நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது 'ஜெயமோகனின் காடு நாவல் காமத்தைப் பற்றியது. முழுக்க முழுக்க மனிதனின் காதலைப் பற்றிப் பேசிய நாவலாக அவரது ஏழாம் உலகத்தைப் பார்க்கிறேன்' எனச் சொன்னேன். உண்மையில் இதுதான் எனது அபிப்ராயம். அவரைச் சீண்டுவதற்காகச் சொன்ன வழக்கமான வார்த்தை என எடுத்துக்கொண்டு பயங்கரமாகச் சிரித்தார். நான் முகத்தை சீரியசாக வைத்திருப்பதைப் பார்த்துவிட்டு, ’சும்மா விளையாடாதப்பா, அப்பழுக்கற்ற குரூரம வெளிப்பட்ட நாவலாகத்தான் எனக்கு ஏழாம் உலகம் தெரிந்தது’ எனச் சொன்னார்.
விஷ்ணுபுரத்தில் நோய்மை பற்றியும் குஷ்டரோகிகளும, சாக்கடைகளும் நிரம்பியதையும் பக்கம் பக்கமாக எழுதியவர் ஏழாம் உலகில் அத்தனை ஆழத்துள் போகவில்லை பார்த்தியா? முடம், கூனன் என எல்லாரின் புறத்தோற்றத்தை மிகக் கொடூரமாகச் சித்தரிக்க முடியும். ஆனால் அவர்கள் எல்லாருக்குள்ளும் இருந்த காதலை ஆசையை மட்டுமே முதன்மைப்படுத்திய படைப்பு. இவர்களது உலகம் அன்பே உருவானது. அதைச் சுற்றியிருக்கும் சமூகக் குரூரங்கள் எத்தனை எத்தனை?
சாதாரண வாழ்வை நினைத்து ஏங்குபவர்கள், மாறாத விதிப்படி வாழ்வு நடத்தினாலும் பதினைந்தாவது குழந்தையைப் பெற்றெடுத்து பாசத்தைப் பொழியும் முடமானத் தாய், பெருநோய்வாய்ப்பட்ட பிச்சைக்காரர்களாக இருந்தாலும் மற்றவர்களது உடம்பு உபாதைக்கு மருத்துவம் சொல்பவர்கள் எனப் பலதரப்பட்ட மனிதர்கள். உடலில் குறையோடு நோயுள்ள இவர்களைப் பார்த்து அருவருப்பொடு விலகி ஓடும் பெருவாரியான மக்களுக்கு தங்களது சமூக நோய்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. நோயற்ற உடம்பு, சிறு சந்தோஷங்களுக்கு ஒப்புகொடுக்கப்பட்ட வாழ்வு எனச் சின்னஞ்சிறு வட்டத்துக்கு அதிபதியாக இருந்துகொண்டு மற்ற மனிதர்களை அடிமைப்படுத்துபவர்கள்.
இந்த நாவலுக்கு விமர்சனம் எழுதிய சு.வேணுகோபால் ‘அறம், கருணை, மனிதாபிமானம் என்றெல்லாம் நாம் காலங்காலமாக வளர்த்து வரும் நம்பிக்கைகளை இந்தநாவல் வேரோடு பிடுங்கி விடுகிறது’ என எழுதியிருந்தாலும், எனக்கென்னவோ நமது அன்றாட உலகின் சுக துக்கங்களைப் போலவே சமூகத்தின் பாதாளத்தில் வாழும் இந்த ஏழாம் உலகவாசிகளின் உலகிலும் அனைத்தும் உள்ளது போலத்தோன்றியது. அவர்களுக்கென ஆசைகளும், கடவுள்களும், நம்பிக்கைகளும், ஏக்கங்களும், கீழ்மைகளும், கடவுளர்குணங்களும் நிரம்பிய முழுமையான உலகமே ஜெயமோகனால் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர்களது உலகை கைவசப்படுத்தி பிழைக்க நினைக்கும் மக்களின் இருண்ட பக்கங்கள் தான் நாவல் முழுவதும் நிரம்பியுள்ளன. ஒரு மூட்டை உருளைக்கிழங்கு வாங்குவதுபோல கூனர்களையும், முடமானவர்களையும் வைத்து வியாபாரம் செய்யும் பண்டாரம், ஏஜெண்டாக வேலை பார்க்கும் வண்டிமலை, பழனியில் மனித வியாபாரம் செய்யும் ஸ்ரீகண்டன் நாயர், இவர்களிடமிருந்து பணம் பிடுங்கும் போலிஸ் அதிகாரிகள் என நம்மைச் சுற்றியுள்ள உலகின் கழிவுகள் தான் நாவலில் பிரதானமாக வெளிப்படுகிறது.
முடமானவர்களைப் புணரவைத்து கூட்டத்தையும் தங்களது தொழிலையும் அபிவிருத்தி செய்யும் நிகழ்வு கொடுமையின் உச்சகட்டம். தன்னைச் சுற்றியுள்ளோரின் உழைப்பை சுரண்டுவதற்காக மனிதன் எத்தனை கீழ்நிலையை வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறான். அரசும், சமூகமும் கண்டுகொள்ளாத இந்த உலகத்தை கடவுளர்கூட கைவிட்டதாக நாம் சொல்லிக்கொண்டாலும், இந்த மக்களுக்கென நம்பிக்கைகளும் கடவுள்களும் இருக்கின்றன. காலத்துக்கேற்ப நியாயங்கள் மாறுவது போல, அவர்களது உலகத்தின் நியாயங்களும் தனிப்பட்டவையாக இருக்கின்றன. பெரிய எதிர்பார்ப்பில்லாத, உடலால் எல்லைக்குட்பட்ட அவர்களது உலகில் தங்களுக்குள்ளாக அமைந்திருக்கும் சந்தோஷங்களும், மனோத்துவங்களும் வாழ்வளிக்கின்றன. நாவலைப் படித்து முடித்ததும் யார் ஏழாம் உலகில் இருக்கிறார்கள் எனும் சந்தேகம் நமக்கும் வருகிறது - சின்னஞ்சிறிய சந்தோஷங்களுக்காக சகமனிதனை சுரண்டும் நமது சமூகமும், சிறு குழந்தையின் தொடுகைக்காகப் பல வருடங்களாகக் காத்திருக்கும் கூனனின் வாழ்வும் காட்டும் முரண் சதா நம்மைச் சுற்றி வலம் வருகிறது.
மூர்க்கமான இந்த உலகினுள், மானுடத்தின் மொத்த கனிவுகளையும் கைப்பிடிக்குள் மறைத்துவைத்திருக்கும் முத்தம்மையின் பாந்தம், காதலின் பரிவு, பாவனை, தீவிரம், வெட்கம், என அனைத்தையும் கைக்கொண்ட எருக்கு எனும் பாத்திரம், மானுட உயிரின் கடைக்கோடிக்கும் தனது வாழ்வை அளிக்கவ்ல்ல வல்லமையோடு பிறந்திருக்கும் குய்யன், கைகூடாக் காதலின் ஆற்றாமையை தனது வாழ்க்கைச் செய்தியாக மாற்றியமைத்திருக்கும் மாங்காண்டி சாமி என ஏழாம் உலகின் பாத்திரங்கள் அனைத்தும் அன்பில் தோய்ந்த உயிர்சித்திரங்கள். தங்களுக்கிடப்பட்ட விதியை நொந்துகொள்ளாது மானுட அன்பே உடலாகவும், வாழ்வே கொண்டாட்டமாகவும் இருப்பவர்கள். மறந்தும் தங்களது நிலைக்குக் காரணமாக சமூகத்தைச் சாடாதவர்கள் - கையருகே அவர்களை இழிவுபடுத்தும் சமூகத்தை ஒரு அபத்தப் பார்வை, பரிவுப் பார்வை பார்க்க இவர்க்ளால் முடிகிறது (’சினிமா நடிகைங்கெல்லாம் ஏன்யா இப்படி டிரெஸ் போடறாங்க? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பசி. இந்த் மனுஷங்களை நினைச்சா சிரிப்பா இருக்கு’)
சணப்பிக்கும் முத்தம்மைக்கும் குழந்தை தொடர்பாக நடக்கும் சம்பாஷனை நாவலில் மிக முக்கியமான நிகழ்வாக நான் எண்ணுகிறேன். தங்களது குறைகளே புது உருவெடுத்து வரப்போவது தெரிந்தும் குழந்தை எனும் வரப்பிரசாதத்தைப் பற்றி உருக்கமான அன்னியோன்னியமாக அவர்கள் இருவரும் பேசுவது நாவலில் மகத்தான தருணம். சம்பாஷனையினைக் கேட்டால் கடவுளுக்குக்கூட தான் இருக்கும் இடத்தைப் பற்றிய சந்தேகம் உண்டாகும்.
‘சணப்பியின் முகம் தீயின் தழலில் தகதகத்தது. அதில் ஒரு சிரிப்பும் கூச்சமும் ‘எப்படிக்கா இருக்கும்? கூசுமா?’’
முதல் குட்டிய மட்டும் நல்ல ஓர்மையிருக்கு அக்கா. அது எனக்கு கேறுமிண்ணு நான் சொப்பனத்திலயும் நெனைக்கலை. பத்து மாசம் தரையிலா நிண்ணேன்?..அது ஒரு வரத்துல்லா. கண்ணில்ல, கையிலும் காலிலயும் ஒரோ ஒரு விரலு மட்டும்தான். கூனமுண்டு. மாறிலயும் வயித்திலயும் அடிசுட்டுல்லா கரைஞ்சேன். கொரவளையில கைய வச்சா கை அமுங்காது. பத்து மட்டம் தடவினா கை வளராதாண்ணு நெனைச்சேன் அக்கா. கண்ணில நிக்குது அக்கா அந்த ஒத்தக்கை வெரலு...’
‘உனக்கு அந்தப் பெயல பாத்தா தெரியுமாட்டி?’
‘அதுக்கு இப்பம் பதினேழு பதினெட்டு வயசிருக்கும்லா. எனக்க கண்ணில நிக்குது அதுக்க சின்ன சரீரமாக்கும். ஒரு வயசிலயில்லா வெலை கொடுத்து தூக்கிட்டுப் போனாவ. ஏழெண்ணம் பெண்ணாக்கும். ஒண்ணையும் நான் கண்டிட்டில்ல. ஆனா ஒண்ணு சொல்லுதேன் அக்கா, தொட்டா அப்பம் அறிஞ்சு போடுவேன்.எனக்க பிள்ளய தொட்டா அப்பாம் அறிஞ்சு போடுவேன்..’
கடைசியில் தன்னுடன் புணரவைக்கும் இளைஞ்னுக்கு ஒற்றை விரல் இருப்பதை உணர்ந்து ‘ஒடயாரே இவன் வேண்டாம் ஒத்தை வெரலு..இவன் மட்டும் வேண்டாம் ஒடயாரே’ என முத்தம்மை கதறும்போது நாம் அதிர்ந்துபோகிறோம். நம்மில் ஏதோ ஒரு துண்டு உடைவது போன்ற ஒரு கொடூரக் கதறல். முத்தம்மை அந்த நொடியிலேயே செத்தால் என்னவென்று தோன்றிவிடுகிறது.
ஒடுக்கப்பட்ட மக்களின் கதைதான் என்றாலும், ஏழாம் உலகத்து வாசிகள் அனைவரும் கடவுளின் விஷேக் குழந்தைகள். சாத்தானின் ஆளுகைக்கு உட்பட்ட அவர்களது உலகில் சந்தோஷமும், அந்நியோன்யமும், அளவிடமுடியாத அன்பும், மிகையிலாத உறவுகளும் அள்ள அள்ள குறைவில்லாமல் வெளிப்படுகின்றன. நாவலின் எந்த இடத்திலும் தங்களுக்கு இடப்பட்ட வாழ்வைப் பற்றிய பெரிய சலிப்புகளும், குறைளும் வெளிப்படுவதில்லை. சபிக்கப்பட்ட இம்மனிதர்கள் பசியடங்காத சமூகத்தின் இரைகள்.
கஞ்சிக்கில்லார் அதன் காரணங்கள் இவை என அறிவுமிலார் எல்லா உலகிலும் இருப்பதுபோல ஏழாம் உலகிலும் உண்டு. பண்டாரத்தின் மனைவி ஏக்கியம்மை போல கண்டும் காணாதது போலிருப்பவர்கள் ஒருபுறம், சின்ன மகளுக்காக நள்ளிரவில் நகை செய்ய ஊரூராய் அலையும் பண்டாரத்தின் தந்தையுள்ளம், பெருவட்டனின் மகனோட தனது பெண் நெருக்கமாகப் பழகுகிறாள் எனத் தெரிந்ததும் வரும் சீற்றம், பெரிய மகளின் திருமணத்துக்காக பிள்ளைவீட்டம்மாளின் அசிங்கமான வசவுகளைப் பொறுத்துக்கொளவதிலும் பண்டாரத்தின் மிக இயல்பான முகம் வெளிப்பட்டுள்ளது. முருகனே துணை என உருப்படிகளைக் கொண்டு வியாபாரம் நடத்துவதில் மனசாட்சியற்று இருப்பவராகத் தெரிந்தாலும், தான் செய்வதில் இருக்கும் குரூரத்தை மனம் ஏற்றுக்கொளவதில்லை. குறிப்பாக சிறுவர்களின் கண்களைப் பிடுங்கி பிச்சை எடுக்க வைப்பதில் பெரிய லாபம் இருக்கு எனத் தெரிந்தும் பண்டாரத்தின் மனசாட்சி இடம்கொடுப்பதில்லை , ரிஸ்க் அதிகம் எனத் தப்பித்துக்கொள்கிறார். அவரது சின்ன மகள் பெருவட்டரின் மகனுடன் வாழ்ந்து வருகிறாள் எனத் தெரிந்து அத்தெருவில் காத்திருக்கும் பண்டாரம் நம்மை நெகிழ வைக்கிறார். அவ்ள் ஏன் பண்டாரத்தை உதாசினப்படுத்துகிறாள்? அவள் வாழும் சீர்கெட்ட வாழ்வை காட்சிப்பொருளாக மாற்றும் விருப்பமில்லாததாலா? பண்டாரத்தின் வியாபாரம் பிடிக்காமல் ஒதுங்குவதாலா?
நண்பர் சுனில் கிருஷ்ணன், ’நாளை மற்றொரு நாளே’ குறுநாவலைப் பற்றிய விமர்சனத்தில் கந்தனின் குணவார்ப்பாகப் பண்டாரம் இருப்பதாக எழுதியிருந்தார். வெளிப்படையாகப் பார்த்தால் கந்தனைப் போல தனது குடும்பப் பாசத்தில் யாருக்கும் குறைந்தவரில்லை பண்டாரம். ஆனால், ‘உருப்படி’களை விற்று காசாக்கி குடும்பத்தையும் தனது பெண்களையும் சுகபோகமாக வாழவைக்க நினைக்கும் பண்டாரம் அக்கனவு நடவாதபோது தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தைச் சாடவில்லை. விளிம்பு நிலை வாழ்க்கை வாழ்வதற்கு தன்னைச் சுற்றியுள்ள சமூகமும் சூழலும் மட்டுமே காரணம் எனக் கந்தன் நினைப்பது போல் பண்டாரம் நினைப்பதில்லை. நாகராஜனின் பாத்திரங்கள் தங்களது ஒடுக்கப்பட்ட வாழ்வை பக்குவத்தோடு ஏற்றுக்கொள்வதில்லை. சமூகத்தின் சுகத்துக்காகப் பலிகாடாவாக்கப்பட்டவர்கள் எனும் எண்ணம் கொண்டவர்கள். பண்டாரம் போன்றோருக்கு சமூகத்தில் தாங்கள் விதைக்கும் விஷமும் புரிவதில்லை, தங்களது கீழ்மைகளுக்குக் காரணம்காட்டித் தப்பிக்கவும் தெரிந்தவர்களில்லை.
உலகியல் இன்பங்களுக்காக எதையும் பொருட்படுத்தாத உலகம் ஒரு புறம், நேசத்தைப் பரிமாறிக்கொள்வதில் தாயுள்ளம் நிரம்பி வழியும் மனிதர்கள் ஒரு புறம் என சதா நம்மைச் சுற்றியிருக்கும் உலகின் குரூரங்களை காட்சிப்படுத்தியபடி இருக்கிறார் ஜெயமோகன். நாவலின் ஒவ்வொரு வரியிலும் ஏழாம் உலகம் என கண்ணுக்குத் தெரியாத பாதாளத்தை உருவகித்திருக்கும் நமக்கு நம்மைச் சுற்றியுள்ள உலகின் பல பரிமாணங்களைக் காட்டுகிறார். கடைசித் துளி அன்பைக் கூட வியாபாரப்பொருளாக்கும் பண்டாரம் போன்றோரின் பெண் பாசமும், கனிவும் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. எது ஏழாம் உலகம்? அரக்கர்களும் கொடூரர்களும் இருக்குமிடமாக கற்பனை செய்யும் பாதாளம் எனும் ஏழாம் உலகம் நம்மிலும், நம்மைச் சுற்றியிலும் இருக்கிறது. அதில் கண்டடையப்படும் அன்பும், காருண்யமும் மனிதத்துவத்தின் அடையாளங்கள். அவற்றின் எச்சங்களைக் கண்டடைவதும், அள்ளிப்பருகிய நீரின் ஈரம் காய்ந்துபோகாமல் கையகப்படுத்துவதும் உன்னதம் அமையும் தருணங்கள்.
ஏழாம் உலகம்
ஆசிரியர் : ஜெயமோகன்
பதிப்பகம் - கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 280
http://omnibus.sasariri.com/2012/10/blog-post_30.html
No comments:
Post a Comment