ஏழாம் உலகம் ‘ என்பதை எங்கோ இருக்கிற பாதாள உலகத்தைச் சுட்டுவதாக நம்பிக்கொண்டிருக்கிற மானுட குலத்துக்கு நாம் வாழும் எதார்த்த உலகின் இருட்டுப் பகுதிக்கிடையிலேயே அது பரந்து விரிந்திருப்பதை அடையாளம் காட்டுகிறது இந்த நாவல். இருள் உலகின் குரூரங்கள் நாம் அறியாதவை அல்ல. ஏமாற்று, பித்தலாட்டம், பொய்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாமே சகஜமான விஷயங்களாக இடம்பெறும் உலகம் அது. ஒரு ரூபாய் பணத்துக்கு ஆயிரம் சத்தியங்களை நாக்கு கூசாமல் சொல்பவர்கள் அங்கே உண்டு. அதே ஒரு ரூபாய்க்காக கொலைசெய்துவிட்டு எதுவுமே நடக்காததைப்போலவே அமைதியாகச் செல்லும் நிகழ்ச்சிகளும் நடப்பதுண்டு. எல்லாமே இருள் உலகத்தின் முகங்கள். இப்படித்தான் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம் நம்பிக்கைகளையும் கற்பனைகளையும் தாண்டி குரூரத்தின் உச்சகட்ட அம்சத்தையே குணமாகக்கொண்டு சதாகாலமும் இயங்குகிற இருள் உலகத்தின் இன்னொரு பக்கத்தை இந்த நாவலில் ஜெயமோகன் தீட்டிக்காட்டியுள்ளார். சந்தையில் ஆடு, கோழி விற்பதைப்போல குறைப்பிறவிகளை பணத்துக்காக விற்கவும் வாங்கவும் செய்கிறார்கள் பொருளாசை பிடித்த மனிதர்கள். உயிர் ஒரு சந்தைப்பொருளாக மாறுகிறது. வாங்கிச்சென்ற குறைப்பிறவிகளை கூட்டம்கூட்டமாக வளர்த்து, கோயில்தோறும் அழைத்துச்சென்று பிச்சையெடுக்கவைத்து, அச்செல்வத்தைத் திரட்டி எடுத்துச்சென்று அனுபவிக்கிறார்கள் அம்மனிதர்கள். படிக்கப்படிக்க நெஞ்சம் பதை
பொருளீட்டல் வாழ்வின் தேவையாகிய மாறிய தொடக்கக்கட்ட சமூகத்தில் அதையொட்டிப் பல விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கக்கூடும். பொருளைச் சேர்க்கும் வேகத்திலும் பொருளீட்டல் அளிக்கும் ஆனந்தத்தில் திளைக்கும் ஆசையிலும் பொருளீட்டும் வழிமுறைகளில் அறம் பிறழ்ந்துபோகும் வாய்ப்புகள் உருவாகக்கூடும். இதனாலேயே பொருளையும் அருளையும் எதிர்எதிராக நிறுத்திப் பலவிதமானகருத்துகள் ஆதிகாலத்திலிருந்து சொல்லப்பட்டுவருகின்றன. அருளில்லாதவருக்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை என்னும் கருத்து நினைத்துக்கொள்ளத்தக்க ஒன்றாகும். உழைப்பினால் பொருளீட்டியது ஒருகாலம். தந்திரங்களால் மட்டுமே பொருளீட்டி வெற்றிபெற்றது இன்னொரு காலம். எந்தவிதமான அற நிலைபாடுமின்றி பொருளுக்காக எதையும் சார்ந்து நிற்கவும் எதிலும் துணிச்சலாக ஈடுபடவும் முனைந்து வெற்றிமேல் வெற்றியாக ஈட்டிக்களிப்பது மற்றொரு காலம்.
நெஞ்சில் அருளே இல்லாதவன் ஈட்டுகிற பொருளின் சமூக மதிப்பு என்ன என்கிற கேள்வியை ஒட்டி யோசிப்பது ஜெயமோகனுடைய புதிய நாவலான ‘ஏழாம் உலகம் ‘ படைப்பைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். அறமற்ற வழிகளில் ஈட்டும் செல்வத்தால் ஒருவனுடைய வீடு, வசதிகள் பெருகக்கூடும். மகள் ஆசைப்பட்ட வளையலை இரவு நேரத்தில் ஆசாரியின் வீட்டுக்கதவைத் தட்டி கூடுதல் விலைகொடுத்து வாங்கிவர உதவக்கூடும். ஆனாலும் ஏதோ ஒரு குரல் நெஞ்சுக்குள் செல்வம் வந்த வழியைச் சுட்டிக்காட்டக்கூடும். முதுகுக்குப் பின்னால் பேசப்படுகிற ஏளனப்பேச்சுகளைப் பொருட்படுத்தாமல் நடப்பதுபோல மனக்குரலைப் பொருட்படுத்தாமல் இருக்கமுடிவதில்லை. ஆனால் ‘கருவாடு விற்றகாசு நாறவா போகிறது ? ‘ என்பதுபோன்ற நொண்டிச்சமாதானங்களால் அக்குரல் அடங்கிவிடுகிறது. மனம் மெள்ளமெள்ள மரத்துப்போய்விடுகிறது. அறமற்ற வழிமுறைகளில் வந்து சேரும் செல்வத்தால் வாழ்வது கொடுமையானது என்ற எண்ணம் துளியும் எழாத அளவுக்கு மரத்துப்போகிறது. தலைமுறைதலைமுறையாக இப்படியே வாழ்ந்து பழகிவிட்டபிறகு செல்வம் வருவது ஒரு சடங்காகப் போய்விடுகிறது. அற எண்ணம் மனஉலகத்திலிருந்தே மறைந்துபோய்விடுகிறது. எவ்வளவு குரூரமான வழிமுறைகளிலும் இறங்கி, எவ்வளவு மானக்கேடான காரியங்களையும் செய்து, எவ்வளவு அவமானங்களையும் தாங்கிக்கொண்டு, பணமீட்டுவதில் வெற்றியடைவதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு சாதனைபடைப்பது பழகிவிடுகிறது. பொருளின் ச்முகமதிப்பு என்பது வெற்றிதானே தவிர பொருளையடைய மேற்கொண்ட வழிமுறைகளின் தன்மையல்ல என்னும் கசப்பான உண்மையே எஞ்சி நிற்கிறது. எவ்விதத்திலாவது வெற்றி பெறுதல் என்பது வாழ்வின் இலக்காக மாறும்பொழுது மனிதமனத்தில் படிந்திருக்கும் அருள் அழிந்துபோகிறது.
இந்த அம்சத்தையும் ‘வயத்துப் பொழப்பு பலவிதம் ‘ என்று பெருமூச்சுடன் ராமப்பன் நாவலில் சொல்லும் தருணத்தையும் இணைத்துப் பார்க்கலாம். இதுவே கதையின் முக்கியப்புள்ளி. இப்புள்ளியைத் தொட்டதும் மனத்தில் நிகழும் எழுச்சி பல திசைகளிலும் பரந்து விரியத்தக்கதாக உள்ளது. கிட்டத்தட்ட நாவலின் மையப்புள்ளியாக இதைக் கருதுவதில் தவறில்லை. இதற்குப் பிறகும் சிற்சில இடங்களில் இதற்கு இணையாக எழுச்சியைத் தரும் ஒருசில தருணங்கள் உண்டு. அவையனைத்தையும் தொட்டபடி நீளும் பயணம் இந்தப் புள்ளியில் வந்து சேரும் விதமாகவே உள்ளது. உருக்குலைந்த உடலுறுப்புகளை உடையவர்களை முன்வைத்து, கடந்து செல்கிறவர்களின் இரக்கத்தைத் துாண்டிப் பிச்சையிடவைத்து, அப்பிச்சைக் காசுகளை இரக்கமேயில்லாமல் வசூல் செய்யும் போத்திவேலுப் பண்டாரம் இயங்கும் விதம் மிகநுட்பமாக விவரிக்கப்படுகிறது.
ஒரு தொழிற்சாலையை நிர்வகிக்கும் மேலாளரைப்போல, அனுபவ நுட்பங்களுடனும் விவர ஞானத்துடனும் யாசிப்புத் தொழிலில் மேலும்மேலும் பணமீட்ட அவன் எடுக்கும் நடவடிக்கைகள் அடுக்கடுக்காகச் சொல்லப்படுகின்றன. ஆனால் அவன் தொழிலுடன் காவல்துறையைத் தவிர எந்தச் ச்முக நிறுவனங்களும் ஏன் மோதிப்பார்க்கவில்லை ? காப்பகங்கள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள், வாசகர் கடிதங்களை எழுதி ஆற்றாமையைப் பகிர்ந்துகொள்ளும் நடுத்தட்டு வர்க்கம் எதனுடன் தொடர்பின்றி விடப்பட்டுள்ளது. ஒருவேளை அத்தகு தொடர்புகள் நிகழ்த்திக்காட்டப்பட்டிருந்தால் இத்தொழிலில் எதார்த்தச் சங்கடங்களும் சமாளிக்கும் தந்திரங்களும் இன்னும் கூர்மைப்பட்டிருக்கக்கூடும். மனித மனத்தின் / சமூக மனத்தின் மேல்தளத்தில் புலப்பட்டபடியிருக்கும் இரக்கத்துக்குக் கீழே எவ்வளவு கொடிய மிருகத்தனமாக இரக்கமின்மை பாறையைப்போலப் படிந்திருக்கிறது என்று உணர்த்தியிருக்கமுடியும்.
ஆனால் அத்தகு சாத்தியக்கூறுகள் ஜெயமோகனால் கைவிடப்பட்டுள்ளன. அவற்றின் வழியாக உருவாகும் மனமோதல்களுக்கு இணையாக, மகள்களின் திருமணங்களால் நிகழும் சங்கடங்களை எதிர்கொள்ளும் முயற்சிகள் கட்டி எழுப்பப்படுகின்றன. ‘ஏழாம் உலகம் ‘ முக்கியமான படைப்பு என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை. ஆனால் இதன் முக்கியத்துவம் இந்த நாவலின் தளத்தில் இல்லை. மாறாக, வாசகர்களின் கவனத்துக்கு இதுவரை வராத ஓர் இருட்டு உலகத்திலிருந்து, பார்த்ததும் துடிதுடித்துத் திணறவைக்கிற சித்திரங்களைக் கொண்டுவந்து காட்டுவதில்தான் இருப்பதாகத் தோன்றுகிறது.ந்த நாவலின் இயக்கம் பரிசீலனை என்கிற தளத்தில் இல்லாததாலேயே மனத்துக்குள் படிந்திருக்கும் ஒரு கருத்தை நிகழ்த்திக்காட்டும் தன்மையையும் நிறுவிக்காட்டும் தன்மையையும் அடைந்துவிடுகிறது. அருள் இல்லாதவன் அடையும் பொருளின் அர்த்தமின்மையை அல்லது வெறுமையை நிறுவுவதாக மாறுகிறது நாவல்.
நாவலின் முதல் காட்சியில் குறைப்பிறவியான முத்தம்மை தன் பதினெட்டாவது பிள்ளையைப் பெற்றெடுக்கும் சம்பவம் சித்தரிக்கப்படுகிறது. கட்டிய பெண்டாட்டி பிள்ளைபெறச் சென்றபோது இல்லாத பதற்றத்தோடும் தவிப்போடும் தடுமாறுகிறார் பண்டாரம். இந்தப் பிரசவம் இயல்பான ஒன்றல்ல. குறைப்பிறவியான முத்தம்மையோடு இன்னொரு குறைப்பிறவியை உடலுறவு கொள்ளவைத்துக் கருவுறச் செய்து கர்ப்பம் காத்து நிகழும் பிரசவம். பிறக்கும் குழந்தை குறைப்பிறவியாக இருக்கவேண்டுமே என்னும் பிரார்த்தனையோடு பிரசவமாகும் வேளைக்காகக் காத்திருக்கிறான். பொருளைச் சம்பாதிக்கும் வேகம் அவனை இப்படி ஈடுபடவைக்கிறது. தன் உடல்மீது படர்கிற குறைப்பிறவியான கூனன் தன் மகன் என்பதைக் கண்டுணர்ந்து கூவித் தவிர்க்கத் துடிக்கிற குரலுக்குக்கூட செவிசாய்க்காத தன்மையைக் கொடுக்கிறது இந்த வேகம். பணம் சம்பாதிக்கும் உச்சகட்ட வெறிக்குச் சாட்சியாக இந்தச் சம்பவத்தை அடையாளப்படுத்தலாம்.
நாவலின் இறுதிக்காட்சியில் வீட்டைவிட்டு காதலனுடன் வெளியேறிப்போன பண்டாரத்தின் அருமை மகள், ஒருசில நாட்களிலேயே காதலனால் விலைமகளாக மாற்றப்பட்டு பணத்துக்காக ஒவ்வொரு பொழுதையும் ஒவ்வொரு ஆணுடன் கழிக்கிறவளாகக் காட்டப்படுகிறாள். இந்த இரு காட்சிகளையும் இணைத்துப்பார்ப்பது அருளையும் பொருளையும் ஏதோ ஒரு புள்ளியில் இணைத்துப்பார்க்க உதவும். இப்படி நிறையச் சொல்லிச்செல்ல முடியும்.
முதல் வாசிப்பில் மனத்தை உறையச்செய்த அம்சங்கள் மெள்ளமெள்ளப் பின்னகர்ந்துவிட இரண்டாம் வாசிப்பில் மனத்தை நிறைக்கும் சில காட்சிகளைத் தொகுத்துக்கொள்வதன் மூலம் படைப்பின் சில நல்ல தருணங்களை அடையாளப்படுத்த முடியும். ஒரு காட்சியில் பழனிமலை அடிவாரத்தில் பிச்சையெடுப்பதற்காக ஏற்றிச்செல்லப்பட்ட ஊனப்பிறவிகள் கூட்டமாகத் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். கண்ணில்லாத தொரப்பு தன் குழந்தையைத் தொட்டுப் பார்க்க உத்தேசமாக ஒரு திசையில் நடந்து வழிதடுமாறிப் புதரில் விழுந்துவிடுகிறான். தேடிவந்த ஆளிடம் அகப்பட்டு அடிவாங்கியபிறகு மெதுவாக தான் நகர்ந்துவந்ததன் நோக்கத்தை கூச்சத்துடன் வெளிப்படுத்துகிறான். ஒரு குழந்தையைத் தொடுவதற்காக காலமெல்லாம் ஏங்கியவன் அவன். குழந்தையைத் தொடஇயலாத குறையை யாரோ ஒருவருடைய குழந்தையின் சிறுநீரைத் தொட்டு மனம்நுகர்ந்து மகிழ்ச்சியில் திளைத்தவன். நெஞ்சுநிறைய அந்த ஆசையைச் சுமந்து கிடந்தவன் தனக்குப் பிறந்த குழந்தையைத் தொடுவதற்கான வாய்ப்பை உருவாக்கித் தந்தபோது தயங்கிப் பின்வாங்கிவிடுகிறான்.
யாரைப்போல பிள்ளை, கண் உண்டா, ஊனம் உண்டா என்று கேள்விகேட்டு பதில் தெரிந்துகொண்டு அமைதியடைந்து விடுகிறான். ‘மக்கள் மெய்தீண்டல் ‘ பற்றி காலம்காலமாக வாய்மொழி இலக்கியமும் எழுத்துமொழி இலக்கியமும் தொடர்ந்து நம்மிடையே பேசியபடியே வந்துள்ளன. திருவள்ளுவர் ஒரு அதிகாரமே எழுதியிருக்கிறார். பிரபந்தப் பாடல்களிலும் பிள்ளைத் தமிழ்களிலும் ஒரு குழந்தையைத் தொட்டுத் துாக்கவும் கொஞ்சவும் எண்ணும் தந்தையரின் மனம் வெளிப்பட்டிருப்பதை உணரமுடியும். இதன் தொடர்ச்சியே நாவலில் வெளிப்படும் இச்சித்திரம். கண்பார்வையற்ற பிச்சைக்காரனான தொர்புவிடம் வெளிப்படுவது இத்தகு தந்தைமையின் ஏக்கமே.
முறையாகத் தாலிகட்டி குடும்பம் நடத்திப் பெற்றெடுத்த குழந்தை அல்ல அது. கூனும் குருடுமாகப் பிறக்கவேண்டும் என்பதற்காகவே ஒரேஒருதரம் உறவுக்காக அனுமதிக்கப்பட்டதால் பிறந்த குழந்தை. ஆனாலும் அவன் மனத்தில் பீறிட்டெழும் தந்தைமை உணர்வு உலகப்பொதுவானது. கிட்டத்தட்ட இதே தந்தைமை உணர்வுதான் பண்டாரத்திடமும் செயல்படுகிறது. திருவிழா முடிந்து திரும்பும்போது வாங்கிவருவதாகச் சொன்ன வளையலை மறதியால் வாங்காமலேயே வீடு திரும்பிவிடும் பண்டாரம் விழித்தெழுந்தால் குழந்தை கேட்குமே என்பதற்காக அர்த்தராத்திரியில் வண்டிபிடித்து வெளியூர் சென்று துாக்கத்தில் ஆழ்ந்திருந்த ஆசாரியை எழுப்பி ஒன்றுக்கு இரண்டு விலைகொடுத்து நகை வாங்கிவந்து கருக்கலுக்கு முன்னமேயே வீட்டையடைந்து நிம்மதி கொள்கிறான். இரண்டும் வெவ்வேறு கோணங்களில் காட்டப்பட்டிருந்தாலும் இவ்விரண்டு தருணங்களுக்கும் அடிப்படை உந்துதல் தந்தைமை. சற்றும் மிகைஉணர்ச்சியின்றி கச்சிதமாகவும் திறமையாகவும் இச்சித்திரங்களைத் தீட்டிக்காட்டுகிறார் ஜெயமோகன்.
இன்னொரு காட்சியில் காவல்துறையினரின் மோசமான வன்புணர்ச்சிக்குப் பிறகு இடுப்பு நொறுங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கால்களற்ற ஊனப்பிறவியான எருக்குவை மருத்துவமனையிலிருந்து கடத்திவரும் நோக்கத்துடன் தந்திரமாக தாலிகட்டி புருஷனாக நடித்து காரியம் சாதிக்கிறான் பெருமாள். பிச்சைக்காரியான எருக்கு அவனது தாலியைச் சுமந்து திரிவதாலேயே அவனைக் கண்கண்ட தெய்வமாகவும் கணவனாகவும் நினைத்து ஏங்குவதும் பேசுவதும் உதைவாங்கிக்கொள்வதும் தொடர்ந்து பல கட்டங்களில் காட்டப்படுகின்றது. தன்னைத் திருட்டுத்தனமாக அழைத்துச் செல்பவன் ஏற்கனவே இரண்டு பெண்களைத் திருமணம் செய்து கைவிட்டவன் என்று தெரிந்த நிலையிலும் அவனோடு செல்கிற வடிவம்மையை எந்த உணர்வு இயக்கியிருக்கும் ? விரைவிலேயே மற்ற பெண்களைப்போலவே தன் பிழைப்பைத் தானே பார்த்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுகிறாள்.
இம்மூவரில் எவருக்குமே அவனைப்பற்றிய புகார்கள் இருப்பதாகத் தெரியவில்லை. கணவன் என்கிற நிலையிலிருந்து நிராகரித்ததாகத் தெரியவுமில்லை. குறைப்பிறவிகளை விற்றுப் பணம் பார்க்கிற ருசி ரத்தத்தில் ஊறியபிறகு ஊரூராக அலைகிற பண்டாரத்துக்கு உடலின்பத்துக்கு ஊரெல்லாம் பெண்கள் கிடைக்கிறார்கள். ஆனால் அவன் மனைவி மீனாட்சி அவனுடனான உறவை நிறுத்திவிடுகிறாள். பத்தாண்டுகளாக இருவரிடையேயும் எவ்விதமான தொடர்புமில்லை என்று குறிப்பிடப்படுகிறது. கணவன் எப்படிப்பட்டவன், அவன் சம்பாதிக்கும் பணம் எவ்வழிகளில் வருகிறது என்பதெல்லாம் நன்கு தெரிந்தவள் மீனாட்சி. அவளால் அவனது உடலுறவைத்தான் தள்ளிவைக்க முடிகிறதே தவிர, அவள் மனத்தில் ஒரு தருணத்திலும் கணவனையே தள்ளிவைக்கிற எண்ணம் எழவே இல்லை.
இப்படி பெண்பாத்திரங்களின் நடவடிக்கைகளைத் தொகுத்துப்பார்க்கும்போது எல்லாருக்குமே கணவன் என்கிற உறவின்மீதிருக்கிற ஆழ்ந்த பிடிப்பையும் மிகமோசமான நிலைகளில் கூட யாருக்குமே அவ்வுறவை உதறும் எண்ணமெழவே இல்லை என்பதையும் கண்டறியலாம். இந்த உணர்வைப்பொறுத்தவரையில் வசதி படைத்த பெண்ணென்றாலும் பிச்சையெடுக்கிற பெண்ணென்றாலும் ஒரேமாதிரியாகவே நடந்துகொள்கிறார்கள். பெரும்பாலான இந்தியப் பெண்களின் ஆழ்மனத்தின் இயங்குநிலையை அறிய இத்துணுக்குச் சித்திரங்கள் உதவக்கூடும்.
மோசமாக நடத்தப்படுகிற சூழலில் கூட பிச்சைக்காரர்கள் தம்மை மறந்து ஈடுபடும் உரையாடல்கள் இடம்பெறும் கட்டங்கள் நாவலில் உயிர்ப்போடு எழுதப்பட்டுள்ளன. வாழ்வின் அர்த்தமின்மையை இடைவிடாத பேச்சின் வழியாகக் கடந்துசெல்வதற்கான முயற்சிகளாக அவை அமைந்திருப்பதாகக் குறிப்பிடுவது மிகையான கூற்றாகாது.
மோசமாக நடத்தப்படுகிற சூழலில் கூட பிச்சைக்காரர்கள் தம்மை மறந்து ஈடுபடும் உரையாடல்கள் இடம்பெறும் கட்டங்கள் நாவலில் உயிர்ப்போடு எழுதப்பட்டுள்ளன. வாழ்வின் அர்த்தமின்மையை இடைவிடாத பேச்சின் வழியாகக் கடந்துசெல்வதற்கான முயற்சிகளாக அவை அமைந்திருப்பதாகக் குறிப்பிடுவது மிகையான கூற்றாகாது.
அர்த்தமின்மையை நிறுவிக்காட்டும் முயற்சியே இந்நாவல். ஆனால் அதை ஒவ்வொரு காட்சியிலும் உயிர்ப்புடன் சித்தரித்துக்காட்டுவதில் ஜெயமோகனுடைய எழுத்தாளுமை மேலோங்கியிருக்கிறது. எக்குறையும் சொல்லவியலாதபடி புத்தகத்தை வடிவமைத்திருக்கும் தமிழினியின் முயற்சியைப் பாராட்ட தமிழுலகம் கடமைப்பட்டிருக்கிறது.
(ஏழாம் உலகம். நாவல். ஜெயமோகன். தமிழினி பதிப்பகம். 130/2, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை- 600 086 .விலை. ரூ130)
நன்றி
No comments:
Post a Comment