Thursday, July 24, 2014

கோவி கண்ணன் விமர்சனம்

அண்மையில் நூலகத்தின் வழியாக ஜெயமோகனின் ஏழாம் உலகம் வாசிக்க கிடைத்தது, ஒரு எழுத்தாளனின் பண்முகத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்று அடையாளப்படுத்தும் ஒரு ஆக்கம் அதுவென்றால் அது மிகையல்ல. 'நான் கடவுள் படம்' ஏழாம் உலகத்தின் தழுவல் என்றாலும். ஏழாம் உலகம் சுழலும் தளம் நான் கடவுள் படத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

பிச்சைக்குத் தள்ளப்படும் உடல்குறையுற்றோரின் துயரங்களை அவர்களோடு கோவில் படிக்கட்டுகளில் அமர்ந்து, படுத்து, அவர்கள் உழலும், சாக்கடைகளிலும், அவர்களின் மலக் கழிவுகளிலும் பயணித்தது போன்று மிக நேர்த்தியாக வட்டார வழக்கு சொல்லாடல், காட்சி அனைத்தையும் வாசகனின் மனதிற்குள் காட்சியாக விரிய வைக்கப்பட்டு இருக்கிறது, ஒரு எழுத்தாளனுக்கு பலமொழிப் புலமை எந்த அளவுக்கு அவசியம், அதன் தேவையால் ஒரு இயல்பான ஒரு இலக்கிய நடையைத் தரமுடியும் என்பதை அந்த கதையில் வரும் மலையாளப் பாத்திரங்களின் மூலம் உணர்த்தப்படுகிறது. உடற்குறையுற்றவர்கள் மீது ஆளுமை செலுத்தி அவர்களின் பிச்சையைத் தன் தொழிலாக வைத்திருக்கும் 'பண்டாரம்' பாத்திரம் கதையின் மையம் என்றாலும், கதையில் இடம் பெறும் ஒவ்வொரு பாத்திர படைப்பும் தனித்தனியாக ஒளிர வைத்திருக்கிறார்.

ஆபாசம், அசூசை, வெட்கம், சொரணை இவை எல்லாம் பிழைப்பு வாதத்திற்கு முன் அற்பமே என்பதை கதையைப் படிப்பவர்கள் புரிந்து கொண்டு அதிர்ச்சி அடைவார்கள். உதாரணத்திற்கு பழனி கோவிலுனுள் சிலைக்கு அருகே பண்டிதர்கள் வெற்றிலை எச்சிலைத் துப்புவதையும், சிறுநீர் கழிப்பதையும் எழுதி அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறார். உண்மைகள் புனித பேச்சுக்கும், போர்வைக்கும் முன்பு காவிப் பற்கள் இளிப்பதைப் பார்க்கும் போது, அது புனிதப் பேச்சிலும், புனித போர்வையிலும் மயங்கிக் கிடக்கும் உலகத்தின் மீது அசுத்தங்களை அபிசேகமாக்குகிறது, ஏற்க கடினமாக இருந்தாலும் அவை இயல்பாக நடக்கும் உண்மைகள் என்னும் போது பொதுச் சமூகத்தின் மீதும் அதன் கட்டமைப்புகள் மீது வெறுப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

'யார் வேண்டுமானாலும், நம்மை விற்கலாம், வாங்கலாம்' என்று மனம் வெதும்பும் உடற்குறையுற்ற பிச்சைக்காரர்களின் இயலாமை விளிம்பு நிலை மாந்தர்களின் மெல்லிய முனுகலாக பதியவைக்கப்பட்டு இருக்கிறது. கதையில் ஒழுகும் எச்சிலும், வீசும் மலத்தின் நாற்றமும் நாம் வாழும் சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட கழிவுகளாகவும், நாம் நாற்றத்தை மறைக்க வாசனையைப் பூசிக் கொண்டு நடமாடுவதை இயல்பாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கதையெங்கும் உணர்த்தி இருக்கிறார். 

பிச்சைக்காரர்களை கொடுமைப் படுத்தி அவர்களை 'உருப்படி' என்று அழைத்துவரும் பண்டாரம் 'நான் என்ன பாவம், செய்தேன், கெடுதல் செய்தேன், யாருக்கு துரோகம் செய்தேன்' என்றெல்லாம் முருகன் சன்னதியில் வேண்டிக் கொள்வது, உடற்குறையுற்றோர்களை பண்டாரம் போன்றவர்கள் ஒரு மனித இனமாகவே மதிக்கவில்லை, அவர்களை ஒரு பொருளியலுக்கு மூலதனமாகப் பயன்படும் விலங்கைப் போன்றே நினைக்கிறார்கள் என்பதையெல்லாம் நன்கு உணர்த்தி இருக்கிறார்.

சுயநல உலகின் மீது ஒவ்வொரு பக்கத்திலும் செருப்புகளை வீசி காரி உமிழும் ஜெமோவின் 'ஏழாம் உலக நாவல்' தமிழ் சூழலில் மிகவும் போற்றப் படவேண்டிய, பலருக்கும் பரிந்துரைக்கப்பட வேண்டிய நாவல். ஜெமோவின் உழைப்பும், தகவல் சேகரிப்பும் எண்ணும் போதெல்லாம் வியப்பாக இருக்கிறது.

ஜெமோ முன்னுரையில் தன்னடக்கமாக குறிப்பிட்ட வரிகள் ' நான் எழுதியதிலேயே இந்த நாவல் தான் ஜெயகாந்தனின் எழுத்துக்கு அருகே நிற்கும் தகுதியைப் பெற்றிருப்பதாக நினைக்கிறேன்' என்கிற வரியில் அவரது இலக்கிய வேட்கை எந்த அளவுக்கு தாகம் கொண்டதாக இருந்து இப்படி ஒரு சிறப்பான படைப்பை உருவாக்க முடிந்திருக்கிறது என்று நினைக்கையில் இலக்கிய வாசகன் என்ற முறையில் ஜெமோவை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

நான் கடவுள் படம் பார்த்த பிறகு, அந்தப் படம் இந்துத்துவாவை முன்னிறுத்துகிறது என்றும் ஜெமோ அவற்றை வலிந்து செய்திருப்பாரோ என்று நான் நினைத்துக் கொண்டிருத்தேன். விளிம்பு நிலை மாந்தர்கள் பற்றி அழுத்தமாக புரிய வைக்க வேண்டிய சூழலில் அகோரியை இடை நுழைத்து மூலக் கதைச் சிதைக்கப்பட்டு இருக்கிறது என்றே தற்போது எனது புரிதலாக இருக்கிறது. பாலாவின் 'நான் கடவுள்' படத்தில் ஜெமோவின் 'ஏழாம் உலகத்திற்கு' உயிர் கொடுத்திருந்தாலும் திரைக்கதைகாக மூலக் கதையில் நடைப் பெற்ற மாற்றங்கள் படைப்பாளி என்ற முறையில் ஜெமோவை வருத்தப்படுத்தி இருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன்.

ஜெமோவின் மற்ற எழுத்துக்கள் மீது உங்களுக்கு எப்படிப் பட்ட விமர்சனம் இருந்தாலும் அவை எல்லாமும் 'ஏழாம் உலகம்' ஒரு முறை வாசித்துவிட்டால் மறைந்துவிடும்
http://govikannan.blogspot.in/2009/09/blog-post_14.html

No comments:

Post a Comment