அன்பின் ஜெயமோகனுக்கு,
நலம். உங்கள் மனைவி குழந்தைகள் நலம்தானே?
எனக்குப் ப்ரியமான இரண்டு எழுத்தாளர்கள் கேள்விகளாகவும் பதில்களாகவும் உயிர்மைத் தளத்தின் சில பக்கங்களில் நிறைந்து கிடந்ததைக் காண்கையில் பெரும் மகிழ்ச்சியடைந்தேன். மனம் திறந்து பாராட்டும் உன்னதமான மனம் கொண்ட என் நண்பர் அ.முத்துலிங்கம், காலத்தின் ஆகச் சிறந்த எழுத்தாளர் ஜெமோவை நேர்காணல் செய்தது மிகப் பொருத்தமே. அமுவின் கேள்விகளை ரசிக்கையில் ஜெமோவின் தெள்ளிய நீரோடை போன்ற பதில்கள் வாசிக்க சுகமாக இருந்தது. இக்கதையை முன்பு உயிர்மையில் வாசித்தே போது உங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்தேன். புத்தகக் கண்காட்சியில் இத்தலைப்பை கண்டவுடன் வாங்கிவிட்டேன். ஊமைச் செந்நாயைப் பற்றி அமு குறிப்பிட்டவை எல்லாம் மிகச் சரியே. இத்தகைய ஒரு கதையை சமீபத்தில் நான் வாசித்ததில்லை. வாசித்தபின் பல மணி நேரம் அக்கதை மனதை விட்டு அகலவில்லை.
உங்கள் உள்ளொளிப் பயணத்தின் பாதையில் நீங்கள் கண்டடைந்த சிலவற்றின் தொகுப்புத்தான் உங்கள் எழுத்தோ என நான் வியப்பதுண்டு. அமுவின் ஒரு கேள்விக்கு நீங்கள் கூறிய பதில் அதை தெளிவாக்கியது. ‘ஆழ்நதியைத்தேடி’ எனக்கு மிகப் பிடித்தமான தொகுதி…இம்முறை கண்காட்சியில் ‘நித்ய சைத்தன்ய யதி’ என்ற தலைப்பிட்ட புத்தகங்களையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு வாங்கி விட்டேன். எப்போது வாசிப்பேன் என்று எனக்கே தெரியாது. வாசிக்கவேண்டும்.
ஒரு எழுத்தாளரை எப்படி கொண்டாடவேண்டும் என இங்கு யாருக்கும் தெரிவதில்லை. அமு கனடாவில் அத்தகைய கொண்டாட்டங்களை நிறைய பார்த்திருப்பார். எத்தனை ஆயிரம் மைல்களுக்கப்பால் இருந்து அவர் எம் படைப்பாளிகளை உற்சாகப்படுத்தி வருகிறார், ஆனால் இங்கிருக்கும் அன்பர்களோ வெறுப்பை மட்டுமே உமிழ்கிறார்கள். A.Muttulingam is a magnanimous and a gem of a person.
‘நான் கடவுள்’ நாளை செல்கிறேன். வெற்றிக்கான மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
அன்புடன்
உமா பார்வதி
No comments:
Post a Comment