Thursday, July 24, 2014

விக்கி பதிவு

ஜெயமோகன் எழுதிய ஆறாவது நாவல் ஏழாம் உலகம். 2004ல் இந்நாவல் வெளிவந்தது. ஏறத்தாழ இருநூறு பக்க அளவுகளைக் கொண்டது.தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. மனிதர்களில் கடையர்களாக வாழும் பிச்சைக்காரர்களைப் பற்றிய நாவல் இது. மனிதர்களை எவ்வாறு பிச்சைக்காரர்களாக ஆக்கி விற்கவும் வாங்கவும் செய்கிறார்கள், மிருகங்களைப்போல வாழும் அவர்களுடைய வாழ்க்கையில் என்ன வகையான உணர்ச்சிகள் நிலவுகின்றன என்பதை இந்நாவல் காட்டுகிறது. பாலா இயக்கிய நான் கடவுள் என்ற படத்துக்கு இந்த நாவலே ஆதாரம்.[சான்று தேவை]
போத்திவேலுப் பண்டாரம் என்பவரே இந்நாவலின் கதாநாயகன். நடுவயதை தாண்டிய அவர் பிச்சைக்காரர்களை விலைக்கு வாங்கி உடைமையாக வைத்திருந்து கோயில் வாசல்களில் அவர்களைபோட்டு பிச்சையெடுக்கச் செய்து வாழ்கிறார். அதைப்பற்றிய குற்ற உணர்ச்சி ஏதும் அவருக்கு இல்லை. தன்னை ஒரு நல்ல மனிதர் என்றே எண்ணுகிறார்.
போத்திவேலுப்பண்டாரத்தின் சொந்த வாழ்க்கை ஒருபக்கமும் பிச்சைக்காரர்களின் அன்றாட வாழ்க்கை ஒருபக்கமுமாக நாவல் வளார்ந்து செல்கிறது. சாதாரண நடுத்தர வர்கத்தவனாகிய போத்திவேலு பண்டாரம் மகள்கள் மேல் உயிரையே வைத்திருக்கிறார். முதல் மகள் கல்யாணமான உடனேயே அப்பாவிடம் கணக்கு பேசி சொத்தை வாங்க ஆரம்பிக்கிறாள். இன்னொரு மகள் விபச்சார வணிகம் செய்யும் ஒருவனுடன் ஓடிப்போகிறாள்.
'உருப்படிகள்' என்று பண்டாரம் சொல்லும் பிச்சைக்காரர்கள் அவர்களுக்குள் நகைச்சுவை பேச்சும் சுயநலம் இல்லாத அன்புமாகவே இருக்கிறார்கள். குய்யன் என்ற களங்கமில்லாத தொழு நோயாளி, விவேகம் கொண்டவரான ராமப்பன், ஆங்கிலம் பேசும் அகம்மது, ஒரு குடும்பப்பெண்ணாக வாழவேண்டும் என்ற கனவுடன் வாழும் எருக்கு என்று பலவகையான பிச்ச்சைக்காரர்கள் உள்ளார்கள். அவர்கள் நடுவேசித்தரான மாங்காண்டிச்சாமியும் பிச்சைக்காரராக அமர்ந்திருக்கிறார்.
இந்த இரு உலகங்களும் ஒப்பிடப்படுகின்றன. பண்டாரத்தின் அன்றாட உலகில் மாப்பிள்ளையை விலைக்கு வாங்கும்போது பிச்சைக்காரர் உலகில் பிச்சைக்காரர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். இரு இடத்திலும் உருப்படி என்ற சொல் புழங்குகிறது.
முத்தம்மை என்ற ஊனமுற்ற பெண் ஒரு ஊனமுற்ற குழந்தையை பெறும்போது ஆரம்பிக்கும் நாவல் அவள் மேலும் ஊனமுற்ற குழந்தையைப் பெறுவதற்காக எப்படி இன்னொரு ஊனமுற்ற பிறவியுடன் குரூரமாக புணரவைக்கப்படுகிறாள் என்ற இடத்தில் முடிவுக்கு வருகிறது.
தமிழில் அடித்தள மக்களைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களிலேயே குரூரமான தீவிரமான நாவல் இது. ஆனால் நல்ல நகைச்சுவையுடன் எழுதபப்ட்டிருக்கிறது. எந்த அடிநிலைக்குப் போனாலும் மனிதன் மனிதப்பண்புகளை இழப்பதில்லை என்று காட்டும் நாவல் இது.

விமர்சனங்கள்[தொகு]

இது எளிமையான் நாவல்தான். என்றாலும் இது இரயில் வண்டியிலோ, தொலைக்காட்சி விளம்பர நேரத்திலோ, உங்கள் பிள்ளைகளைநாட்டிய வகுப்பிற்கு விட்டுவிட்டு காத்திருக்கும் சமயத்திலோ படிப்பதற்கான நாவல் அல்ல. உங்கள் முழுக்கவனிப்பும் அதற்கு தேவை. ஏனென்றால் சொல்ல வந்த விடயம் அப்படி. நண்பரிடம் சொன்னேன் நீங்கள் தனிமையான இடத்தை தேர்வு செய்யுங்கள். முதலில் 12வது அத்தியாயத்தை வாசியுங்கள். அதற்கு பிறகு எங்கே வேண்டுமென்றாலும் தொடங்கி நாவலை எப்படியும் படியுங்கள் என்றேன். அப்படியே செய்து அவர் நாவலை முடித்துவிட்டு, ‘ஆ, தமிழுக்கு இது முற்றிலும் புதிது; ஒரு கொடை' என்றார் - அ.முத்துலிங்கம்[1].
இந்த உலகம் இரக்கத்திற்கு உரிய ஏழைமையால் வதைக்கப்படும் உலகம் என்று மட்டும்தான் நாம் சாதாரணமாக அறிந்திருக்கிறோம். ஆனால், ஜெயமோகன் தன் சொந்த அனுபவத்தில் பார்த்து, பின் கேட்டு அறிந்த உலகம், கொடூரங்கள் நிறைந்தது. கொடுமைகள் நிறைந்தது. இப்படிக் கூட ஒரு உலகம் இருப்பது சாத்தியமா என்று நாம் திகைக்கக் கூடும். கேட்கவோ, படிக்கவோ கூட நம்மை உலுக்கி எடுக்கும் உலகம். கேட்பதற்குக் கூட நம் சகிப்புத் தன்மையை நிறைய சோதித்து விடும். மனிதன் தன் சகமனித ஜீவனை எவ்வளவு கேவலப்படுத்துவதன் மூலம் தன்னையும் கேவலப்படுத்தக் கூடியவன்; அது பற்றி பிரக்ஞையே இல்லாமல், பின் அதற்கு தார்மீக, அரசியல் சித்தாந்த ஜோடனைகளுடன் அலங்காரங்கள் செய்வான்; அவன் எவ்வளவு ஆபாசமானவன் என்பது தெரியும். ஆனால் முதலில் இதைப் படிக்கவேண்டுமே. - வெங்கட் சாமிநாதன் [2].
'ஏழாம் உலகம் ' என்பதை எங்கோ இருக்கிற பாதாள உலகத்தைச் சுட்டுவதாக நம்பிக்கொண்டிருக்கிற மானுட குலத்துக்கு நாம் வாழும் எதார்த்த உலகின் இருட்டுப் பகுதிக்கிடையிலேயே அது பரந்து விரிந்திருப்பதை அடையாளம் காட்டுகிறது இந்த நாவல். இருள் உலகின் குரூரங்கள் நாம் அறியாதவை அல்ல. ஏமாற்று, பித்தலாட்டம், பொய்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாமே சகஜமான விஷயங்களாக இடம்பெறும் உலகம் அது. ஒரு ரூபாய் பணத்துக்கு ஆயிரம் சத்தியங்களை நாக்கு கூசாமல் சொல்பவர்கள் அங்கே உண்டு. அதே ஒரு ரூபாய்க்காக கொலைசெய்துவிட்டு எதுவுமே நடக்காததைப்போலவே அமைதியாகச் செல்லும் நிகழ்ச்சிகளும் நடப்பதுண்டு. எல்லாமே இருள் உலகத்தின் முகங்கள். இப்படித்தான் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம் நம்பிக்கைகளையும் கற்பனைகளையும் தாண்டி குரூரத்தின் உச்சகட்ட அம்சத்தையே குணமாகக்கொண்டு சதாகாலமும் இயங்குகிற இருள் உலகத்தின் இன்னொரு பக்கத்தை இந்த நாவலில் ஜெயமோகன் தீட்டிக்காட்டியுள்ளார். - பாவண்ணன் [3]
மிகவும் குரூரமான எழுத்து முறை என்பதாயும் இல்லாத ஒரு உலகத்தை எழுத்தாளர் கற்பனையில் கொண்டு வந்துள்ளார் என்றும் வைக்கப்பட்டிருந்தன. ஏழாம் உலகம் கற்பனை உலகமல்ல நாம் அறிந்திராத அறிய விரும்பாத அசட்டையாய் இருந்துவிட்ட உலகம். - சுமதி ரூபன் [4]
ஏழாம் உலகத்தில் அடித்து நொறுக்கப்பட்டு, முடக்கப்பட்ட காயங்களுடன், பேசா மடந்தைகளாக சமூகத்தின் அடித் தட்டிற்கும் கீழே -மனிதர்களாகவே பாவிக்கப்படாத - பாவப்பட்டவர்களாக - தன் மீதே கூட தான் உரிமை கொண்டாட முடியாத - அவல மனிதர்களிடையே வாழ்ந்த வலியை உணர முடிந்தது. இதில் கொடுமையின் உச்சம் அவர்களைச் சுற்றியிருக்கும் வியாபாரிகள் செய்யும் குரூரங்கள் கூட இல்லை. இந்தக் குரூரத்திற்குப் பலியாகும் இம்மனிதர்கள் - அவர்களது கதியே அதுதான் என்று ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை தொக்கி நிற்கும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடத்தி வருவதுதான். அவர்களது மனதில் வன்மம் என்ற ஒரு உணர்வே இல்லாததுபோல் மரத்துப்போய் இருப்பதுதான் நெஞ்சை அறுக்கிறது. - வற்றாயிருப்பு சுந்தர் [5].

No comments:

Post a Comment