Thursday, July 24, 2014

பக்ஸ்- கூட்டாஞ்சோறு பதிவு

பாடி ஷாப்பிங் என்று கேள்வி பட்டிருக்கிறீர்களா? (ஆட்டோ பாடி ஷாப்பிங் இல்லை. அது ஆக்ஸிடெண்ட் ஆன கார்களை பழுது பார்க்கும் இடம்.) நான் குறிப்பிடும் பாடி ஷாப்” பாடியை (உடல்களை) வைத்து வியாபாரம் பண்ணுவது. செத்து போனவர்களின் உடல்களை வைத்தும் வர்த்தகம் நடந்துக் கொண்டிருக்கிறது. உயிருடன் இருப்பவர்களை வைத்தும் வர்த்தகம் நடந்துக் கொண்டு தானிருக்கிறது. இரண்டாவது ரகம் பல விதங்களில் நடக்கிறது. இது போன்ற வியாபாரங்கள் சிகப்பு விளக்குப் பகுதிகளில் நடப்பது ஒரு எல்லை. வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி, ஏங்கி தவிக்கும் இளைஞர்களை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணி வியாபாரம் செய்வது இன்னொரு எல்லை. வீடியோ கடையில் இருக்கும் டிவிடி, கேஸட்டுகள் போல் வாடகைக்கு விடப்படும்இளைஞர்கள் அவதி சொல்லிமுடியாது. இது சிலருக்கு வாழ்க்கையில் ஒரு படிக்கல். அல்வா சாப்பிடுகிற மாதிரி. ஈஸியாக இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிவிடுவார்கள். மற்றவர்களுக்கு பாகற்காய் சாப்பிடுவது மாதிரி.
இவர்களுக்கே இந்த கதி என்றால் பிச்சைக்காரர்களுக்கு? அதுவும் சில அங்கங்கள் இல்லாதவர்களுக்கு? அவர்கள் எங்கே போகமுடியும்? இவர்களை வைத்து எப்படி பிஸினஸ் பண்ணுவது என்று பிஸினஸ் ஸ்கூல்களுக்கு இன்னும் தெரியாது. தெரிந்திருந்தால் இதற்குள் Master of Business Administration in Mendicant Commerce என்று ஒரு ப்ரோக்ரம் வைத்திருப்பார்கள். (அந்த அளவிற்கு பிஸினஸ் ஸ்கூல் தாழ்ந்து விடவில்லை. இந்த “தொழிலில் உள்ள லாபத்தை குறிப்பிடுவதற்காக அவ்வாறு மிகைப் படுத்தினேன்). பிச்சைக்காரர்களைப் பார்த்தால் அருவருப்படைந்து முகம் சுழிப்பதும், அவர்களை இரண்டாம் முறை பார்த்தால் வாந்தி வந்து விடும் எனறும் நினைக்கும் நம்மில் பலருக்கு அவர்கள் மேல் ஒரு கருணையையும், இரண்டாம் முறைப் பார்க்கத் தூண்டும் ஆர்வமும் ஏற்ப்படுத்துவது ஜெயமோகனின் “ஏழாம் உலகம். நான் படித்த ஜெயமோகனின் முதல் முழு நாவல். மனிதர் சரளமாக எழுதித்தள்ளி விட்டார். ஜீரணிப்பது அவரவிரின் மனநிலையைப் பொருத்தது.
ஏழாம் உலகம் பலருக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியது. இதற்குத் தயாராகாதவர்கள் இப்படியும் உலகத்தில் நடக்குமா? என்று ஆச்சரியப்படுவார்கள். உடனே பிச்சைக்காரர்கள் அமர்ந்திருக்கும் ஒரு திருவிழா கூட்டத்திற்கோ அல்லது கோவில் வாசலுக்கோ சென்று பிச்சைகாரகளைப் பார்த்துவிட்டு, அருகில் இன்னொருவர் இருக்கவேண்டுமே என்று ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, பின்னர் சற்று மறைவாக நின்று ஒரு மூன்று மணி நேரம் காத்திருந்து அங்கே என்னவெல்லாம் நடக்கிறது, யார் யாரெல்லாம் வருகிறார்கள், வருபவர்கள் பிச்சைக்காரர்களை என்ன செய்கிறார்கள், பிச்சைப்பாத்திரத்தில் விழுந்தக் காசு எங்கெயெல்லாம் போகிறது என்று பார்க்கவேண்டும் எனறெல்லாம் ஆர்வம் எழும். நம் மணிபர்ஸில் அந்தக் காசும் இருக்குமோ என்று சற்றே அருவருப்புடன் நாணயங்களை பார்க்கத் தோன்றும்.
ஹீரோ வொர்ஷிப் பண்ணும் தமிழுலகத்திற்கு போத்திவேலு பண்டாரம் என்ற கதாபாத்திரத்தை தைரியமாக கொடுத்திருக்கிறார் ஜெயமோகன். வழக்கமாக வரும் ஹீரோக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சதையும், உணர்ச்சியும் உள்ள கதாபாத்திரம். ஒரு பக்கம் அருமையான எளிமையான குடும்பத்தலைவர், மறுபக்கம் பழனியில் செய்யும் தகாதவைகள், மற்றுமொரு பக்கத்தில் தனது உபதொழிலை நியாயப்படுத்தும் விதம்  நமக்கே இது ஒருவேலை ஒரு சேவைதானோ? என்று எண்ணத் தோன்றிவிடுகிறது. ஆனால் உடனே இதற்கு காரணமே இவர் தானே என்று சுதாரித்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கதையை அற்புதமாக பிண்ணியிருக்கிறார் ஜெயமோகன்.
ஒரு மகள் தன் தந்தையை வெறுக்க ஆரம்பித்துவிட்டால் எந்த அளவிற்கும் போகலாம் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மையை பூசி மெழுகாமல், இரக்கமே இல்லாமல், அப்பட்டமாக போட்டு உடைத்துவிட்டார் ஜெயமோகன். வாசகர்களின் இரக்க உணர்ச்சிக்கு ஒரு பெரிய ஏமாற்றம். ஆனால் அது தான் உண்மை என்று தெளிவாக்கிவிட்டார்.
அப்பாவி மனைவி “நாம் யாருக்கு என்ன கெடுதல் செய்தோம்” என்று சுயபட்சாதாபம் அடையும் பொழுது போ.வே.பண்டாரத்தின் குற்ற உணர்ச்சியை எப்படி வார்த்தைகளில்லாமலே ஜெயமோகனால் சொல்லமுடிந்தது? அசத்திவிட்டார்.
முத்தம்மைக்கு நிகழும் கொடுமையின் ஒரு சுற்றின் ஆரம்பத்தில்ஆரம்பித்தக் கதை அடுத்த சுற்றின் ஆரம்பத்திற்கு முன்னர் வந்து முடிவடைவது போல் அருமையான கதையமைப்பு. அங்கே ஜெயமோகனின் இன்ஜெனுய்ட்டி (ingenuity) தெரிகிறது.
வட்டார வழக்கை சரளமாக கையாண்டிருக்கிறார். அவருடைய வசிக்கும் பகுதி என்பதால் அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்றாலும் கதாபாத்திரங்களுக்கு அவ்வழக்கு இயற்க்கையாக இருக்குமாறு அமைத்தது பாராட்டுக்குறியது. ஆனால் பழனியில் பிஸினஸ் பண்ணும் செட்டியார் எப்படி நாகர்கோவில் வட்டார வழக்கில் பேசுகிறார்? அங்கே உதைக்கிற மாதிரி தோன்றுகிறது. கொஞ்சம் தெளிவு படுத்தியிருக்கலாம். வட்டாரத்திற்கு அறிமுகமேயில்லாத வாசகர்கள் கொஞ்சம் திணறுவார்கள். (வட்டார வழக்கு டிக்‌ஷ்னரி கொடுத்தது மிகவும் உதவியாக இருக்குமென நினைக்கிறேன்). எனக்கு அறிமுகமான எழுத்தாளர்களில், மார்க் ட்வெயினின் The Adventures of Huckleberry Finn”னிற்கு (ஜிம்மும், ஹக்கும் பேசுவது) ஈடாக வட்டார வழக்கை கையாண்டிருப்பது ஜெயமோகன் தான். எனக்கு நாகர்கோவில் வழக்கு ஓரளவு பரிட்சயமே. அதனால் எளிதாக இருந்தது.
கதை எனக்கு தனிப்பட்ட வகையில் அவ்வளவு அதிர்ச்சியை கொடுக்கவில்லை. ஜெயமோகன் நல்ல நகைச்சுவையாக எழுதுகிறார். பொதுவாகவே நகைச்சுவை எனக்கு பிடித்தமான் ஒன்று. ஒரு மெலன்கலிக் தீம் என்றாலும் பல இடங்களில் நகைச்சுவை என்னை புன்னகை பூத்தவாறே பக்கங்களை வேகமாக புரட்ட வைத்தது. அவ்வளவு கன்வின்ஸிங்காக இல்லாத் ஸ்லம்டாக் மில்லியனர் முதலில் பார்த்தது தப்பாகி விட்டது என நினைக்கிறேன். ஷாக் அப்சார்பராக அதற்கு முன் ஒரு தமிழ் டி.வி சீரியலில்பிச்சைக்கார இண்டஸ்டிரி” பற்றி சில காட்சிகளை பார்த்துவிட்டேன். ஆனால் ஜெயமோகன் இந்தக் கதையை 2004ல் எழுதிவிட்டார். அவருக்குதான் நியாயமாக முதன் முதலில் இந்த சப்ஜக்டை தொட்ட பெருமை சாரும். எல்லா வகையிலும் ஏழாம் உலகம் ஒரு உன்னத படைப்பே.

http://koottanchoru.wordpress.com/2009/02/18/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/

No comments:

Post a Comment