Thursday, July 24, 2014

’இவன் சிவன்’ விமர்சனம்

வாசிப்பு எப்போதும் சுகந்தமானது. அதுவும் ஜெயமோகன் போன்ற 'எழுத்து அரக்கர்களை' வாசித்தால் ரெண்டு நாள் யாரிடமும் பேசத்தோன்றுவதில்லை. 'நான் கடவுள்' படம் வந்து ஓடிக்கொண்டிருந்த சமயம் அது. நான்கு முறை பார்த்து முடித்திருந்தேன். நண்பர்கள் சிலர் என் மனநிலையை சந்தேகித்து கொண்டிருந்தார்கள். அப்போது தான் படத்தின் முக்கியமான பகுதி ஏழாம் உலகம் நாவலின் தழுவல் என்று கேள்விப்பட்டேன். படத்தின் வசனகர்த்தா ஜெ.மோ தான் ஏழாம் உலகத்தின் சிருஷ்டி கர்த்தா என்பதும் தெரிந்தது.மிகச்சமீபத்தில் தான் நாவலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிரண்டு போனேன்.தமிழில் இப்படிக்கூட எழுத ஆள் இருக்கிறார்களா??

சபிக்கப்பட்டவர்களின் உலகமே இந்த ஏழாம் உலகம் என்பது முன்னுரையிலும்,அட்டை விளம்பரங்களிலும் நமக்கு சொல்லப்பட்டுவிடும். நாம் எல்லா கூட்டங்களிலும்,கோவில்களுக்கு வெளியேயும்,வீதிகளிலும் உடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்களை தினமும் பார்க்கிறோம். என்றாவுது இவர்கள் எங்கே வசிக்கிறார்கள்? எப்படி தூங்குகிறார்கள்?, இவர்களுக்கு காதல் இருக்கிறதா?, குழந்தைகள் உண்டா என்பதெல்லாம் யோசித்ததுண்டா.. இல்லை என்பதே நம்முள் அனேக பேரின் பதிலாய் இருக்கும். இந்த நாவலில் ஜெ.மோ நம்மை இவர்கள்உலகத்துக்கு அழைத்துப்போகிறார்.உண்மையில் இழுத்து போகிறார் என்றே சொல்லவேண்டியிருக்கிறது. நாவலை வாசித்து முடிந்தவுடன் எல்லார்மனதிலும் ஒரு குற்றவுணர்வு வருவதை தடுக்க இயலாது. ஆங்காங்கே சில சித்தாந்தங்களையும் தெளிக்கத் தவரவில்லை ஜெ. நான் கடவுளில் ஒரு காட்சி. அகோரியான ருத்ரன் நள்ளிரவில் கோவிலுக்கு வெளியே நிறைய 'சாமிகளுடன்' கஞ்சா இழுத்து கொண்டிருப்பார். சுருட்டை பற்ற வைக்க ,கோவிலில் உள்ள தீபத்தை உபயோகிக்கப்போவார். ஒரு சாமி ,'அது கோயில் தீபம்' என ருத்ரனைபார்த்துப் பதறுவார். உடனே ருத்ரன் 'தீயில என்னடா நல்லது?? கெட்டது??' என கேட்பான். தியேட்டரில் பலத்த கைதட்டல் இந்த காட்சிக்கு. இப்படி அடர்த்தியான அர்த்தங்களை ஒரே வரியில் சொல்வது அரிது.


படத்திலும் நாவலிலும் சிலாகிக்க வேண்டிய இன்னொரு விஷயம் எந்த இடத்திலுமே போதனைகள் இல்லை. புரட்சி வசனங்கள் இல்லை. காட்சிகள் எதார்த்தமாய் அணுகப்படுகிறது. ருத்ரன் என்ற அகோரியை ஏழாம் உலகத்தில் சேர்த்துக் கொண்டுவிட்டார் பாலா.உண்மையில் இந்த படத்திற்கு பாலாவிற்கு தேசிய விருது கிடைக்காமல் போயிருந்தால் தான் ஆச்சர்யமாய் இருந்திருக்கும்.உடல் சவால் நிறைந்தவர்களை படம் முழுக்க நடிக்க வைத்திருப்பதின் பின்னணியில் கண்டிப்பாய் நிறைய உழைப்பு இருந்திருக்க வேண்டும்.

சினிமா என்றாலே அழகியல் சமாச்சாரங்கள், பதுமை பெண்கள், எழிலான காட்சிகள் என்ற கோட்டை தாண்டி ,ரோட்டில் எதெல்லாம் பார்க்க தயங்குகிறோமோ அதையே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பூஜா கடைசியில் பேசும் அந்த வசனம் அவ்வளவு கூர்மையாய் இருக்கும். இவ்வளவு நாள் நாம் கட்டி வைத்திருக்கும் நம்பிக்கைகள் எல்லாத்தையும் 'கட்டுடைத்தல்' செய்யும்.இரவில் படம் பார்க்கும் பட்சத்தில் தூங்க நெடு நேரம் ஆகும்.


விந்தணுவில் இருந்து புறப்பட்டு கருமுட்டையில் இணைந்து உருவாகும் 'உயிர்' , யாராய் பிறக்கும்?, யாருக்கு பிறக்கும்? என்பதெல்லாம் கடவுளின் சித்தம் என்கிறோம். அப்படி பூமியில் உயிராய் ஜீவிப்போர் கொடூரமான வறுமையிலோ, தாங்கொனா உடல் கோளாறிலோ பிறப்பது யாரின் சித்தம். ரோட்டில் அழுக்கு உடையுடன், பரட்டை தலை, ஒழுகும் மூக்குடன் பிச்சை எடுக்கும் சிறுவன் , ஐஸ்க்ரீம் பார்லர்களில் அமர்ந்து 'Chocobar'களை சுவைக்கும் குழந்தையை ஏக்கமாய் பார்க்கும் காட்சி பெரு நகரங்களில் தினமும்பார்க்கலாம். நாவலில் முத்தம்மை என்ற ஊனமுற்ற பெண்ணுக்கு பிரசவ நிகழ்வு தான் முதல் பகுதி. இந்த இடத்திலேயே மிரட்டி விடுகிறார் ஜெ.மோ. ' கதையில் கதா பாத்திரம் பீடி புகைத்தால் அந்த வாடையை வாசகனும் உணரனும்' விளக்கங்கள்,உவமானங்கள் பற்றி ஜெயகாந்தன் ஒருமுறை இப்படி சொன்னார். இங்க நம்ம ஜெ.மோ கிட்டத்தட்ட எல்லா பகுதிகளிலும் நம் மூக்கையும் வேலை செய்ய வைக்கிறார். இது பல இடங்களில் நமக்கு அருவருப்பை தருகிறது. உண்மையாய் சொன்னால் 'ஏழாம் உலகம்' என்ற முரட்டு கள்ளில் நிறைய தண்ணீர் ஊற்றியே பாலா கொடுத்திருக்கிறார். உருப்படிகளை வைத்து தொழில் நடத்தும் போத்திபண்டாரம், சித்தர் பாட்டுகளை பாடும் மாங்காண்டி சாமி, குசும்பு பிடித்த குய்யன், எருக்கு, முத்தம்மை என கதா பாத்திரங்களை வைத்து ஏழாம்
உலகத்தில் ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார்.



எப்போதும் நகைச்சுவையாய் பேசும் குய்யன் கதாபாத்திரம் மறக்க முடியாதது. பழனி அடிவாரத்தில் போத்திபண்டாரம் செய்யும் 'உருப்படி' வியாபாரத்தில் ஒருவன் இந்த குய்யன். இரண்டடியில் கால சூம்பிபோய் இருப்பவன். தன் முதலாளி பெண் கல்யாணத்தில் இலை போட்டு, வெள்ளை சாதம் வைத்து நல்ல குழம்பு ஊற்றி சாப்பிடலாம்.பாயாசம் வேறு கிடைக்கும் என சொல்லிக்கொண்டே இருப்பான்.தான் இதுக்கு முன்னாடி ஒருமுறை அப்பிடி சாப்பிட்டு இருப்பதாகவும் சொல்லுவான். கடைசியில் முதலாளி வீட்டு சாப்பாடு கிடைக்காமல் போக, குய்யன் ஏங்கி அழுவான். அவன் சுவற்றில் தலையை முட்டிக்கொண்டு அழுவது கொஞ்சம் நம்மையும் 'அசைத்து' பார்க்கும்.நமக்கு தினம் கிடைக்கும் சாப்பாடு சிலருக்கு இன்னும் கனவாகவே இருக்கிறது என்கிற உண்மை முகத்தில் 'சடார்' எனஅடிக்கும் இடம் இது.


உண்மைகள் அம்மனமானவை. அவைகள் எப்போதும் நம்மை சங்கடப்படுத்தும்.ஏழாம் உலகம் அதே போன்ற அனுபவத்தை தான் நமக்கு கொடுக்கும். படித்து முடித்தவுடன் 'கரண்ட் பாதி நேரம் இருக்கிறதே இல்லை', 'ஆபீஸ்ல உயிர வாங்குரானுங்க', 'இதே தோசையே எத்தன நாளைக்கு சாப்புடுறது' போன்ற புலம்பல்களை எல்லாம் கண்டிப்பாய் குறைத்துக்கொள்வோம். வானத்தை அன்னாந்து பார்த்து ஏங்கிக்கொண்டிருப்பவர்களை ,நமக்கு கீழே நசுங்கிகிடக்கும் உலகத்தை பார்க்க வைக்கிறார்கள்.

http://sivarajkamaraj.blogspot.in/2010/08/blog-post_17.html

No comments:

Post a Comment