாம் செய்யும் அதே புறக்கணிப்பை அவர்கள் நமக்குச் செய்கிறார்கள். அவர்களது உலகம் தனியாக இயங்குகிறது. எந்தவித எதிர்ப்புகளும் இல்லாமல் உத்தரவுக்குக் கீழ்ப்பட்டு நடக்கும் பிராணிகளைப் போல – வதைபடுகிறார்கள்.
மகாநதி திரைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் மனம் “அய்யோ” என்று அலறி பதறும். நமக்கு இந்நிலை வந்துவிடக் கூடாது என்று தன்னிச்சையாக இறைவனை நினைத்துக் கொள்ள வைத்த படம் அது. ஆனால் ஏழாம் உலகத்தை வாசித்தபின்பு முகத்தில் அறையும் நிஜம் நம் சமூகத்தின் மீதிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் சிதறடித்து எள்ளி நகையாடுகிறது.

எல்லாம் வல்ல இறைவனின் காலடிகளில் நடைபெறும் மனிதத்தன்மையற்ற குரூரங்களையும் இந்தப் பாவப்பட்ட உருப்படிகளையும் இறைவன் ஏன் கண்டுகொள்ளவில்லை என்று நினைக்கும்போது சமூகம் என்ற பிடிப்பின் மீதே நம்பிக்கை போய்விடுகிறது. இறைஸ்தலங்களைச் சுற்றி நிகழும் அவலங்கள் – அதுவும் தவறு செய்கிறோம் என்ற உணர்வின்றி நிகழும் அவலங்கள் – இதுவரை வாழ்வுக்கு ஆதாரம் என்று நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகளையெல்லாம் தவிடுபொடியாக்குகிறது. எதைத்தான் இனிமேல் நம்பி வாழ்வது என்று பயமாகவும் இருக்கிறது.
புரையோடிய புண்ணின் மேல் தோலைச் சுற்றிச் சுரண்டிச் சுகம் காணும் சமூகத்தைத் தோலுரித்துக் காட்டி -புண்ணின் வலியை, எரிச்சலை உணரச் செய்கிறது இந்நாவல்.

கொடூரத்தின் உச்சமாக முத்தம்மையை மலக்காட்டில் அவளது மகனை வைத்தே வன்புணர்ச்சி செய்ய வைப்பது. முத்தம்மையைத் தவிர வேறு யாருக்கும் அவன் அவளது மகன் என்று தெரியாது. தெரிந்திருந்தாலும் பண்டாரமோ அல்லது அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களோ எந்தவித சிலிர்ப்பும் காட்டியிருக்க மாட்டார்கள். அது எப்படியும் நிகழ்ந்திருக்கும் என்பது முகத்திலறையும் நெஞ்சை உலுக்கியெடுக்கும் உண்மை. காவலர்கள் இயலாத பெண்ணைக் கொண்டுசெல்வதும், இடுப்பொடிந்து மலவண்டியில் அவளைக் கிடத்திக்கொண்டு திரும்பக் கொண்டுவந்து கோவில் படிகளில் வசூலுக்காகப் போட்டுவிட்டுப் போவதும் – இதுபோன்ற பதறவைக்கும் குரூரங்கள் கதை நெடுகிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. படிப்பது இருக்கட்டும். இதை எழுதவே மிகுந்த மனோதிடம் வேண்டும். 

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் வெளிவாசலையொட்டி முன்பு கழிவறைகள் இருந்தன. அவ்வப்போது காவல்துறையினர் லத்தியைச் சுழற்றிக்கொண்டு அங்கு போவதும், திடீரென்று கழிவறைகளிலிருந்து அலங்கோலமாக பெண்கள் தலைதெறிக்க ஓடுவதை நான் பல முறைக் கண்டிருக்கிறேன். எலும்புக் கூடுகளோ என்று சந்தேகப்படும்படி மிகப் பரிதாபமாகக் காட்சியளிக்கும் அப்பெண்கள் ஓடும்போது அவர்களது பின்னேயும் மேலேயும் கீழேயும் நெருக்கி மிதிக்கும் சமூகக் கட்டமைப்பை நினைத்து மிகவும் வருந்தியிருக்கிறேன். அவர்களின் கண்களில் வயிற்றுப்பசி தெரியும்.
அருவருப்பு என்று நாம் புறந்தள்ளும்; ஒதுக்கும் ஒரு சமூகத்தின் அவலத்தை – எடுப்புக் கக்கூஸில் அமர்ந்து வாயையும் மூக்கையும் மூடிக்கொண்டு காரியத்தை முடித்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் – பார்க்க மறுத்து – ஓடி வருவதுபோல, பாதாளத்தில் வாழும் பாவப்பட்ட ஜென்மங்களை மறுத்துக்கொண்டே வாழும் இச்சமூகத்தில் வாழ்வதையே அருவருப்பான செயலாக உணர வைத்திருப்பது இந்நாவலின் வெற்றி என்பது என் கருத்து. 
ஒரு படைப்பின் வாசிப்பனுபவத்தை எழுதும் போதெல்லாம் படைப்பிலிருந்து நிறைய எடுத்துக்காட்டுகளை உள்ளிடுவது என் வழக்கம். ஏழாம் உலகத்தைப் பொருத்தவரை என்னால் அதைச் செய்ய இயலவில்லை. குரூரங்களும் வக்கிரங்களும் பாவகாரியங்களும் கொட்டிக்கிடக்கும் எழுத்துகளை எடுத்து மேற்கோள் காட்டுவது – ஜெயமோகனே முன்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது போல – என் புலன்களை கூசச் செய்வதாக இருக்கிறது. முடியவில்லை.
சுருக்கமாக – இப்புத்தகத்தின் வாசிப்பு ஒரு பயங்கரக் கனவு – இவையெல்லாம் கனவுகளாகவே இருக்கக்கூடாதா என்று அழ வைக்கும் பயங்கர நிஜங்கள் – ஒரு /விதத்தில் பார்த்தால் ‘உருப்படிகள்’ அவர்களல்ல – நாம்தான் என்று தோன்றுகிறது.
http://myspb.wordpress.com/2005/12/13/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/
முத்துராமன் விமர்சனம்

நான் கடவுள்’ இரண்டு கதை. பிச்சைக்காரர்கள் உலகம். சாமியார் உலகம். இரண்டையும் சரிசமமாக நிறுத்த முயற்சித்திருக்கும் ஒரு முயற்சியே இத்திரைப்படம். ‘ஏழாம் உலகம்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். ஆனால், நாவலின் உக்கிரமோ, அருவறுப்புகளோ இல்லாமல் படம் எடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. 

நாவல் காட்டும் உலகம் வேறு. திரைப்படம் காட்டும் உலகம் வேறு. இருவேரு படைப்புகளும் அதனதன் அளவில் சிறப்பாக இருந்தாலும், நாவலில் இருந்து திரைப்படமாக்கும் வித்தை சரியாகக் கனிந்து வரவில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. 

நாவல் காட்டும் உலகம் மிகவும் ஆழமானது. பிரம்மாண்டமானதும் கூட. முக்கியமாக நாவலுக்கும் திரைப்படத்துக்கும் உள்ள மிகப் பெரும் வித்தியாசம் நாவல் பிச்சைக்காரர்களால் ஆனது. திரைப்படம் கடவுளைத் தேடும் சாமியார்களால் ஆனது. நாவலை அப்படியே திரைப்படமாக்கும் முயற்சியைச் செய்யாமல், கூடுதலாக அதன் இன்னொரு பரிமாணமான சாமியார்களின் உலகத்தோடு அதை ஒப்பிட்டிருப்பது சிறப்பானது.

நாவலில் வரும் பிச்சைக்காரன் ஒருவன் சொல்லும் டயலாக்: அலகு குத்திக் கொண்டு, முகம் முழுவதும் மஞ்சள் அப்பிக் கொண்டு பழனி மலை முருகனை தரிசிக்க மேலே செல்லும் பக்தர் கூட்டத்தைப் பார்த்து ஒரு பிச்சைக்காரன் சொல்வான். “நாம இவனுகள்ட்ட பிச்ச எடுக்கம். இவுனுக அங்க மேல உள்ள பிச்சைக்கார ஆண்டிக்கிட்ட பிச்ச எடுக்கானுக.”பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை அப்படியே நாவலில் இருப்பது போல படமாக்காமல் இருந்ததற்கு முக்கிய காரணம், பாலா ஆவணப்படமாக எடுக்க விரும்பவில்லை என்பதுதான். அதனை ஈடுகட்டும் வகையில் சாமியார்கள் திணிக்கப்பட்டதுதான் கடவுள். ‘நான் கடவுள்’ பிச்சை எடுக்கும் உருப்படிகளை வாங்கி விற்று பிச்சை எடுப்பவர்களின் பணத்தை மொத்தமாக அண்டாவில் வாரிச் சுருட்டிக் கொண்டு போகும் சிலர் பழிவாங்கப்பட வேண்டும். அதற்கு ஒருவன் வருவான். அவன்தான் கடவுள். இதே விஷயம் நாவலில் வேறு வகையில் கையாளப்பட்டிருக்கிறது. கடவுள் என்ற பிம்பமே கேலிக்குரியதாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. 

‘ஏழாம் உலகம்’ ஜெயமோகனின் வழக்கமான நாவல் வடிவத்திலிருந்து மாறுபட்டது. எடுத்துக் கொண்ட களம் பற்றிய விவரணை ஏதும் இல்லாமலே நாவல் தொடர்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் கதாபாத்திரங்களின் பேச்சுக்களாலும், சின்னச் சின்ன சம்பவங்களாலும் நாவல் தனது வடிவத்தைக் கண்டடைகிறது. நாவல் படிப்பதே ஒரு திரைப்படம் பார்ப்பது போலத்தான் இருக்கிறது. நாவலில் உள்ள சில வசனங்கள் படத்திலும் இருக்கிறது. குறிப்பாக ‘அம்மா... மகாலட்சுமி... பிச்சை போடுங்கம்மா... ஏ... ஜோதிலட்சுமி...’ 

நாவலில் இருக்கும் குரூரமும் நாற்றமடிக்கும் அவர்களின் வாழ்க்கை முறையும், அதனை ஒரு பிழைப்பாகக் கொண்டு உருப்படிகளை விற்று வாங்கி பிச்சை எடுக்க வைப்பனின் நாறிப் போன வாழ்க்கையையும் அப்படியே பதிவு செய்யாமல் விட்டதற்காக நான் கடவுளை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். பிச்சை எடுப்பதற்காகவே குறைப்பிறவியாகப் பிறக்க வேண்டும் என்று ஒரு கூனனையும், கை கால் சூம்பி, மண்டை சப்பிப் போன ஒற்றைக் கண்ணோடு இருக்கும் ஒருத்தியுடன் அணைய விடும் பண்டாரத்தைப் பார்த்து நாம் அதிர்ந்து நிற்க, பண்டாரமே அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் ஓர் இடமும் உண்டு. சிறுவர்களைப் பிடித்து வந்து நாக்கறுத்து, அமிலம் ஊற்றி வெந்து போன முகமாக உருத் தெரியாமல் உருக்கி அழித்து, கண் குத்தி, ‘பெத்த அம்மா பாத்தாக்கூட சந்தேகப்படமாட்டா. அப்டி மாத்திருக்கோம்’ என்று சொல்லும் ஓர் இடத்திலிருந்து அதிர்ந்து போய் ஓடுகிறார் பண்டாரம். தன்னுடைய தொழிலைவிட மிகவும் மோசமான ஒரு விஷயத்தைக் கண்டவர் வீடு சேரும்போது தன் இடுப்பில் வைத்திருந்த பணத்தை எவ்வளவு என்றெல்லாம் எண்ணிப் பார்க்காமல் அப்படியே கோயில் உண்டியலில் திணிக்கிறார். ஆயிரத்து இருநூறு இருக்கும். இல்லை மேலேயா... 

தனது மகளின் கல்யாணத்துக்காக உருப்படிகளை விற்கும் பண்டாரம், தன்னுடைய ஐசுவரியம் என்று சொல்லும் மாங்காண்டி சாமியாரை விற்கச் சம்மதமில்லாமல் ‘அது எனக்க ஐஸரியமாக்கும்’ என்று சொல்லச் சொல்ல மாங்காண்டி சாமியின் விலை ஏறுகிறது. பத்தாயிரத்தில் ஆரம்பிக்கும் பேரம் அறுபதாயிரத்தில் முடிகிறது. அதே மாங்காண்டி சாமியை சில காலம் கழித்து பத்தாயிரம் ரூபாய்க்கு தானே வாங்கிக் கொள்ளும் இடத்தில் பண்டாரம் ஒரு நல்ல வியாபாரி. 
நாவலில் இவர்கள் பேசும் நாகர்கோயில் கன்னியாகுமரித் தமிழ், திரைப்படமாகும்போது கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆர்யா வரும்போதெல்லாம் என்ன மொழியில் பேசப் போகிறாரோ என்று கவனிக்க வேண்டியிருந்தது. 

படத்தில் மிகவும் சிறப்பாக அமைந்த விஷயங்கள் இளையராஜாவின் இசை, ஆர்தர் வில்சனின் கேமரா, பூஜாவின் நடிப்பு. 

இப்படிப்பட்ட மக்களின் வாழ்க்கையை நாவலாக்கியதற்காக ஜெயமோகனுக்கும், அதைத் திரைப்படத்தின் வழியாகப் பல கோடி பேருக்குக் கொண்டு சேர்த்த பாலாவுக்கும் நன்றியைச் சொல்லலாம். மத்தபடி இந்த அகோரி, சாமியார் இதெல்லாம் என்னமோ சொல்றாங்களே... அதுக்கெல்லாம் ஏதாவது படம் எடுத்திருக்காங்களா? யாராவது சொல்லுங்க.
http://muthuraman.blogspot.in/2009/02/blog-post.html

ரெங்கசுப்ரமணி விமர்சனம்

அதிகாலையிலேயே முழிப்பு வந்த பண்டாரத்திற்கு நிலைகொள்ளாமல் தவிக்கின்றார். அவரது சினைகண்ட மாட்டை நினைத்து. எப்போது பிரசவமாகும், காவலுக்கு ஆளிருந்தும் ஒரு முறை ஒரு குட்டியை நரி கொண்டு போய்விட்டது என்று பயந்து கொண்டிருக்கின்றார். மனைவி தான் பிரசவிக்கும் போது கூட இப்படி இல்லை, இப்போது என்ன இவ்வளவு தவிப்பு என்று அலுத்துக் கொள்கின்றாள். அவர் அவசர அவசரமாக அவரது மாட்டை காண போகின்றார். இப்படி நினைத்துக் கொண்டுதான் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு கையும் காலும் கண்ணும் இல்லாத முத்தம்மைதான் பிரசவிக்க போகின்றாள் என்பதில் ஆரம்பித்த அதிர்ச்சி கடைசிவரை போகவில்லை.


பெரிய கோவில்கள், தெருக்கள், பஸ் ஸ்டாண்ட் என்று பல இடங்களில் நாம் பார்க்கும் பிச்சைக்காரர்கள் பின்னால் இப்படி ஒரு மிகப்பெரிய வலை இருக்கும் என்பதும், இது ஒரு மிகப்பெரிய தொழில் என்றும் இதைப் படிக்கும் முன் வரை தெரியாது. நான் கடவுள் படத்திற்கு பின் இதை வாங்கினேன். அதில் காட்டியது இப்புத்தகத்தில் உள்ளதில் ஒரு பத்து சதவீதம் கூட இருக்காது.

பண்டாரம் ஒரு மிகப் பெரிய முருக பக்தர். அவர் மனைவி, குழந்தைகளிடம் பாசமாக இருக்கும் ஒரு குடும்பத்தலைவர். பெண் அழுவதால் நடு இரவில் ஓடிப் போய வளவி செய்து போடும் பாசமுள்ள தகப்பன். ஆனால் அவரது மறுபக்கம் பிச்சைக்காரர்களை வைத்து சம்பாதிக்கும் தொழில்.அவர்களை வைத்து பிழைப்பதில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லை அவருக்கு. அவரை பொறுத்த வரை அந்த ஆத்மாக்கள் அப்படித்தான் இருக்க விதிக்கப்பட்டவர்கள். "நம்ம யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணல" என்பதை அவர்களால் மனதார சொல்ல முடிகின்றது.

பண்டாரத்தை பொருத்தவரை அவர்கள் மனிதர்கள் அல்ல, அவர்கள் அனைவரும் அவருக்கு உருப்படிதான். அவரிடன் வேலைபார்ப்பவர்களுக்கும் அதே போலத்தான், உருவம் குலைந்த பிச்சைக்காரர்களை ஒரு பிண்டமாகத்தான் பார்க்கின்றன்ர். அவர்களை மனிதர்கள் என்று கருதுவதில்லை. பிறந்து சில நாட்களே ஆன பிள்ளையை, தண்ணீர் ஊற்றி வெயிலில் போடச் சொல்கின்றார். டெம்போவில் அனைவரை அடுக்கி, மலத்திற்கு நடுவில் ஊறி கிடக்கும் அவர்களை பழனிக்கு கடத்துகின்றார். பொருள் போல வாங்கி விற்பதும், பண்ட மாற்றும் செய்கின்றார். நல்ல விலைகிடைக்கும் என்று மனித உடலை கூறு போட்டு விற்கவும் துணை போகின்றார்.அதே பண்டாரம் கடத்தப்பட்டு ஊனமாக்கப்பட்டவர்களை பார்த்து பயப்படுகின்றார், அது பாவம் என்ற எண்ணம் அவருக்கு வருகின்றது.  அவர்களை வைத்து தொழில் செய்ய மனம் வருவதில்லை. 

//நாம நம்மள்விட சின்ன ஆத்மாக்கள சம்ரக்‌ஷிக்கனும். ஆடு, மாடு கோழி வளர்க்குதோம், நம்மள விட சின்ன ஆத்மாக்கள் //

பழனிக்கு சென்று சீசன் முடியும்வரை வேறு பண்டாரமாக ஷோக்காக இருக்கும் பண்டாரத்திற்கும் சிறிய புள்ளி வைக்கப்படுகின்றது. "எயிட்சுன்னு புது நோய் வருதாம் ஜாக்கிரதை" வரலாம், வராமலும் போகலாம். அதை எல்லாம் கதை பேசுவதில்லை.

அவருடன் தொழில் நடத்து தோழருக்கும் பிச்சைக்காரர்கள் உருப்படியல்ல, அவர்களும் தோழர்களே, சகாவு. சகாவுவை வாங்கி விற்பதற்கும் அவரிடன் வாதம் தயாராக உள்ளது. கடவுள் பக்தியோ, வர்க்க சிந்தாந்தமோ எதுவும் அக்குறைப்பிறவிகளை மனிதர்களாக மதிப்பதில்லை.

ஆனால் அப்பிச்சைக்காரர்கள் அவ்விதம் நினைப்பதில்லை. அவர்களுக்குள்ளே ஒரு வாழ்க்கையை, நமக்கு விதிக்கப்பட்டது இது, இதிலும் சந்தோஷமாக இருப்போம் என்று வாழ்கின்றனர். சின்ன சின்ன விஷயங்களில் அவர்களின் சந்தோஷத்தை அடைகின்றனர். முத்தம்மை அவளைப் போலவே இருக்கும் அவளின் பிள்ளையை பார்த்து சந்தோஷப் படுகின்றாள். முத்தம்மைக்கு பிறந்த அத்தனையும் குறை பிறவிகள், இருந்தும் அவளுக்கு அவள் குழந்தை பியேக்காரன், ராஜா, ரஜினிகாந்து. அவள் அக்குழந்தைக்கு தகப்பனிடம் வெட்கம், பெருமிதம், பரிதாபம் என அனைத்தும் கலந்து பேசும் தருணங்கள், மிகவும் நெகிழ்வானவை.

குய்யானுக்கு உணவும், ராமப்பனுக்கு பீடியும்.ராமப்பனும் குய்யானும் அவர்களுக்கு கிடைக்காத விஷயங்களை பற்றி பேசி பேசி அதில் சந்தோஷப்படுகின்றனர்.

தப்பிக்க ஒரு கயிறைக் கட்டும் பெருமாளை கணவனாக நினைத்து, அவனிடம் உரிமை கொண்டாடும் கால் இல்லாத எருக்கு. அவளை சந்தோஷமாக வைத்திருப்பது ஒரு காதல்.  முத்தம்மையும் எருக்கும் குழந்தையை பற்றியும், அது தாய்க்கு தரும் உணர்ச்சியை பற்றியும் பேசுகின்றனர்.

அவர்களின் கடவுள் நாம் கும்பிடும் முருகனோ, சிவனோ, பெருமாளோ இல்லை. அவர்களுக்கு அவர்கள் தேவையில்லை. நமது கடவுள்களுக்கு அவர்கள் உலகில் வேலை இல்லை. அவர்களின் கடவுள் மாங்காண்டி சாமி. அதுவும் ஒரு பிச்சைக்கார சாமி, பிச்சைக்காரர்களுக்கு கடவுளாக இருக்கும் மாங்காண்டி சாமிக்கு, பணக்காரர்களுக்கு சாமியாக இருக்க இஷ்டமில்லை. அப்பிச்சைக்காரர்கள் உலகத்தில் கடவுளுக்கு இடமில்லை.

பண்டாரத்திற்கும் அவரது பிச்சைக்காரர்களுக்குமான உறவு, சாதரண முதலாளி தொழிலாளி உறவு போல, முதலாளி மகள் திருமண பிரச்சினையை கேட்டு வருத்தப்படுகின்றார்கள், அவருக்கு யோசனை சொல்கின்றார்கள். அவர்களுக்கு பண்டாரத்தின் மீது எங்கும் கோபம் வருவதில்லை.

கதையில் வரும் மற்ற பாத்திரங்கள், முத்தமையை முழுவதுமாக பார்க்க விரும்பும் போத்தி, வார்த்தைகள் முழுவதும் விஷம் வைத்திருக்கும் பக்கத்து வீட்டு கிழவி, ராட்சசத்தின் உருவமான பண்டாரத்தின் சம்பந்தி, 11 தோசை சாப்பிடும் ப்ரோக்கர் அனைத்தும் கச்சிதம்.

இது போன்ற ஒரு தொழில் எப்படி அரசின் கண்ணில் படாமல் உள்ளது என்பதற்கான பதிலும் இதிலேயே உள்ளது. கால் இல்லாத எருக்கை தூக்கி சென்று பயன்படுத்திக் கொள்ளும் போலிஸ்காரன், ஒரு உருப்படிக்கு இவ்வளவு என்று கமிஷன் பேசும் இன்ஸ்பெக்டர் என்று தொழிலின் சக பங்குதாரர்களையும் காட்டுகின்றது.


ஜெயமோகன் எப்படி இந்த உலகத்தை பார்த்து எழுதினார் என்பது வியப்புதான். அவரின் எழுத்தில் அவ்வுலகத்தின் மூர்க்கம் நம்மை தாக்குகின்றது. அம்மனிதர்களின் சதைகளிலிருந்து வரும் சீழும் ரத்தமும் அவரின் எழுத்துகள் மூலம் நம் மீது தெறிக்கின்றது. ஒரு சில இடங்களில் நாம் எவ்வளவும் புண்ணியம் செய்தவர்கள் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.


கடைசியில் முத்தம்மை வேண்டாம் உடையாரே இவன் ஒத்த விரலோன் என்று கதறுவது முதல் முறை படித்த போது சரியாக புரியவில்லை. அடுத்த முறை படித்த போது அந்த வரிகள் பலமாக தாக்கிவிட்டது. அதே சமயம் அங்கே குய்யான் முகத்தில் வரும் சிரிப்பு கதையை முடித்து வைக்கின்றது. அவனின் சிரிப்புதான் கதையின் உச்சகட்டம்.

உரையாடல்களின் வேகம், சின்ன வசனமானாலும் அதன் அதிர்ச்சி பலமாக உள்ளது. மற்றுமொன்று நகைச்சுவை, இம்மாதிரி கதைகளில் நகைச்சுவை எப்படி என்று யோசிக்கலாம், பிச்சைக்காரர்களின் பேச்சில் இருப்பது. வேறு எப்படி அவர்களின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள முடியும். ப்ளாக் ஹூயூமர் என்றால் என்ன என்று தெரியாமல் இருந்த எனக்கு அது இதுதான் என்று காட்டிவிட்டது.

முதலில் அந்த தமிழ் கொஞ்சம் தலைவலியை தந்தாலும் பழகிவிட்டது. அதோடு பிடித்தும் விட்டது. அந்த டிக்‌ஷனரியை அந்தந்த பக்கத்திலேயே போட்டிருக்கலாம். நீக்கம்பு என்றால் முதலில் படிப்பவனுக்கு என்ன புரியும்.

கதையின் அடிநாதமாக நான் பார்ப்பது மனிதம் / மனிதத்தன்மை. மனிதர்கள் முழுக்க முழுக்க நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ இருக்க முடியாது. தர்ம தேவதையின் அம்சமான யுதிர்ஷ்டிரன் மீது கூட கறை உள்ளது. அதே போல் மனிதர்களின் அடிப்படை அம்சம், வாழ்க்கையை வாழ்வது. எப்படி இருந்தாலும் அதில் அவர்களின் மகிழ்ச்சியை தேடி வாழ்வது.

கதை மேலோட்டமாக பார்த்தால் ஒரு குரூரமான உலகை காட்டுவது போல தோன்றலாம், ஆனால் கதையில் உள்ளே ஓடுவது மனிதனின் வாழ்க்கையை பற்றிய உணர்ச்சி. பாரதக் கதை ஒன்று மேலே புலி, கீழே பாதாளம், அருகே பாம்பு இருந்தும் தேனை ருசிக்கும் மனம். அது வேறு உதாரணத்திற்கு கூறப்பட்டாலும், அதை எனக்கு இங்கே பொருத்தி பார்க்க தோன்றுகின்றது. மனிதன் எந்த நிலையில் இருந்தாலும் அவனது அடிப்படை உணர்ச்சிகள் மாறாது, அவனின் வாழ்க்கையை அவை ஒரு அர்த்தமுள்ளதாக மாற்ற செய்யும்