Thursday, July 24, 2014

வீரக்குமார் விமர்சனம்

ஏழாம் உலகம் - நாவல் பற்றி....

துயரங்களின் அணிவகுப்பு

ஒரு முன் குறிப்பு : இது நான் கடவுள்” திரைப்படம் வெளிவருவதற்க்குமுன்னால் எழுதப்பட்டது.

இந்த நாவலின் இறுதி அத்தியாயத்தைப் படித்து முடித்து விட்டு இரவுபதினொரு மணிவாக்கில் படுக்கைக்குச் சென்று படுத்தபோது என் மனமும் உடலும் ஒரு சேர நடுங்கிக் கொண்டிருந்தது. நான் எனக்குள் ஏதோ முனகிக் கொண்டும் அனத்திக் கொண்டுமிருந்தேன். அருகில் படுத்திருந்த என் மனைவி என்னை எதேச்சையாக கட்டியணைக்க என் உடல் நடுங்குவது கண்டு 'என்னங்க என்னாச்சு?' என்றாள். நான் தொடர்ந்து சில விசித்திரமான ஒலிகளை எழுப்பியபடி இருக்க அவள் மேலும் என்னை இறுக அணைக்க முற்பட்டாள். சற்று முன்பு முத்தம்மையைக் கூனன் அணையும் அந்த பயங்கர சூழ்நிலையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நான் ஆவேசமான மனஎழுச்சியுடன் விலகிஅவளைத் தள்ளிவிட்டு சட்டென்று எழுந்து அமர்ந்தேன். அது நாவலின் பாதிப்பு என்று என் மனைவிக்குத் தெரிந்த பிற்பாடுதான் ஆசுவாசம் அடைந்தாள். இவ்விதம் எனக்குள் ஆழ்ந்த அதிர்வைசலனத்தை ஏற்படுத்திய இந்த நாவலைப் பற்றி யாருடனாவது பகிர்ந்து கொள்ளும் போது மட்டுமே என் மனநிலை சமநிலையாகும் என்பதால் உங்களுடன் பகிந்து கொள்கிறேன்.
இதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று நினைத்தாலே மிகுந்த மனச்சோர்வுக்கு உள்ளாகிறேன். காரணம் ஏழாம் உலகத்தின் உக்கிரம் அப்படி.

இந்த நாவலை போத்திவேலுப் பண்டாரம் எனும் ஈனத்தொழில் புரியும் மனிதனைப் பற்றிய ஒரு வாழ்கைப் பதிவு என்று கொள்ளலாம். அல்லது மனித உடலுடன் நடமாடும் சில கொடூர மிருகங்களின் கைகளில் சிக்கிய,ஊனமுற்ற குறைப்பிறவிகள்பெரு நோயாளிகள் சொல்லெனாத் துயரங்களை அனுபவித்தபடி  தங்கள் உயிரைத் தாங்கிக் கொண்டு அந்த மிருகங்களின் தொழிலுக்கு  இரையாகிப் பின் மடிந்தொழியும்  நிஜத்தைச் சீழ் வடியஇரத்தம் கசியபீ வாடையடிக்கச் சொல்லும் இருண்ட தொகுப்பு என்றும் கொள்ளலாம்.

போத்திவேலுப் பண்டாரம் எனும் மனிதன் ஒரு கொடூரமான ஈனத் தொழிலைக் கூட ஆத்ம சுத்தியுடனும் அதற்கே உரிய நேர்மையுடனும் பல இடர்பாடுகளை எதிர்கொண்டு செய்யும் விதத்தையும்அவருடைய இயல்பான குடும்ப சூழ்நிலைமகளின் திருமணம்குழந்தைகள் மேல்உள்ள பரிவுதனிப்பட்ட ஆசாபாசங்கள்போன்ற வாழ்வியல் எதார்த்தங்களையும்அந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குறைப்பிறவிகளின் துன்பத்தையும்  உடல் வேதனைகளையும்மனவேதனைகளையும் அவர்களின் சந்தோஷங்களையும் காதல்காமம்,பாசம்நம்பிக்கைகள் போன்ற உணர்வுகளையும்  முதலாளி விசுவாசம்,ஜாதிய உணர்வுமதஈடுபாடு போன்ற குணங்களையும் மற்றும் பல அமானுஷ்ய சூழ்நிலைகளையும் தனக்கே உரிய எழுத்து வன்மையால் காட்சிச் சித்திரமாக்கி நம் மனக்கண்முன் உலவ விடுகிறார் ஜெயமோகன்.

எந்த ஒரு கொடூரமான மனிதனுக்குள்ளும் இறை எனும் மாபெரும் ஆற்றல் பொதித்து வைத்திருக்கின்ற  அறம் சார்ந்த அடிப்படைகளும் அவனுடைய சமூகம் அவனுக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற ஒழுக்க விதிகளும்  மனசாட்சியின் ரூபமாக இருந்து அவனுடைய செயல்களைஅளவிடும் மாபெரும் உண்மையை ஒரு நட்சத்திர மிணுங்களில் உணர்த்திஅந்த மிணுங்களைப்  பண்டாரம் சந்திக்கத் திராணியல்லாமல்புறக்கணிப்பதில் கடவுளுக்கும் மிருகத்துக்கும் இடைப்பட்ட மனித மனத்தின் நிலையைத் துல்லியமாக்குகிறார்  ஜெயமோகன்.

முத்தம்மையின் பிரசவத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது அவர்களின் உடல் வேதனையும் மனவேதனையும். டெம்போவில் உயிருள்ள உடல்கள் அடுக்கப் படும்போது அவர்களின் பயணம் எப்படியிருக்கும் என்று நினைத்து ஒரு கணம் கண் மூடினேன். லாரிகளில் ஏற்றி மாடுகளையும் எருமைகளையும் கேரளாவுக்கு அடிக்கக் கொண்டு செல்லும் காட்சியைக் கண்டு, அவைகளின் வலியை எண்ணிக் கண்ணீர் விட்டு அழுதவன் நான். அப்படிப்பட்ட எனக்கு இந்த நாவலில் மனிதர்களே அப்படிக் கொண்டு செல்லப்படும் போது எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்.
முத்தம்மையை அவளுடைய பிறப்புறுப்பில் இருந்து வழியும் இரத்தத்தைக் கூட பொருட்படுத்தாமல் 'வயறு வலுக்குதேஎன்ற அவளின் கதறலைக் கேலி செய்துவிட்டுக் கைகால்களைக் கட்டி மலைமேல் ஏற்றும் போது துவங்கியது என் அதிர்வு. அவள் குழந்தையை வெயிலில் போட்டுஅதன் மேல் தண்ணீர் ஊற்றி அதைச் சந்தைப்படுத்தும் போதும்மனிதமிருகங்கள் உடல் வேட்கையைத் தனிக்க இரண்டு கால்களும் இல்லாத எருக்கை தூக்கிக் கொண்டு சென்று பயன்படுத்தும் போதும்அதனால் அவள் முதுகெலும்பு மேலும் பாதிப்படையும் போதும்தொரப்பன் குழந்தையைத் தொட்டுப்பார்க்கத் தேடியலைந்து வழிமாறிவிடஅதனால் அவனுக்கு விழும் அடியிருக்கிறதே... அந்த ஆரம்ப அத்தியாயங்களிலேயே புரிந்து போயிற்று எனக்கு நாவலின் வீரியம் என்னவென்று.

உடல்வேதனை மட்டுமா அவர்களுக்கு?  ஒவ்வொரு முறையும் குழந்தை பெற்று சிறிது நாள் அதைச் சீராட்டிபாலூட்டிபேர் வைத்துதொட்டு ரசித்துமுகர்ந்துஉருகி வளர்த்த குழந்தையைச் சரியான கால இடைவெளி விட்டுப் பிரித்தெடுத்து விற்றுவிட்டுமீண்டும் மீண்டும் அவளை வேறு ஒரு குறைப்பிறவியோடு அணையவிட்டுக் குறையுருவைப் பெற்றெடுக்கவைத்தபடியே இருக்கும் போது, இவள் போன்ற முத்தம்மைகளை நினைத்துஅயர்ச்சி கொள்வது தவிர வேறென்ன செய்து விட  முடியும் நம்மால்.

நமக்கெல்லாம் மனமுண்டு. அதற்கும்  வேதனைகள் உண்டு. ஆனால் அந்த பரிதாபத்துக்குரியவர்களின் வேதனைகளை உணர்ந்தால் நாமெல்லாம் அனுபவிப்பது வேதனையல்ல,வேதனை எனும் பெயரில் நாமாகச் செய்து கொள்ளும் கற்பிதங்கள் என்று புரிபடும்.

இவர்களுக்கும் சில   சந்தோஷங்கள் உண்டு.  ஆனால் அது நிரந்திரமானது அல்ல  என்பதுதான் கொடுமையே.   இருப்பினும்  அவர்களுடையசந்தோஷங்களும் கொண்டாடப்படுகின்றன. 'வயசுமுத்திப்  பளுத்தாலும் செரி,  சீக்கு  வந்து சீறலுஞ்சாலும் செரிஆம்பளை கண்ணுல ஆச எறங்காதுஎன்று உடல் தேவைகளின்  எதார்த்தங்கள் இங்கு அழகாகக் கலையாக்கப்படுகின்றன.
                      
'மொகம்சுண்டுநெஞ்சுவயிறுகாலுஏன் காலில் உள்ள மண்ணைப் பாக்கப்பிடாதோஎல்லாம் அளகுதான். பாக்கிற மாதிரி பாக்கணும்என்று அவர்களின் ரசனைக்கும் உயிர் கொடுக்கப்படுகிறது. எருக்கின் ஒருதலைக் காதலும்அகமது குட்டியின் கண்ணீர் காதலும் இதில் கவனிக்கப்பட வேண்டிய உணர்வுகள். தனது ஒவ்வொரு பேச்சையும் சந்தோஷச் சிதறலாக வெளிப்படுத்தும் குய்யனின் நக்கல்கூட அவனுக்கு மட்டுமல்ல அவனைச் சுற்றியுள்ளவர்களுக்கும் சந்தோஷத்தையே தருகிறது.  

இங்கு குழந்தைப் பாசம் அளவிட முடியாதபடிக்கு  முத்தம்மையின் மூலம்மெய்ப்பிக்கப்படுகிறது. குழந்தைக்கு கெடுதல் என்று தெரியவந்தவுடன் பீடி பற்றவைக்க மறுக்கிறாள்.  மயக்கமான நிலையிலும்   கூடத் தன்  குழந்தையை இருக   கட்டி அணைத்துக் கொள்கிறாள்.   குழந்தையைக்  கடிக்க வரும்   நாயின் குரல்வளையைக் கடித்துத் துப்புகிறாள்.
'முலை கடிக்கும்பம்.  கடிச்சா வலிக்கும் பாத்துக்கொ அப்பம் அது நம்மகிட்ட என்னமோ சொல்லுத   மாதிரி  இருக்கும்'  என்ற உருகலில் அவள் பாசமும் சந்தோஷமும் ஒருசேரத்ததும்பி வழிகிறது.

இந்த நாவலில் கூர்ந்து கவனித்து உள்வாங்கி ரசிக்க பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் சில....

  • பேப்பரை படித்து யாரும் புரட்சிவாதி ஆகிறது இல்லை. பேப்பர் ஒரு மாதிரி கஞ்சா தான்.
  • மனுசன மனுசன் விக்காம முதலாளித்துவம் உண்டா மக்கா?
  • சேர்ந்து சிரிக்கிற சந்தோஷம் பத்து ரூபாய்னாக்கா சேர்ந்து அழுவுற சந்தோஷம் நூறு ரூபாய்க்கு சமம். அதெல்லாம் அறிஞ்சவன் அறிவான்.
  • நிரபராதிக்கு சர்க்கார் பயம் இல்லைபோலீசு பயம் இல்லைசாமி பயமும் இல்லை.
  •  மாங்காண்டி சாமியின் பாடல்கள்.
  •  'பனிவிழும் மலர் வனம்... பாடல்.
என்று சொல்லிக் கொண்டே போகலாம். பிறகு முழு நாவலையும் மீண்டும் நகல் எடுக்கும்படி ஆகிவிடும். மேலே குறிப்பிட்ட விஷயங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும்  குறைந்தது இரண்டு பக்கங்களாவது விவரித்து அலசும் அளவில் தான் அதன் அழகியலும் எழுத்தாக்கமும் அமைந்துள்ளது. 

நாவலின் போக்கில்  நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு துயரத்துக்கும் நம்மைத் தயார்படுத்தி,  அதனுடன் கலந்து மெல்ல ஆசுவாசம் அடையும் போது சட்டென்று  நம்மை விதிர்விதிர்க்க வைக்கவே அடுத்த துயரம் தயாராகக் காத்திருக்கின்றது.

அவ்விதம் நான் விதிர்விதிர்த்த துயரங்கள்....
  •  யாருமற்ற இரவில், பனியின் வெடவெடப்பில் நிராதரவாய்,பிரசவ வலியில் துடித்துப்  பிள்ளை பெறும் போது முத்தம்மை என்னை முதன்முறையாக அதிரவைத்தாள்.

  • பிச்சைக்கு மட்டுமின்றி சில மிருகங்களின் இச்சைக்கும் ஈடுகொடுக்கும் அந்த        இரண்டு கால்களும் இல்லாத எருக்கு இரண்டாவது முறையாக என்னை அதிரவைத்தாள்.

  • வெய்யிலின் வெட்கையை அறியாத உயிரினங்கள் அனேகமாக உலகில் இல்லை. சுட்டெரிக்கும் சூடுக்கு ஈடுகொடுக்க முடியாமல் உயிரையே விட்ட கதைகள் நம்மிடம் உண்டு. ஆனால் ஒரு சிசுவுக்கு ஏற்படும் அந்த வேதனையை எழுத்தில் படித்துணர்ந்த போது மூன்றாம் முறையாக அதிர்ந்தேன்.

  • நாவலில் இன்னொரு இடம் வருகிறது. பண்டாரத்தை ஒருவன் அழைத்துச் சென்று விற்பனைக்காக சில உருப்படிகளைக் காட்டுவான். நல்ல இளம்பிஞ்சுக் குழந்தைகளைத் திருடி,கண்களைப் பிடுங்கி உறுப்புகளைச் சிதைத்து ஆசிட் ஊற்றி முகத்தைக் கருக்கி மருந்து கொடுத்து மயக்கமாக்கி படுக்க வைத்திருப்பார்கள் பாருங்கள். அய்யோ... அரண்டுவிட்டேன். என் குழந்தையே அங்கு படுத்திருப்பதாய் உணர்ந்தேன். நெஞ்சு துடிப்பது நின்று போனது அக்கணம்.

  •  எல்லாவற்றிற்கும் மேல் மொத்த உயிரையும் உறிஞ்சி எடுப்பதைப்போல் இருந்தன இறுதி அத்தியாயம். கடைசியில் முத்தம்மையுடன் அணைய விடுவார்கள் பாருங்கள் ஒரு ஒற்றைவிரல் குருட்டுக் கூனனை... . 'ஆனா ஒண்ணு சொல்லுதேன் அக்காதொட்டா அப்பம் அறிஞ்சு போடுவேன். எனக்க பிள்ளையை தொட்டா அப்பம் அறிஞ்சு போடுவேன்என்று முத்தம்மை முன்பு ஒரு முறை கூறியது அப்போது ஞாபகம் வந்தது.  அய்யோ அது மகா பயங்கரமடா சாமி.



இனியும் ஒருமுறை முத்தம்மையின் கடைசி அணைவை நினைக்க எனக்கு மனதிடமும் போதாது. கற்பனை என்பது பலர் நினைப்பது போல் நடக்காத ஒன்றைஇல்லாத ஒன்றை உருவகப்படுத்துவதல்ல. நமக்கு தெரியாமல், நாம் அறியாமல் நம்மைச் சுற்றி நிகழ்பவைகளை உள்ளது உள்ளபடி உணர வைக்கும் திறமையே. அவ்விதத்தில் ஜெயமோகனின் திறமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

அன்புடன்,
வீரா


சொல்வதற்க்கு இன்னும் ஒன்று....

உருப்படிகளைத் தவிர எத்தனையோ பாத்திரங்கள் இந்நாவலில் படைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றைப் பற்றியும் அதன் குணாதிசயங்கள்அவற்றின் குறியீட்டு நோக்கங்கள் சார்ந்து நிறைய விஷயங்கள் எழுத முடியும். ஆனால் இதில் ஒரு பாத்திரத்தை அதன் நோக்கம் சார்ந்து குறிப்பிட்டேயாக வேண்டும். அது பகடை எனும் பிணம் அப்புறப்படுத்தும் தொழிலாளியின் பாத்திரம். 500 ரூபாய்க்கு கூட கொலை செய்யத் தயாராக இருக்கும் பாத்திரங்களுக்கு மத்தியிலும் 'பாவம்,பெரும்பாவம்என்று 100ரூபாயை தட்டி விட்டு, தவறு செய்யத் துணியாத நேர்மை மனம் அவருக்கு. அவர் பொருட்டு இங்கு எல்லோர்க்கும் பெய்யும் மழை.




புத்தகம்       : ஏழாம் உலகம்
ஆசிரியர்    :  ஜெயமோகன்
வெளியீடு : யுனைடெட் ரைட்டர்ஸ், தமிழினி, கிழக்குப்பதிப்பகம்.
http://veerawritings.blogspot.com/2011/04/blog-post_18.html


No comments:

Post a Comment