Thursday, July 24, 2014

அருண்மொழித்தேவன் விமர்சனம்

சென்ற முறை நடந்த புத்தக கண்காட்சியில் இந்த புத்தகத்தை வாங்க முடியாமல் போனது. தமிழினி பதிப்பகத்தில் புத்தகம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். நண்பரும் பதிவருமான கார்த்திகேயன் தன்னிடம் இருந்த புத்தகத்தை எனக்கு தருவதாக சொன்னார், சென்ற முறை அவர் இந்தியா வந்த பொழுது அவரை சந்திக்க முடியாம போனதால் கொஞ்சம் ஏமாற்றம் மிஞ்சியது. கிழக்கு பதிபக்கதில் ஏதேனும்  புதிய வரவுகள் வந்து இருக்கிறதா என்று பார்க்க சென்ற போது பெரும் ஆச்சரியம் காத்து கொண்டு இருந்தது எனக்கு. ஏழாம் உலகம் புதிய பதிப்பை வெளியிட்டு இருந்தார்கள். முகப்பு அட்டையில்  ஒரு மனித முகம் உருகுவது போல இருக்கிறது, புத்தகத்தை படித்த பிறகு அதில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வும் இதே போல தான் உருகி கொண்டு இருக்கிறது என்கிற உண்மை தோன்றியது. படித்து முடித்து இரண்டு நாட்களாக முத்தமையின் கதறலில் இருந்து விடுபடமுடியவில்லை.


முதல் அத்தியாயம் படிக்கும் பொழுது மிக சிரமமாக இருந்தது, நாகர்கோயில் வட்டார வழக்கில் சிக்கி திணறி ஐயோ முதல் அத்தியாயமே இவ்வளவு கஷ்டமா இருக்கே என்று புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். அடுத்தநாள் மீண்டும் முதலில் இருந்து படிக்க ஆரமித்தேன் கொஞ்சம் போல புரிய ஆரமித்தது. மீள் வாசிப்பின் முலமே சில அத்தியாங்கள் எனக்கு புரியவந்தது. புத்தகத்தை படித்து முடிகையில் கடைசி பக்கத்தில் அகராதி இருக்கிறது, வட்டார வழக்கில் இருக்கும் சொற்களை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் அதன் அர்த்தங்களை வகைப்படுத்தி உள்ளார்கள். இது தெரியாமல் நாகர்கோவிலில் இருக்கும் நண்பனுக்கு போன் பண்ணி அர்த்தம் புரியாத வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டு கேட்டு அவன் உயிரை வாங்கினேன்.


நாவலில் உள்ள சில கதாபத்திரங்களை இங்கே அறிமுகம் (வேண்டாம் ஹ்ம்ம் இருக்கட்டும்) அறிமுகமே செய்கிறேன். 

பண்டாரம் இந்த நாவலின் கதாநாயகனும் வில்லனும் அவனே. முழுநேர தொழில் உடல் குறைபாடு உள்ளவர்களை பிச்சை எடுக்க வைத்து அவர்களின் மூலம் தன்னை  வளர்த்து கொண்டவன். பண்டாரத்துக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள். மகள்கள் மேல் அதிக பாசம் உள்ளவன், சின்னவள் கேட்ட வளயலுக்காக ஆசாரி வீட்டுக்கு நாடு இரவில் சென்று வாங்கி வருவதும், இரண்டாவது மகளை பார்க்க கால்கடுக்க நிற்பதும், அவளின் அலைசிய பார்வையை கண்டு ஒரு அப்பனாக உருகுவதும்.  மூத்த மகள் திருமண நாள் அன்று அவள் கேட்ட மாங்கா வைத்த நெக்லஸ் அப்பறம் வாங்கி தருவதாக கெஞ்சுவது. முத்தமையின் பிள்ளையை பாலிதீன் கவரில் போட்டு வைத்து பக்கத்தில் துணியை விரித்து வைப்பது.  எதற்கு எடுத்தாலும் அப்பனே முருகா,  ஞானபண்டிதா என்று உருகுவது. எல்லா வகை உணர்ச்சிகளையும் ஒரே மனிதனை கொண்டு ஆசிரியர் அசத்தியுள்ளார்.

போத்தி -  பண்டாரம் செல்லும் முருகன் கோவில் பூசாரி. கோவில் கருவறையில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது அதற்கு இவர் சொல்லும் காரணம் எல்லாம் படிக்கும் போது இனி சுவாமிக்கு செய்யும் எந்த ஒரு தீர்த்ததையும் கையில் கூட தொட கூடாது என்று முடிவு செய்தேன். பண்டாரம் மிகவும் கவலையா இருக்கும் சமயத்தில் அவருக்கு ஆறுதல் சொல்லி அவரை தேர்த்துவதும், கல்யாண மண்டபத்தில் பெண்ணின் அம்மையை அதட்டி அடக்கி வைப்பது என்று ஒரு தேர்ந்த நண்பனை போல பண்டாரத்தின் உடன் வந்து அனைத்தையும் முன்னின்று நடத்துகிறார். முத்தமையை முழுவதுமாக பார்க்கவும் ஆசைப்படுகிறார்.
முத்தம்மை.... என்னில் நீங்காமல் இருக்கும் அற்ப ஜீவன். முத்தமையை உருவத்தை ஆசிரியர் இப்படி வர்ணிக்கிறார் ( ஒரு மிகபெரிய வினோத பிராணி போலிருந்தாள். ஒரு கையும் ஒரு காலும் பெரிதாக திடமாக இருந்தன. இன்னொரு கையும் காலும் சூம்பி ஒரு வயது குழந்தையின் கைகால்கள் போல. முடியற்ற மிக பெரிய தலை ஒரு பக்கமாக சப்பியிருந்தது. ஒரே கண்தான். மறு கண்குழியில் ததும்பும் வெறும் சதையுருளை. முக்குக்குப் பதில் இரு சிறுகுழிகள். பெரிய வாயில் நான்கு பாக்கணும் சிதறிப் பரவிய நீண்ட மஞ்சள் பற்கள். வயிறு பெரிதாக உப்பி பளபளப்புடன் சற்று தழைந்து நின்றது. தொப்புள் விரிந்து ஒரு கறைபோல ஆகிவிட்டிருந்தது) இந்த பத்தியை படித்து கொஞ்ச நேரம் கண்ணை மூடி கொண்டு அந்த தோற்றம் எப்படி இருக்கும் என்று  யோசித்து பார்த்தேன் உடல் ஏதோ ஒரு வித அதிர்வலையை சந்தித்தது. ஏன் பிறந்தோம் என்று தெரியாமல் எதற்கு பெற்றோம், பெற்றது எல்லாம் எங்கே  என்றும் தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருந்த ஒரு சவம். பண்டாரத்தின் அட்சயபாத்திரம், பதினெட்டு வருடங்களில் பதினேழு பிள்ளைகளை பெற்றுடுத்து ஒன்று கூட தன்னுடன் இல்லாது நினைத்து நினைத்து ஏங்குகிறாள். கடைசியாக பிறந்த ரசினிகாந்த் கூட சில நாட்களில் பண்டாரம் வேறு ஒருவனிடம் விற்றுவிடுகிறான். மனதை கனக்க செய்யும் கடைசி அத்தியாத்துக்கு முந்தினது படித்து முடித்த போது முத்தம்மை என்னை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டாள்.  படித்து முடித்து மூன்று நாட்கள் என்னால் அவளின் கதறலில் இருந்து விடுபடமுடியவில்லை. மனதை அழுக செய்த கொடுரம் அது. 


பெருமாள், வண்டிமலை, சிடேன் நாயர்,  அகமதுகுட்டி, ராமப்பன், நாயர், எருக்கு, ரசினிகாந்த், குருவி, குய்யன், தாணுபிள்ளை, மாங்காண்டி சாமி, கூனன், பிக் பாக்கெட் ஆசாமி, கொச்சன் என்று நிறைய நபர்கள் சுற்றி சுற்றி வருகிறார்கள். அனைவரை பற்றியும் தனி தனியா சொல்லி கொண்டு இருந்தால் நாவலின் சுவாரஸ்யம் போய்விடும்.

அவர்கள் பேசுவதை பக்கத்தில் இருந்து கேட்டுகொண்டு இருந்தது போல, பார்த்துகொண்டு இருப்பதை போல அவ்வளவு நெருக்கத்தில் உள்ளது ஜெமோவின் எழுத்துகள். இந்த தொழில் செய்யும் மனிதர்கள் தங்களது வருவாயை பெருக்க உருப்படிகளை எப்படி வாங்கி விக்கிறார்கள் என்றால்  ஏதோ மாட்டு சந்தையில் கறவை மாடு வாங்குவது போல இருக்கும் அவர்களின் பேசுக்கள். கேரளா ஆள் ஒருவன் அதில் வக்கீல் வேறு. 

நாவலில் வலிகள் அதிகமாக இருக்கிறது யாரவது ஒருவர் அழுதுகொண்டோ, அடிவாங்கிகொண்டோ இருகிறார்கள். நக்கலுக்கும் நையாண்டிக்கும் வஞ்சனை இல்லாமல் அள்ளி தெளித்து உள்ளார் . பிச்சைகாரர்கள் தானே என்று இருந்துவிடாமல் அவர்களிடம் இருக்கும் நையாண்டி, அழுகை, தெரிந்து வைத்துள்ள சட்டம் சில விஷயங்களை பற்றி பேசும் போது அவர்கள் பிச்சை எடுப்பவர்களா என்கிற சந்தேகம் வருகிறது.  முத்தமைக்கு பிறந்த குழந்தையை ரசினிகாந்த் என்று அழைப்பதும், அவளை புணரும் அந்த ஒத்தவிரல் கூனனை கமல்காசன் என்று தமிழ் சினிமா ஹீரோகளை சிலரை ஆங்காங்கே நாவலில் இழுத்து விட்டு இருக்கிறார். ஒடுக்கப்பட்ட மனிதர்களின் வாழ்வை இவ்வளவு நெருக்கத்தில் இருந்து பதிவு செய்து இருப்பதே மிக பெரிய ஆச்சரியம், ஜெமோ அதை அற்புதமாக செய்துள்ளார்.  

நாவலின் குறை அந்த வட்டார வழக்கு நடைதான் ஆனால் அதுவே நிறைவும் கூட.  நிறைய இடங்களில் என்ன பேசுகிறார்கள் என்று படித்து புரிந்துகொள்வதற்கே பெரும் போராட்டமாக இருக்கிறது. முதலில் படிப்பவர்கள் புத்தகத்தின் கடைசியில் இருக்கும் அகராதியை முழுவதுமாக படித்து (முடிந்தால்) மனப்பாடம் செய்துவிட்டால் கொஞ்சம் சவ்கரியமாக இருக்கும் நாவல் படிக்கும் போது. கதாபாத்திரங்கள் பேசும் போது வாட்டர வழக்கில் இருக்கும் சம்பாஷனை, பத்தி என்று வரும் போது சாதாரண உரைநடையில் இருக்கிறது இது கொஞ்சம் ஆறுதல் தரும் விஷயமும் கூட.


மாங்காண்டி சாமி பாடும் இந்த பாடலுடன் நாவல் நிறைவுப்பெருகிறது.

வெண்ணிலா அறியாதோ
    வெந்துருகும் எம்மனசை?
விண்ணுக்குப் போகாதோ
    விம்மி அழுவதெல்லாம்?
சொன்ன சொல்லை மறப்பாரோ
    சொந்தமிதை விடுவாரோ
என்னவென்று எண்ணியெண்ணி
    ஏங்கிடுவேன் வெண்ணிலாவே'
முத்தமையின் கதறலுடன் துவங்கிய கதை அவளின் கதறலுடன்  முடிவடைகிறது. 

http://romeowrites.blogspot.in/2010/07/blog-post_06.html

No comments:

Post a Comment