Thursday, July 24, 2014

ஷங்கர் விமர்சனம்


ஏழாம் உலகம்..


நல்லவை தீயவை என இவ்விரண்டுமே ஒரே ஓட்டைப் படகில் பிரயாணம் செய்பவைதான். ஆறறிவே அதற்கு வண்ணம் தீட்டுகிறது. இனிப்பு தடவுகிறது. விளம்பரம் செய்கிறது, விற்பனை செய்கிறது. தானே அந்த ஓட்டைப் படகென்று அறியாமல் பிரயாணம் செய்கிறது. மூழ்கிப் போகிறது.

எல்லா உயிர்க்கும் வாழ்தல் என்பது அடிப்படை ஆசைதான். உணவுக்கான சண்டைகளும், கொலைகளும் எல்லா உயிர்களுக்கும் பொது.  ஆனால் பிச்சை எடுத்தல் என்பது மனித இனத்துக்கே சொந்தம். அது தனித்துவமானது. ஆத்திகம், நாத்திகம், மேலும் எல்லா இசங்களும் இதில் அடிபட்டுப்போகும்.  சரி போகட்டும். வேறு வழி இல்லை. உணவு வேண்டும். உயிர் வாழ்தல் முக்கியம் என்ன செய்யலாம் என்று யோசித்தது ஆறறிவு. தன் இரை வரும் வழியில் காத்திருந்து அடித்துப் பசியாறும் விலங்குகளைப் போல பாவங்கள் சுமந்து வரும் மனிதர்களை, இரக்கங்கள் சுமந்து வரும் மனிதர்களைக் குறி வைத்துக் காத்திருந்தது.

ஒப்பீடும் ஆறறிவின் நீட்சியல்லவா? சும்மா வருமா இரக்கமும்? பரிவும்?
அங்கஹீனமும், அருவருப்புகளும், கதறல்களும் மனித இரக்கத்தின் ஊற்றல்லவா? 

குறிபார்த்து அடித்தது. யார் கோவிலுக்கு வருவார்கள்? கடவுளுக்கு நன்றி சொல்பவர்களா? கோரிக்கை வைப்பவர்களா? எது முதலில் நன்றியா? கோரிக்கையா? கோரிக்கைகளுக்கு விலை உண்டு. பயத்திற்கு விலை உண்டு.

தர்மம் என்று அதற்குப் பெயர்.

அம்மா சாமி தர்மம் போடுங்கம்மா!

--

இந்த உலகில் பிச்சை எடுக்காதவர் என்று எவரேனும் உண்டா? பிச்சை போடுங்கம்மா. தர்மம் போடுங்கம்மா என்றழைப்பவரை நாம்
பிச்சைக்காரர்களாக்கிவிட்டோம் மற்றவர்களை வேறு பெயர்களில் அழைக்க ஆரம்பித்து விட்டோம். நாமே இயற்கையிடம் கையேந்தும் பிச்சைகள் என்பதனை சுலபமாய் மறந்தோமே அதுபோல.

இந்த நாவல் அது போல பிச்சை எடுக்கும் மனிதர்களின் வாழ்க்கையை அதன் குரூரத்தை, வேதனையை, அவர்களை கவனமாய் பாதுகாக்கும் மனிதர்களை, அவர்களுக்கு நம்மை விட்டா யார் இருக்கா? என்ற இரு பக்கத் தத்துவ சூட்சுமத்தை பக்கம் பக்கமாய் அலசுகிறது.

எழுத்துக்களின் வலிமை என்பது இதுதான். அதுவே ஆச்சர்யமும். கொக்கோகம் கிளர்ச்சி செய்யும். குறி நிமிர்த்தும், வெறி ஏற்றும். காதலெனில் போதை வரும், மோனம் வரும் ஆனால் அவைகளில் விஸ்தரிப்பு முக்கியம் நீட்டி முழக்கிச் சொல்லும்போது, நகாசு வேலைகள் முக்கியம் அப்பொழுதுதான் அது வாசிப்பவரைக் கவரும். ஆனால் இந்தப் புத்தகத்தில் அது இல்லை. உள்ளது உள்ளவாரே சொல்லப் பட்டிருக்கிறது. இல்லை கேட்கப்பட்டிருக்கிறது. எந்த மெனக்கெடலும் இல்லாமல் நீ இதில் யார்? பிச்சை எடுப்பவனா? எடுக்க வைப்பவனா? கூட உதவி செய்பவனா? என்னும் சுய தேடல் உள்ளுக்குள் நம்மை அறியாமலேயே விதைக்கப் படுகிறது. படிக்கும்பொழுது இல்லாவிட்டாலும் என்றேனும் ஒரு நாள் அது முளைவிடும் எண்ணங்கள் தின்று கேள்விப் பூக்கள் சொறியும். அதுவே இதன் வெற்றி. 

இதில் வரும் போத்திவேலுப் பண்டாரத்தைப் பார்த்து கோவப் பட முடியுமா? உடலின் குறைகளுக்கேற்றவாறு விலை பேசி மனிதர்களை விற்று, வாங்கி தொழில் நடத்தி வருமானம் பார்க்கும் அவனுக்கும் மூளையின் நிறை/குறைகளுக்கேற்ப எண்களில் மதிப்பிடப்படும் மார்க்ஷீட்டினடிப்படையில்/ அனுபவத்தின் அடிப்படையில் வேலை தரும்.பெறும் நமக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன? மொத்த உயிரினங்களின் சாட்சியாய் சொல்லவேண்டுமெனில் ஒரு மரத்தை அறுத்து மேசை நாற்காலி செய்த என்னைவிட போத்திவேலு ஒன்றும் மோசமில்லை.


--

எல்லையில்லாத ஆகாசப் பெருவெளியும், அதையொத்த நிலமும் நமக்குச் சொல்வதெல்லாம் நாமெல்லாம் தூசிலும் தூசு என்பதையே! ஆனாலும் நான் எனது என்ற சுய மோகம் பிடித்த மனது ஏறி மிதித்து காணாமல் போகும் பலவற்றில் இவர்களின் வாழ்க்கையும் ஒன்று. கடவுளை கல்லால் வடித்தவன் நிச்சயம் புத்திசாலிதான் இல்லையென்றால் மிதிப்பதுவும் வணங்குவதும் ஒரே கல்லென்ற உணர்வு என்றோ வந்திருக்குமே?

இதெல்லாம் படிக்கவேண்டுமா என்றால். ஆம் நிச்சயம் படிக்கவேண்டும். யோசிக்கத் தெரிந்த உயிர்களின் கசடுகள் கிளறப் படவேண்டும். அப்பொழுதுதான் யோசிக்கப் படாதவைகள் வெளிவரும் கூடவே தெளிவும். தெரியும்தானே உலகப் பேரழகிக்கும் உதிரப் போக்கும், மல ஜலமும் உண்டு. வாசனை திரவியங்களுக்கோ அற்பாயுசு!

--



மிதிப்பதுவும் அதுவே
வணங்குவதும் அதுவே
என்றறியாத மனிதக்கூட்டம்
கோவில் சுற்றி
காசு கொடுத்து
சிறுநீர் கழித்து
கவனமாய் குதிகால் கழுவியது
சனி பிடிக்காமலிருக்க..

கடவுளை முதலில்
கல்லால் வடித்தவன்
சிரித்துக் கொண்டிருந்தான்..!



--

ஒரு நன்றி: இந்தப் புத்தகம் நண்பர் ரோமியோ அவர்களால் எனக்குப் பரிசளிக்கப் பட்டது!! :))

விலை: ரூ.150/- கிழக்கு பதிப்பகம்.
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க விரும்புவர்கள் இங்கே சொடுக்கவும்

http://palaapattarai.blogspot.com/2010/07/blog-post.html

No comments:

Post a Comment