சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் பிச்சைக்காரர்கள் உருவாக வழி செய்ததாக டாக்டர்கள் மீது புகார் எழுந்தது. பொதுமக்கள் மனதில் கழிவிரக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஒரு சில ரூபாய்களைப் பெறுவதே பிச்சைக்காரர்களின் நோக்கம்.திடகாத்திரமாக இருப்பதாகத் தோன்றினால் பிச்சை போட எவருக்கும் மனம் வராது.ஒன்றுமே செய்ய இயலாத ஊனம், கண் பார்வை மட்டுமின்றி கண்ணே இல்லாமல் இருத்தல் போன்றவை நம் மனதை குலுங்கச் செய்து நாம் நன்றாக இருக்கிறோமே என்ற நிம்மதிக்காக பிச்சையிட வைக்கிறது. இதனால் பிச்சை எடுக்க முடிவு செய்வோருக்கு கை, கால்களை வலியில்லாமல் அறுவைச்சிகிச்சை மூலம் வெட்டி எடுத்து முடமாக்கி அதன் மூலம் நல்ல வருமானம் பார்த்ததாக மும்பை மருத்துவர்கள் சிலர் மீது புகார் எழுந்தது.
முன்பொரு காலத்தில் ராப்பிச்சைக்காரர்கள் என்போர் இரவில் வந்து சோறு வாங்கிச் செல்வர். அவர்களுக்காகவே வீடுகளில் மீதியான உணவை சேர்த்து வைத்துப் போடுவதை அறிவோம். ஆனால் இன்று யாரும் பழையசோறு கேட்டு பிச்சை எடுப்பதில்லை. காசுதான் வேண்டும் என்று கேட்கிறார்கள். இந்த பொருளியல் மாற்றம் அவர்களின் தேவை சார்ந்து எழுந்ததாகத் தெரியவில்லை. உணவுதான் பிரச்னை என்றால் அதற்கு தகுந்த பிச்சை போதும். ஆனால் அதையும் மீறி அவர்கள் பணம் சேர்க்கும் ஒரு தொழிலாகப் பார்க்கும் பொருளியல் பார்வை வந்ததற்கு அவர்கள் மட்டுமே காரணம் என்று கூற முடியாது. அவர்களை வைத்து இயக்கும் மனிதக் கும்பலின் கூட்டு மனமே காரணம்.
ஓரிரு வருடங்களுக்கு முன் திருச்சியில் பிச்சைக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையின்போது ஒருவரின் அழுக்கு மூட்டைப் பிரிந்து விழுந்ததில் ஏராளமான ரூபாய் நோட்டுக் கட்டுகள் அழுக்கடைந்து கிடந்ததும், அதில் பாரத ஸ்டேட் வங்கியின் சேமிப்புக் கணக்குப் புத்தகம் இருந்ததும் அதில் சில லட்சங்கள் இருப்பு இருந்ததும் தெரிந்து அப்பகுதியினர் ஆச்சரியமடைந்தனர். தொழில் நிறைந்த திருப்பூரில் எப்போதும் ஆட்களுக்கு தேவை இருக்கிறது. ஆனால் அங்கும் பேருந்து நிலையத்தில் குழந்தைகளுடன் பிச்சை எடுப்போர் ஏராளம். ஆக வயிற்றுப்பாடு மட்டுமல்ல அவர்களின் தேவை. அவர்களுக்குப் பின்னால் யாரோ இருந்து இயக்குகிறார்கள் என்பதே அதன் பொருள்.
ஜெயமோகன் எழுதிய “ஏழாம் உலகம்” நாமறியாத ஓர் இருள் சூழ்ந்த உலகத்திலிருந்து அள்ளி கையில் கொடுத்த கைப்பள்ளத்து நீர். அதன் இயல்பே அந்த இருண்ட உலகத்தின் மொத்த உருவத்தின் பிரதிநிதியாக இருக்கிறது.
போத்திவேலுப் பண்டாரம் தான் நாவலை இயக்கிச் செல்பவர். ஆனால் நாவல் முழுக்க அவர் மீது வெறுப்புக்கும் பரிவுக்கும் இடைப்பட்ட ஒரு உணர்வே வருகிறது. அவருக்கு பிச்சை எடுப்பதுதான் தொழில். அதாவது அடுத்தவர்களை பிச்சை எடுக்க வைத்து அதன் மூலம் வருமானம் பார்ப்பது. அவரைப் பொருத்தவரை நாய் விற்ற காசு குரைக்காது. மனிதப் பதர்களும், நோயுற்றவர்களும், குறை பிறவிகளும், எதற்குமே பயன்படாதவர்கள் என்று சமுதாயத்தில் இருந்து வெளித்தள்ளப்பட்டவர்களுமே அவரது மூலதனம். அவரைப் பொருத்தவரை அந்த மனிதர்கள் எல்லாம் வெறும் உருப்படிகள். சதைப் பிண்டங்கள். அவர்களை பிச்சை எடுக்க வைத்து அந்தப் பணத்தில் ஜீவனம் செய்வதே அவர் வணிகம்.
எந்த ஒரு வணிகத்திலும் வாங்குவதும் விற்பதும் உண்டு என்பது போல இதில் உள்ளது. உருப்படிகளை மற்றொரு எஜமானனுக்கு விற்பது, அங்கிருக்கும் உருப்படிகளை மாற்றிக் கொள்வது, விருப்பமான உருப்படிகளை விற்க யோசிப்பது,அதிக வருமானத்தை (பிச்சை!) தரும் உருப்படியை “அது ஐஸ்வர்யம்லா” என்று அதிகப் பேரத்துடன் விற்பது என்று இந்த வியாபாரத்திலும் எல்லாம் சகஜமாக நடக்கிறது.
முத்தம்மை ஒரு சதைப் பிண்டம் மட்டுமல்ல வியாபாரத்துக்குத் தேவையான உருப்படிகளைப் பெற்றுத் தரும் ஒரு பார்க்க சகிக்காத ஒரு சதை இயந்திரம். ஆனால் அவள் ஒரு தாய். 18 உருப்படிகளைப் பெற்ற தாய். அதற்காகவே அவளை பிச்சை எடுக்க வைத்திருக்கிறார் போத்திவேலு பண்டாரம். அவளுக்கென்று ஒரு கணவன் ஒற்றைக் கண்ணுடனோ, மண்டை பெருத்தவனோ, கைகள் இல்லாமல் இடுப்புக்குக் கீழே ஆணுறுப்பு மட்டுமே கொண்டவனோ கொண்டுவரப்படுவான். அவனுடன் மாடு சினைப்பிடிக்க வைப்பது போல அணையவிடுவார் போத்திவேலு. பிறகு அவள் சினைப்பிடித்து ஒரு குட்டியை ஈனுவாள். அதுவும் கையில்லாமலோ, ஒற்றை விரலுடனோ, கால்கள் வளைந்து நடக்க முடியாமலோ….என்று பிறந்திருக்கும்.பின்னொரு நாள் அதன் மூலம் வருமானம் பெருகும்.
இது எதுவும் பண்டாரத்துக்கோ அல்லது அவர் மனைவி ஏக்கியம்மைக்கோ,குழந்தைகள் சுப்பம்மை, மீனாட்சி, வடிவம்மைக்கோ அவமானமாகவோ அருவெறுப்பாகவோ இருப்பதில்லை. நாம யாருக்கு எந்தக் கெடுதலும் செய்யலை…யாருக்கும் குறையும் வைக்கிறதில்லையே என்று தன் பெண்ணின் கல்யாணத்தில் ஏற்படும் பிரச்னையின்போது ஏக்கியம்மை கூறுவதிலிருந்தே, அவள் தன் கணவனின் ஜீவனத்தை ஒரு மளிகைக் கடை, ஹோட்டல் கடை வியாபாரம் போல எண்ணி சாதாரணமாக எடுத்துக் கொள்கிறாள் என்பது மனதை அதிர்ச்சியடைய வைக்கிறது.இதெல்லாம் ஒரு பொழப்பா என்ற கேள்விக்கே பண்டாரத்தின் குடும்பத்திலும் மனதிலும் இடமில்லை. இதுவும் ஒரு பொழப்புதான் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.
உருப்படிகளை பழனிக்கு வியாபாரத்துக்கு (பிச்சை எடுக்க) கொண்டு செல்லும்போது டெம்போவில் ஏற்றப்படுகின்றன. வெறும் சதைச் சக்கைகள் அவை. அவர்களை கொண்டு செல்லும் போது ஏற்படும் மனபிம்பமே உறைய வைக்கிறது. அவர்கள் மீது பண்டாரமும் அவர் அடியாட்கள் பெருமாள், வண்டிமலை ஆகியோர் செலுத்தும் அதிகார வன்முறையும் இப்படியும் ஓருலகம் சுழல்கிறது என்ற ஒரு விரக்தி எண்ணம் சூழச் செய்கிறது.
ராமப்பன், குய்யன், தொரப்பன், மாங்காண்டி சாமி, எருக்கு, ஆங்கிலம் பேசும் அகமது குட்டி என்று செல்லும் உருப்படிகளின் பெயர் வெறும் பெயர்கள் மட்டுமல்ல.வருமானம் தரும் சதைப்பிண்டங்கள் மட்டுமல்ல அவை. சாதாரண மனிதர்களின் உணர்வுகளை விட எந்த அளவும் குறையாத உணர்வுகளைக் கொண்ட அதி அற்புத ஜீவன்கள்.
பாயசம், நல்ல சோறுதான் தன் வாழ்நாளின் கனவாகக் கொண்டிருக்கும் குய்யன்.ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கையைக் கழுவாமல் வருவது எதற்காக? ஒரு வேளை உணவல்ல. ஒரே முறை உணவுதான்.
எவ்வளவு சொகுசு செய்துவைத்தாலும் வாங்கிச் செல்லப்பட்ட இடத்தில் பாட்டுப் பாட மாங்காண்டி சாமி மறுக்கிறது. எவருடைய அதிகாரமும் எல்லா இடத்திலும் செல்லுபடியாவதில்லை என்பதை உணர்த்துகிறார். மாங்காண்டி சாமி பாடும் பாட்டைக் கேட்டு அவரை ஒரு ஆஸ்ரமத்தில் அமர்த்தி ஆன்மிக பிச்சைக்காரனாக்க முடிவு செய்து ஸ்ரீகண்டன் நாயர் வாங்கிச் செல்கிறான். ஆனால் சில மாதங்கள் கழித்து பண்டாரம் அறியும் செய்தி வேறு மாதிரியாகிறது.
“சாமி இப்ப வலிய தெய்வம்லா“
“உலக்க மூடு. வோய், அது அன்னைக்கு பாடின பாட்டைக் கேட்டாக்கும் ஸ்ரீகண்டன் அதை வேங்கினது. இப்ப மாசம் எட்டாகுது. ஆரைப் பாத்தாலும் ஒரே வரிதான். அய்யா சாமி பிச்ச போடுங்கய்யா சாமி…நாறிப் போச்சு. நாறிப் போச்சுண்ணா அப்பிடி நாறிப்போச்சு.”
“சாமியா” என்றார் பண்டாரம்.
“ஆமடே..உம்ம சாமிதான்“
ஆனால் மீண்டும் அதை பண்டாரம் வாங்கி வந்து வைத்த பின்னர் சாமி இயல்புக்கு வந்துவிடுகிறது. கடைசியில் பாட்டுப் பாடுகிறது. அதன் இயல்பு பணத்துக்கோ அதிகாரத்துக்கோ கட்டுப்படுவதல்ல. பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் அன்பெனும் பேரொளிக்குக் கட்டுப்படுவது.
பன்றிகள் மேயும், மலம் குவிந்து கிடக்கும் பாலத்தினடியில் மீண்டும் ஒரு உருப்படியைப் பெற முத்தம்மையுடன் அணைய விடும் ஒரு சிறுவனைக் கண்டதும் அய்யோ வேண்டாம் ஒத்த விரலு ஒத்த விரலு என்று கதறும் முத்தம்மையின் குரல் ஏழாம் உலகமான பாதாள லோகத்தை நோக்கி விரியும் இருண்ட உலகத்தின் ஒரு கண்ணிதான்.
வெண்ணிலா அறியாதோ
வெந்துருகும் எம்மனசை?
விண்ணுக்குப் போகாதோ
விம்மி அழுவதெல்லாம்?
சொன்ன சொல்லை மறப்பாரோ
சொந்தமிதை விடுவாரோ?
என்னவென்று எண்ணியெண்ணி
ஏங்கிடுவேன் வெண்ணிலாவே“
என்று இறுதியில் பாடுகிறார் மாங்காண்டி சாமி. நாவல் மொத்தத்தின் சாரமே அது.
வியாபாரத்துக்குச் சென்ற இடத்தில் கண்டபடி களித்ததின் விளைவாக எய்ட்ஸின் உள்ளே நுழைகிறார் பண்டாரம். திருமணத்துக்கு வைத்திருந்த நகை, பணத்தை எடுத்துக் கொண்டு ரௌடியுடன் ஓடுகிறாள் வடிவம்மை. அங்கு விபசாரம் நடக்கும் வீட்டிலே சந்தோஷமாக இருப்பதாக அறிந்து நொந்து போகிறார். திருமணமாகி கணவன் வீடு செல்லும் மகள் சுப்பம்மை நகைக்காக பண்டாரத்திடம் சண்டைப் போடுகிறாள்.
பிச்சையிடுதல் என்பதை தர்ம காரியமாக நினைத்திருக்கும் மரபு மனத்தின் பழந்தரிசனங்களை தீவிரமாக அடித்து உடைக்கிறது இந்நாவல்.
வாழ்வின் சாரம் என்ன? எதற்காக இந்தப் பாடு? குறை பிறவிகளை வைத்து சம்பாதித்த பணத்தால் என்ன பயன்? தன் குடும்பம், தன் உடல்நலம் எல்லாவற்றையும் குறையுடன் இருக்க வைத்துவிட்டது என்ற எண்ணம் போத்திவேலுப் பண்டாரத்துக்கு தோன்றியிருக்குமா என்று தெரியாது. ஆனால் அந்தக் கேள்விகளை வாசகனுக்குள் எழுப்பி ஒரு இருண்ட வாழ்வின் தரிசனத்தை ஓயாமல் கொடுக்கிறது ஏழாம் உலகம்.
http://writerragu.wordpress.com/2013/04/17/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/
No comments:
Post a Comment