Thursday, July 24, 2014

ஹரன் பிரசன்னா விமர்சனம்- மரத்தடி

ஜெயமோகனின் நாவல்கள் எந்தத் தளத்தில் இயங்கினாலும் அந்தத் தளத்தில் ஆழ ஆழச்சென்று அது இயங்கும் சூழலின் மனிதர்களை இரத்தமும் சதையுமாகக் கண்முன் நிறுத்தும். அவர்களின் வட்டார மொழி நம்மை அவர்களின் உலகத்திற்குள் இட்டுச் செல்லும். தமிழ்நாடு-கேரள எல்லையில் பேசப்படும் தமிழுமல்லாத, மலையாளமுமல்லாத, இரண்டும் கலந்த மொழிதான் ஏழாம் உலகத்திலும் கையாளப்பட்டிருக்கிறது. விஷ்ணுபுரம் மற்றும் பின் தொடரும் நிழலின் குரலை ஒப்பிடும்போது ஏழாம் உலகம் எளிதான நடையிலிருக்கிறது.
ஜெயமோகனின் ஆறாவது நாவல் இது. பழநியில் குறைப்பிறவிகளைப் பிச்சை எடுக்க வைப்பதை ஒரு தொழிலாக நடத்தும் பண்டாரத்தையும் குறைப்பிறவிகளையும் மையமாக வைத்துக் கதை சுழல்கிறது. நம்மையும் சுழற்றுகிறது. கதையின் களமும் போக்கும் நம்மை பதறச்செய்கிறது, அருவருப்புக் கொள்ளச் செய்கிறது, மனதுள் புகுந்து பதிலற்ற கேள்விகளை எழுப்புகிறது. 1986களில் நிகழ்வதாக வரும் கதையின் நிகழ்ச்சிகள் நாம் நாகரீகம் அடைந்தவர்கள்தானா என்ற கேள்வியை தவறாமல் எழுப்புகிறது. நம்மைச் சுற்றிய, நாம் கவனிக்கத் தவறிய மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றிய பிரக்ஞையை உருவாக்குகிறது. எப்படி நாம் கவனிக்காமல் போனோம் என்கிற பதைபதைப்பையும்
உருவாக்குகிறது.
குறைப்பிறவிப் பெண்ணான முத்தம்மையை இன்னொரு குறைப்பிறவியோடு அணையச் செய்து, பிறக்கும் குறைப்பிறவியை பழநியில் வைத்து பிச்சை எடுக்க வைக்கிறார்கள். இதையே தொழிலாக நடத்தும் இன்னொரு பார்ட்டிக்குக் கைமாற்றுகிறார்கள். பெரிய அளவில் நடக்கிறது வியாபாரம். அதிகம் குறையுள்ள, பார்க்கவே பயங்கரமாக இருக்கும் பிறவி அதிக விலைக்குப் போவார். பிறந்த குறைப்பிறவியை தாய்ப்பாசத்தோடு முத்தம்மை கொஞ்சும் இடங்களும் தன் குழந்தையை ஒரு தடவையாவது கொஞ்சிவிடவேண்டும் என்று விரும்பும் முத்தம்மையை அணைந்த குருடனும் நாவலின் பல இயல்பான பாத்திரங்களின் ஒரு பகுதி.
இப்படியான மிக அவருவருப்பான சூழலுள் நகரும் கதையினூடே ஒன்றிற்குள் ஒன்றாகப் பிணைந்து கிடைக்கிறது எழுத்தாளரின் நகைச்சுவை உணர்வு. அதற்குப் பெரும்பலமாக அமைகிறது வட்டார வழக்கு. முத்தம்மை தனக்குப் பிறக்கும் குறைப்பிறவி மகனுக்கு “ரசனிகாந்து” என்று பெயர் வைத்துக் கொஞ்சுவதும், நிரபராதி என்கிற வார்த்தை குய்யனுக்குப் பிடித்துப்போக நேரம்கிடைக்கும் போதெல்லாம் நிரபராதி எனப் பயன்படுத்துவதும் அதைக்கேட்டு எரிச்சலில் ராமப்பன் சீறுவதும்- என விரிகிறது கதையில் நகைச்சுவை. இவையெல்லாமே வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு, யாரோ ஒரு எஜமானனுக்காக கையேந்திப் பிச்சையெடுக்கும் வாழ்வு வாழ்பவர்களின் வறுமை சூழலில் இயல்பாக வருகிறது. போலீஸ் கேஸில் இருந்து தப்பிக்க பெருமாள் எருக்கிற்குத் தாலி கட்ட, எருக்கு பெருமாளைக் காணும்போதெல்லாம் “இஞ்சேருங்க” என்றழைக்கும் இடமும் பெருமாள் கொதிக்கும் இடமும் அசத்தல்.
பண்டாரம் முதல் பெண்ணுக்காக வரன் பேசிக்கொண்டிருக்க, அக்காவின் நகைகளையெல்லாம் திருடிக்கொண்டு ஓடிப்போகிறாள் இரண்டாவது பெண். பண்டாரம் நிலை குலைந்து போனாலும் ஒருவாரியாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு முதல் பெண்ணுக்குக் கல்யாணம் செய்துவைக்கிறார். ” நான் இண்ணி தேதிவரை ஒருத்தருக்கு ஒரு கெடுதல் நினைச்சிட்டில்ல.. உன்னாணை ஏக்கி…. நான் ஒரு ஆளிட்ட கெடுத்து ஒரு சொல்லு சொன்னதா நீ கேட்டேண்ணாக்க என்னைய, இப்படி – இப்படி கூப்பிடு” என்று பண்டாரம் தன் மனைவி ஏக்கியம்மாவிடம் சொல்லும் வசனம் கதையின் வரும் இயல்பான வசனங்களில் ஒரு மைல்கல். தான் செய்வது குறைப்பிறவியை வைத்துச் செய்யும் தொழில் என்றாலும் மற்ற எல்லா மனிதர்களைப் போலவே பண்டாரமும் பேசுகிறார். நிஜமாகவே இப்படித்தான் இருக்கிறது உலகம். “நாம யாருக்கும் ஒரு கெடுதல் செய்யலை” என்று சொல்லாதவர்களே இல்லை.
விரை பெருத்துத் தொங்கும் அகமது ஆங்கிலத்தில் பேசுவதும் சட்டம் பேசுவதும் கோயிலுக்குப் பூசை செய்யும் போத்தி கர்ப்பகிரகத்துக்குள்ளேயே வெற்றிலைத் துப்புவதும் கோவிலில் பிச்சையெடுக்கும் குறைப்பிறவியான முத்தம்மையை ஒரு தடவை முழுதாகப் பார்க்க ஆசைப்படுவதும் நிகழ்முரண்கள்.
பண்டாரம் முருக பக்தராக இருக்கிறார் என்றாலும் நாவல் நெடுகிலும் குறைப்பிறவிகள் மத்தியில் தெய்வம் கேலிப்பொருளாக்கப்பட்டிருக்கிறது. “ஆண்டவன் பாத்துக்கிடுவான்” என்று ஒரு குறைப்பிறவி சொல்லும்போது இன்னொருவர் “ஆண்டவன் மோண்டான்” என்பதும் ஒரு பாலியல் தொழிலாளி படிகளில் கீழேயிறங்கிவரும்போது, மேலே யாருடா இருக்கா என்ற கேள்விக்கு “மேல முருகன் இருக்கான்” என்ற பதிலுமாக குறைப்பிறவிகள் தெய்வத்தின் மீது பற்றில்லாதவர்களாகவும் நிறைய நிந்தனை செய்பவர்களாகவுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவை கதாபாத்திரங்கள் சொல்பவையாகவும் சரியாகவும் கையாளப்பட்டிருக்கிறது.
குறைப்பிறவிகள் மத்தியில் பேசப்படும் மொழி ஆபாசம் கலந்த மொழியாக இருந்தாலும் எங்குமே நெருடவில்லை என்பது வட்டார வழக்கின் பலம். சர்வ சாதாரணமாகப் பேசிக்கொள்ளும்போது கூட உறவுமுறை குறித்த கேள்விகளும் ஆபாச வார்த்தைகளும் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. அவையெல்லாமே அவர்களின் அன்னியோன்யத்தின் அடையாளமாகவும் பொழுதுபோக்கின் ஒரு பகுதியாகவும் நாவலைக் கடக்கிறது.
தன்னிச்சையாகப் பாட்டுப்பாடும் குறைப்பிறவிகளுள் ஒருவரான மாங்காண்டி சாமியும் , கிழவியும், தாணுப்பிள்ளையின் மனைவியும் சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள்.
காலில்லாத பெண்ணை இரவுக்கு அழைத்துச்செல்லும் போலீஸ், அந்தப் பெண்ணை திரும்ப அழைக்கச் செல்லும் பண்டாரத்திடம் பணம் பிடுங்குவதும் அவரை அடிப்பதும் இந்தத் தொழிலிலும் பண்டாரம் படும் அல்லலைக் காண்பிக்கிறது. அஹமதுவின் கமெண்ட்டுகள் கேரள அரசியலைப் பற்றிய அவனது குமுறலைச் சொல்கிறது. ரஜினிகாந்த் போஸ்டரும் நான்கு இலக்க தொலைபேசி எண்ணும் எம்.ஜி.யார் பற்றிய சம்பாஷனைகளும் 1986ஐ நினைவுக்குக் கொண்டுவருகின்றன.
ஒருமுறையாவது குறையற்ற ஒருவனுடன் அணைந்து குறையற்ற குழந்தை பெற ஆசைப்படும் முத்தம்மை, மலக்குவியலில் “ஒடயாரே இவன் வேண்டாம். ஒத்த வெரலாக்கும் ஒடயாரே” என்று கூவித் தோற்று “என்றெ பொன்னு தெய்வமே” என்னும்போது முற்றிலும் நம் பார்வையில் வராத ஒரு உலகத்தின் ஒட்டுமொத்த தோற்றமும் வளைய வருகிறது. ஏழாம் உலகம் என்பதற்கான விளக்கமும் ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாகச் சொல்லப்படுகிறது.
கதை அதற்கான நடையை அதுவே தேர்வு செய்துகொள்வது இயல்புதான் என்றாலும் மற்ற ஜெயமோகனின் நாவல்களில் காணப்படும் சவாலான நடையில்லாதது அவரது கதையைத் தொடர்ந்து வாசிக்கும் நுட்பமான வாசகர்களுக்குக் கதையின் பலவீனமாகத் தோன்றும். “பெரும்பாலும் நேரடி அனுபவ அடிப்படை மட்டுமே இதில் உள்ளது. ஆகவே நாவலின் களம் மிகச் சுருங்கிவிட்டது. வேறு வழியில்லை” என்கிறார் ஜெ.மோ. அதனால்தானோ என்னவோ நாவல் அதிகம் சம்பாஷணைகளைக் கொண்டதாகவும் வர்ணனைகள், தற்சிந்தனைகள் அற்றதாகவுமாகி ஒரு எளிய நாவல் என்கிற தோற்றத்தைத் தந்துவிடுகிறது.
காடு நாவல் மிகச்சிறப்பான நடையையும் சரியாகப் பயன்படுத்தப்பட்ட வட்டார வழக்கையும் கொண்டிருந்தாலும் அதிலிருந்த ஒரு வெறுமை ஏழாம் உலகத்தில் களையப்பட்டிருக்கிறது.
கதையில் வரும் மலையாள வார்த்தைகளுக்கும் பிரத்யேக வட்டார வழக்கிற்கும் பிற்சேர்க்கையாக பொருள் கொடுத்திருக்கிறார்கள். அதைப் பற்றிய குறிப்பு ஒன்றை நாவல் ஆரம்பிப்பதற்கு முன்பு கொடுத்திருந்தால் வசதியாக இருந்திருக்கும். நாவல் படிப்பவர்கள் புரியாமலே படித்துவிட்டுக் கடைசிப் பக்கத்தைப் பார்க்கும்போது வார்த்தைகளுக்கு விளக்கம் இருக்கும். இதனால் என்ன பயன்? அடுத்த பதிப்பிலாவது முதல் பக்கத்தில் ஒரு குறிப்பைத் தருவது நல்லது. ஜெயமோகனின் மற்ற நாவல்களில் இல்லாத இந்தப் பிற்சேர்க்கை பாராட்டிற்குரியது.
நன்றி

No comments:

Post a Comment